மளிகைப்பொருள்கள், ஆடைகள், தயாரான உணவு எனப் பலவற்றையும் இன்று செயலிகள் அல்லது இணையம் வழி வாங்கி வீட்டிற்கு விநியோகம் செய்ய முடிகிறது.
இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற அவசரமற்ற, குறுகியகால நோய்களுக்கு மருத்துவரைக் காணொளி மூலம் தொடர்புகொண்டு மருந்துகளை விநியோகம் செய்துகொள்ளும் வசதிகூட வந்துவிட்டது.
அதுபோல் மனநலம் சார்ந்த அம்சங்களுக்கும் இன்று பல செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மனநிலைக் கண்காணிப்பு (mood tracker), உறக்கமுறை (sleep cycle) கண்காணிப்பு, தியானம் (meditation), மனநிலை பற்றி எழுதுதல் (journaling), மனப்பதற்றத்தை நீக்குவது போன்றவற்றைச் சுயமாகச் செய்ய இச்செயலிகள் உதவுகின்றன.
மனநல இன்னல்களைச் சுயமாக எதிர்கொள்ளாமல் மற்றவர்களின் உதவியை நாட விரும்புவோருக்கும் செயலிகள் உண்டு.
மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், நிபுணர்கள் போன்றவர்களைத் தொடர்புகொண்டு பேசுவதற்குச் செயலிகள் இருக்கின்றன.
வல்லுநர்களை நாடாமல், சமூக ஆதரவை விரும்பும் மக்களுக்கேற்ற செயலிகளும் இருக்கின்றன.
தங்களைப் போலவே மனநல இன்னல்களைச் சந்திக்கும் சக மனிதர்களோடு குறுஞ்செய்தி குழுக்களில் சேர்ந்து, தன் அனுபவங்களைப் பகிர்ந்து கலந்தாலோசிக்கலாம்.
மேலும், அடையாளங்களைத் தெரிவித்துத் தங்கள் மனநலப் போராட்டங்களைப் பற்றி பேசத் தயங்குபவர்களுக்கு, அநாமதேயமாக இருக்கவும் சில செயலிகளில் அனுமதி உண்டு.
அண்மைய தொழில்நுட்ப வளர்ச்சியின் வரிசையில் ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்கும் செயற்கை நுண்ணறிவு கொண்ட செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வெவ்வேறு பயன்கள் கொண்டுள்ள செயலிகளிலிருந்து தங்களுக்கு ஏற்ற செயலிகளைத் தேர்ந்தெடுத்து மக்கள் பயன்படுத்தலாம்.
மனநல ஆரோக்கியத்திற்கு உதவி பெறத் தயங்குவோருக்கு இவ்வாறான செயலிகள் நல்ல முதல் படியாக அமையலாம் என்று மனநல ஆலோசகர் பிரியநிஷா நூருல்லா கூறினார்.
தங்களிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மனநிலை பற்றி எழுதுவது, தியானம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடச் சில மனநல ஆலோசகர்களே செயலிகளைப் பரிந்துரைப்பதாகவும் சொன்னார்.
ஆனால் சுயமாகச் செயலிகளைத் தேர்ந்தெடுக்கும்போது அச்செயலிகள் நம்பகமானதாக, மனநலம் பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கின்றனவா என்பதை நன்கு அறிந்து பயன்படுத்துவது நல்லது என்றார்.
இணையத்தளத்தில் செயலியைப் பற்றி தேடினால் அது யாரால், எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது போன்ற தகவல்களைச் சுலபமாக பெறலாம்.
அத்தகைய தகவல்களைக் கண்டெடுக்கக் கடினமாக இருந்தால், அச்செயலியைத் தவிர்ப்பதே நல்லது என்று கூறினார் பிரியநிஷா.
தன் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிந்து, செயலிகள் பயன்படுத்தி தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பதில் தவறு இல்லை.
ஆனால் பயன்படுத்திய சிறிது காலத்திற்கு பிறகு மனநலத்தில் முன்னேற்றம் தெரியாவிட்டால் அது மேலும் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்றார் பிரியநிஷா.
ஆக மனநல ஆரோக்கியத்திற்கு முழுமையாக செயலிகளையே நம்பி இருப்பதைத் தவிர்த்து, அவற்றைப் பகுத்தறிவோடு, பயனளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசித்தார்.
மனநிலை கண்காணிப்பு, தியானம் போன்ற செயலிகளைப் பயன்படுத்திய உளவியல் இளம்பட்டதாரி சுனந்தா, அவை மிக அடிப்படையான சேவைகளோடு நின்றுவிடுகின்றன என்றும் ஆழமான உதவி வழங்கக்கூடிய கருவிகள் செயலிகளில் இல்லாததால் அவற்றை இப்போது பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார்.
பல அடிப்படை சேவைகளை வழங்க மனநலச் செயலிகள் பேருதவியாக இருந்தாலும் சமாளிக்க இயலாத அளவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டால் மருத்துவரை நாடுவதே சிறப்பு.
azmina@sph.com.sg