தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனிதனால் இயக்கப்படும் மானுடவியல் சகாப்தம் - புதிய புவியியல் அத்தியாயம்

3 mins read
91ee6c4d-3dcc-4020-be2f-8099b2cf411c
கனடாவின் ஒன்டாரியோவில் மில்டனுக்கு அருகில் உள்ள க்ராஃபோர்ட் ஏரியின் வான்வழிக் காட்‌சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சிறிய, ஆழமான நீர்நிலையான க்ராஃபோர்ட் ஏரியில் படிந்துள்ள வண்டல், மனிதனால் இயக்கப்படும் ‘ஆந்த்ரோபொசின்’ (மானுடவியல் சகாப்தம்) எனும் புதிய புவியியல் அத்தியாயத்தில் பூமி நுழைந்துள்ளதற்குத் தெளிவான சான்றுகளை வழங்குகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நீர்நிலைகளிலும் பிற இடங்களிலும் படிந்துள்ள வண்டல் அடுக்குகள், மண், பவளப்பாறைகள் பனி மாதிரிகள் ஆகியவை காலப்போக்கில் மாறிவரும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பதிவு செய்ய உதவும்.

எனவே, விஞ்ஞானிகள் உலகெங்கிலும் உள்ள 12 இடங்களில் ஆராய்ச்சி மேற்கொண்ட நிலையில், டொரோண்டோவிற்கு அருகிலுள்ள க்ராஃபோர்ட் ஏரியை மேற்கோள் காட்டி, பூமி, ‘ஆந்த்ரோபோசீன்’ சகாப்தத்தை எட்டியுள்ளதை புவியியல் குறிப்பான்கள் மூலம் நிரூபிக்க முயன்று வருகின்றனர்.

உலகில் மனிதர்கள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதன் தொடக்கத்தைக் குறிக்கும் புவியியல் யுகமாக ‘ஆந்த்ரோபொசின்’ (Anthropocene), முன்மொழியப்படுகிறது. இந்த யுகம், 11,700 ஆண்டுகளுக்கு முன் ஹோலோசீன் (Holocene) யுகத்திற்குப் பின்பு தொடங்கிவிட்டதாக மானுடவியல் பணிக்குழு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

க்ராஃபோர்ட் ஏரியில் உள்ள வண்டல், திடீரென புவியியல் அடிப்படையில் மீளமுடியாத மாற்றத்தைக் காட்டியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மானுடவியல் பணிக்குழு உறுப்பினர்கள், புவியியல் விஞ்ஞானிகள், கல் அடுக்குகளை ஆராயும் அனைத்துலக ஆணையத்திடம் (International Commission on Stratigraphy) இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 1950களில் நடத்தப்பட்ட அணு ஆயுதச் சோதனையில் கிடைத்த புளூட்டோனியம், புதைபடிவ எரிபொருள், உர நுகர்வு அதிகரிப்பு, நில பயன்பாட்டில் ஆழமான மாற்றங்கள், விவசாயத்தால் ஏற்படும் பல்லுயிர் வீழ்ச்சி ஆகியவை இந்த ‘ஆந்த்ரோபொசீன்’ எனும் மானுடவியல் சகாப்தத்திற்கு மிகத் தெளிவான குறிப்பான்களை வழங்கியது’ என்று குறிப்பிடுகிறார் இக்குழுவை சேர்ந்த, பிரிட்டன் லெய்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் காலின் வாட்டர்ஸ்.

மேலும் அவர், க்ராஃபோர்ட் ஏரி வண்டல் மாதிரிகளில், புளூட்டோனியத்தோடு ‘மைக்ரோபிளாஸ்டிக்ஸ்’ எனப்படும் நுண்நெகிழி முதலியவை கண்டறியப்பட்டுள்ளன என்றார்.

மனித நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்ட, பூமியின் காலநிலை, சூழலியல் மாற்றத்தைக் காட்டும் இந்த ‘ஆந்த்ரோபொசீன் எனும் மானுடவியல் சகாப்தம்’ பூமியின் ஒரு புதிய அத்தியாயம். ஆனால் இந்த சகாப்தம் எப்போது தொடங்கியது என்பதை நிரூபிக்கும் சான்றுகள் குறித்து விஞ்ஞான சமூகத்திற்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே, இந்த ஆந்த்ரோபொசீன் சகாப்தம், உரிய புவியியல் சர்வதேச ஆணையத்தால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்கிறார் பேராசிரியர் வாட்டர்ஸ்.

பூமியின் உயிரியல் திடீரென்று மாறிவிட்டதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் வாட்டர்ஸ், இனி மீண்டும் பழைய நிலைக்கு பூமி திரும்ப முடியாது” என்றும் கூறினார்.

‘கிராஃபோர்ட் ஏரியில் உள்ள பதிவு, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஏற்பட்ட புவியியல் மாற்றங்களின் பிரதிநிதி’ என்று கூறினார் கனடாவின் ப்ரோக் பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் ஃபிரான்சின் மெக்கார்த்தி.

க்ராஃபோர்ட் ஏரியின் படிவுகள் கடந்த சில பத்தாண்டுகளில் வெளிப்பட்ட துரிதமான மாற்றங்களின் பதிவை வழங்கியுள்ளன. புதைபடிவ எரிபொருட்களின் சாம்பல் தடயங்கள் உட்பட வண்டல்களின் கலவையில் ஏற்படும் பல மாற்றங்கள் அமில மழை, புவி வெப்பமடைதல், பல்லுயிர் இழப்பு உள்ளிட்ட பல்வேறு மனித தாக்கங்களைப் பிரதிபலிக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்