நண்பகல் உணவிற்குப்பின் ஓய்வுநேரத்தில் அண்ணனோடு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென உரத்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டுப் போனார் திரு ஸ்ரீநிவாசன் குடியரசு, 35.
உடனே சத்தம் வந்த இடத்திற்கு விரைந்த திரு குடியரசு, அங்கே ஒரு கால்வாய்க்குள் ஒரு வாகனம் சரிந்திருப்பதும் அம்மாவும் மகனும் செய்வதறியாது நின்றுகொண்டிருப்பதும் இன்னும் தன் மனக்கண்முன் நிற்பதாக நினைவுகூர்ந்தார்.
அண்மையில் புக்கிட் தீமா கால்வாயில் வேறொரு வாகனத்தோடு மோதியதால் கால்வாயில் தங்களின் வாகனத்தோடு விழுந்த அம்மாவையும் மகனையும் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டினார் திரு குடியரசு. சிங்கப்பூரில் பத்தாண்டுகளுக்கு மேலாக இருக்கும் இவர், கால்வாய்க்குள் இறங்கியது இதுவே முதல் முறை.
“கால்வாயில் நீர் வேகமாகப் பாய்ந்து ஓடுவது வழக்கமாக இருந்தாலும் அன்று நான் கீழே இறங்கிய போது நீர் மெதுவாக ஓடியதால் எனக்குப் பயம் சற்று குறைந்தது,” என்றார் அவர்.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடியரசு, தற்போது கட்டுமானத் துறையில் மேற்பார்வையாளராகவும் ஓட்டுநராகவும் பணிபுரிகிறார்.
திரு குடியரசை நம்பி அவரது தாயார், மனைவி, இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவிலான ஒரு செயலில் ஈடுபட்டிருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் இவர்.
தரையிலிருந்து கால்வாய்க்குச் செல்ல மூன்று மீட்டர் உயரம் கொண்ட சுவரிலிருந்து குதிக்க வேண்டும். யாருடைய உதவியையும் பெறாமல் உதவ முன் வந்த திரு குடியரசு, எதனைப் பற்றியும் சிந்திக்காமல் கால்வாய்க்குள் குதித்துவிட்டார்.
விழுந்த இடம் தரையாக இருந்ததால் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். சிறுவன் சம்பவத்தினால் உறைந்து போய் நின்றதைக் கண்ட திரு குடியரசு, அவனை அணைத்துத் தூக்கிக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
தமது சொந்த ஊரில் ஆழமான கிணற்றில் குதித்த அனுபவம் இவருக்கு இருந்தாலும் முதன்முறையாக பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற தன்னலமின்றி கால்வாய்க்குள் குதிக்க முன்வந்த திரு குடியரசுக்கு அப்போது அச்சம் தான் ஏற்பட்டது.
குடியரசு, சம்பவ இடத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அங்கு இதுபோன்ற விபத்துகள் பலமுறை நேர்ந்துள்ளது என்றும் இவர் குறிப்பிட்டார்.
கால்வாய் அருகில் வழிப்போக்கர்கள் பலர் சூழத் தொடங்கியபோது, திரு குடியரசின் சக ஊழியர்களில் சிலர் ஏணியை எடுத்து வந்தனர். சிறுவனைத் தூக்கியவாறு ஏணியில் ஏறி குடியரசு மேலே வந்தார். பின்னர் சிறுவனின் தாயாரும் ஏணியில் ஏறி மேலே வந்தார்.
“சிறுவனுக்கு நான் யார் என்றே தெரியாது. நான் அவனைத் தூக்கியபோது அவன் என்னை நம்பி வந்தான். எப்படியோ சிக்கலிலிருந்து தப்பிவிட்டோம் என்ற நிம்மதி சிறுவனின் முகத்தில் இருந்ததை நான் கண்டேன். அவன் தாயார் எனக்கு நன்றி கூறியபோது எனக்கு சற்று பெருமையாக இருந்தது.” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு குடியரசு.
சம்பவத்திற்குப் பிறகு தனக்கு பாராட்டுகள் குவிந்ததாகத் திரு குடியரசு குறிப்பிட்டார்.
‘இட்ஸ் ரெய்னிங் ரேயின்கோட்ஸ்’ எனும் ஒரு லாபநோக்கற்ற அமைப்பு திரு குடியரசின் துணிச்சலைப் போற்றும்விதமாக அவருக்கு இலவச பீட்சாவை வழங்கியது. சிங்கப்பூர் காவல்துறையாலும் பாராட்டப்பட்ட திரு குடியரசு, அதனிடம் சம்பவ இடத்தில் கண்காணிப்பு படக்கருவிகளைப் பொருத்துமாறு பரிந்துரைத்தார்.
நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும் என்பது திரு குடியரசின் வேண்டுகோள்.