மாற்றம் ஏற்பட ரௌத்திரம் பழகு: எழுத்தாளர் சுமதி

மாற்றம் ஏற்பட ரௌத்திரம் பழகு: எழுத்தாளர் சுமதி

3 mins read
d403de0c-cf94-4dcb-9cc2-48df628ebc26
‘ரௌத்திரம் பழகு’ நூலாசிரியரும் வழக்கறிஞருமான சுமதி.  - படங்கள்: ஃபேஸ்புக்/தமிழ் நூலகச் சேவைகள்
multi-img1 of 2

அஜ்மினா பானு

ஆண்டுதோறும் நடக்கும் தேசிய நூலக வாரியத்தின் ‘ரீட்! ஃபெஸ்ட்’ எனும் வாசிப்புத் திருவிழா நிகழ்ச்சிகளின் வரிசையில், ‘வழக்கறிஞர் சுமதியுடன், நீதிமன்ற வழக்குகள் தரும் வாழ்க்கைப் பாடங்கள்’ என்ற கலந்துரையாடல் ஜூலை 15ஆம் தேதி நடைபெற்றது.

கலந்துரையாடலில் சிங்கப்பூர் வழக்கறிஞரும் கலைஞருமான வடிவழகன் கலந்துகொண்டார். உள்ளூர்க் கலைஞர் ஜெயசுதா நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான சுமதி எழுதிய ‘ரௌத்திரம் பழகு’ நூலில் வரும் அவர் சந்தித்த வழக்குகள், அனுபவங்கள் பற்றியும் அவற்றின்மூலம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

‘பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்ற பாரதியாரின் வரிகளைச் சான்றாகக் கொண்டு ரௌத்திரம் பழகுவதின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார் திருவாட்டி சுமதி.

அநியாயம் நடக்கக்கூடிய இடங்களில் அறச்சீற்றம் இருக்க வேண்டும் என்று உத்வேகத்துடன் அவர் சொன்னார். அந்த நொடியில் எதிர்ப்பு ஏற்பட்டாலும் பிற்காலத்தில் அச்சீற்றத்திற்கான பயன் விளையலாம் என்றார் அவர்.

‘ரௌத்திரம் பழகு’ நூலில் பெண்களைப் பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பல சிக்கல்கள் பற்றியும் எழுதியிருந்த திருவாட்டி சுமதி, பெண்கள் ஆண்களையே சார்ந்து இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை மாறி, பெண்கள் தனித்துவமாக இருக்கலாம் என்ற எண்ணம் வரவேண்டும் என்றார்.

இவ்வாறான மனப்பான்மை ஆண்களால் மட்டும் திணிக்கப்படவில்லை என்றும் பெண்களும் அம்மனப்பான்மையை காலங்காலமாக உள்வாங்கி, ஆழ்மனத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்நிலை மாற இன்னும் அதிக விழிப்புணர்வு வேண்டும் என்ற திரு வடிவழகன், பெண்கள் தங்கள் உரிமைகளுக்கும் சுயமரியாதைக்கும் தொடர்ந்து துணிச்சலோடு போராட வேண்டும் என்றும் சொன்னார்.

இன்று பெண்கள் படிக்கவும் பணியில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், வீட்டுப் பொறுப்புகளில் எப்போது சமத்துவம் வருகிறதோ அன்றுதான் பெண்களாலும் ஆண்கள் சாதிக்கும் அளவிற்கு சாதிக்க இயலும் என்று திருவாட்டி சுமதி கூறினார்.

எடுத்துக்காட்டாக, ஒரு தந்தை வேலையிலிருந்து வீட்டிற்குத் தாமதமாக வந்தால், அவர் கடுமையாக உழைக்கிறார் என்று கொண்டாடும் பிள்ளைகள், ஏன் தாயார் தாமதமாக வந்தால் மட்டும் வருத்தப்படுகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இத்தகைய சமூகக் கோட்பாடுகள் தலைமுறை தலைமுறையாக கற்றுத்தரப்படுகின்றன என்றும் இப்படிப்பட்ட சமூகக் கட்டமைப்புகள் உடைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“விடுதலை என்பது நம் தலைமுறை விதையிட, அடுத்த தலைமுறை பழம் பறிக்கும் காலமாற்றம். விதையிட மறுப்பவர்கள் சுயநலவாதிகள். விதைக்க சம்மதம் எனில் அடுத்த தலைமுறைக்காவது விளையும். இல்லையேல், அதுவும் நம்மைப் போலவே அடிமைக்குழிக்குள் புதையும்,” என்று ‘ரௌத்திரம் பழகு’ புத்தகத்திலிருந்து மேற்கோள்கூறி ஆமோதித்தார் திரு வடிவழகன்.

மேலும், தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளி குறைய கலந்துரையாடல்கள் நடக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிர்த்தரப்பினரின் கருத்துகளுக்குச் செவிசாய்த்தால்தான் புரிந்துணர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது என்பது அவர்களின் கருத்து.

ரௌத்திரம் பழகுவது, பெண்ணியம் தவிர திரைப்படங்களின் செல்வாக்கு, சமூக ஊடகங்களின் நன்மை தீமைகள், பாலியல் குற்றங்கள் போன்றவை குறித்த தங்களது கருத்துகளையும் திருவாட்டி சுமதியும் திரு வடிவழகனும் பகிர்ந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி ‘வெற்றி கொடிகட்டி! ஒரு இசை கொண்டாட்டம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்று, தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழா 2023 நிறைவுற்றது.

azmina@sph.com.sg

குறிப்புச் சொற்கள்