‘தி நெக்லெக்டெட் டைமென்ஷன் (The Neglected Dimension)‘ எனும் புதிய கலைக் கண்காட்சி சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்திலுள்ள டலாம் தென்கிழக்காசியக் காட்சிக்கூடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கலைக் கண்காட்சி இவ்வாண்டு ஜூலை 7ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இக்கண்காட்சி நவீன, சமகால ஓவியர்கள், அரபு கையெழுத்துக்கலையை மறுபடைப்பு, மறுகற்பனை செய்யத் தொடங்கிய தருணங்களை ஆராய்கிறது.
அகமது சதாலி, ஏ.டி. பிரோஸ், ஹரயாதி சுவாதி, அரஹ்மயானி ஆகிய நான்கு ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வெவ்வேறு தலைமுறைகளையும் தனித்த முறைகளையும் கலைப்படைப்பாக்கத்தையும் அவர்கள் பிரதிநிதிக்கின்றனர்.
காணொளிப் படைப்பு, கண்ணாடி ஓவியம், அக்ரிலிக் ஒவியம் என வெவ்வேறு வடிவங்களில் இவர்களின் படைப்புகள் விளங்கின.
1970களிலிருந்து இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல நவீன கையெழுத்துக்கலைக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன.
ஆனால், ‘தி நெக்லெக்டெட் டைமென்ஷன்’ கண்காட்சியானது கையெழுத்துக்கலையை அணுகும் புதுமையான வழிகளை ஆராய்கின்றது.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு கலைப் படைப்பும் முறையான இஸ்லாமிய சமய உணர்வு, உண்மைத்தன்மை, நவீனத்துவம் ஆகியவற்றோடு உருவாக்கப்பட்டுள்ளது.
அடையாளத்தையும் வெவ்வேறு விழுமியங்களையும் கட்டமைக்கவும் வெளிப்படுத்தவும் துணைநிற்கின்றன இந்தப் படைப்புகள்.
இக்கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
dhurga@sph.com.sg

