சலிப்புத் தட்டினால் என்ன...

3 mins read
85372171-b814-4a82-945a-a322971827f9
சலிப்புத் தட்டுவதிலும் பலன்கள் உண்டு என்கின்றனர் நிபுணர்கள். - படம்: நியூயார்க் டைம்ஸ்

வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை வந்தது. என் மகன்கள் இருவரும், “அம்மா, இன்று எங்கே போகிறோம்? என்ன செய்கிறோம்?” என்று கேட்டார்கள்.

அன்றைக்கு எதையும் திட்டமிடாத நான், “ஒன்றுமில்லை,” என்றேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பின்னர், தரையில் அமர்ந்தனர். அருகில் இருந்த செடிகளைப் பார்த்துவிட்டு, “செடிகளுக்குப் பெயர் வைப்போம்,” என்றனர்.

அரை மணி நேரமாகப் பேசினர். மூத்தவர் நிறம் அடிப்படையில் பெயரிடலாம் என்றார். உயரம் அடிப்படையில் பெயர் வைக்கலாம் என்றார் இளையவர். இறுதியில் அவர்கள் முடிவெடுக்க முடியாமல் வேறு விளையாட்டுக்குச் சென்றுவிட்டனர். ஆனால், அந்த அரை மணி நேரத்தில் அவர்களின் சிந்தனையாற்றலைப் பற்றி நான் மேலும் நன்கு அறிந்துகொண்டேன்.

சலிப்புத் தட்டாமல் இருப்பதற்காக பெற்றோர் தங்களின் பிள்ளைகளை விளையாட்டு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள், அல்லது பொழுதுபோக்குகளில் ஈடுபட வைக்கிறார்கள். நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்காக பெற்றோர் பல்வேறு கற்றல் நடவடிக்கைகளைத் தங்களின் குடும்ப நேரத்தில் சேர்க்கிறார்கள். 

இருப்பினும், இந்தத் திட்டமிடுதலை ஓர் ஓரங்கட்டிவிட்டு பிள்ளைகளுக்குச் சலிப்புத் தட்ட விடுவதில் தவறில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

நவீனயுகப் பெற்றோரின் வளர்ப்புமுறை தொடர்பில் 2018ஆம் ஆண்டு நியூ யார்க் டைம்சில் வெளிவந்த ஆய்வின்படி படிப்பு, வருமானம், இனம் எனப் பின்னணிகள் வேறுபட்டாலும் சலிப்புத் தட்டும்போது தங்களின் பிள்ளைகள் இணைப்பாட நடவடிக்கைகளில் சேர்க்கப்படவேண்டும் என்று பெற்றோர் கருத்து கூறியிருந்தனர்.

ஆனால் உண்மையில் சலிப்புத் தட்டுவது வழக்கமானது; இயல்பானது; ஆரோக்கியமானது என்று ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ள எரின் வெஸ்ட்கேட் குறிப்பிட்டுள்ளார்.

சலிப்புத் தட்டும் இடத்தில் மதிப்புமிக்க ஒரு கற்றல் வாய்ப்பு அடங்கியுள்ளது என்கிறார் இவர்.

புத்தாக்கச் சிந்தனை, பிரச்சினைக்குத் தீர்வு காணும் முனைப்பு ஆகியவற்றுடன் அர்த்தமுடைய நடவடிக்கைகளை நாடும் ஊக்கத்தைப் பிள்ளைகள் பெறுவர்.

சலிப்புத் தட்டுவது தொடர்பில் பெற்றோரும் பிள்ளைகளும் ஒருசில அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

தகவல் அறிய வாய்ப்பு

சலிப்புத் தட்டுவது என்பது ஓர் உணர்வு என்ற டாக்டர் வெஸ்ட்கேட், ‘இந்தத் தருணத்தில் நீ செய்வது ஒத்துவரவில்லை என்பதை உணர்த்துவதுதான் இந்தச் சலிப்புத் தட்டும் உணர்ச்சி’ என்றார்.

அதாவது, தற்போது செய்யும் ஒரு வேலை மிகச் சுலபமாகவோ கடினமாகவோ இருக்கலாம். அல்லது அது அர்த்தமற்றதாக இருக்கலாம்.

முதலில் தங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள பெற்றோர் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்கிறார் மனநல நிபுணர் டேன் சீகல். தனிமையை உணரும்போதோ பெற்றோர் கவனத்தை ஈர்க்கவோ பிள்ளைகள் தங்களுக்கு ‘போரடிப்பதாக’ கூறலாம்.

இத்தகைய தருணங்களில் பிள்ளைகளிடம் ‘துணை வேண்டுமா அல்லது ஆறுதல் வேண்டுமா’ என்று பெற்றோர் பிள்ளைகளிடம் கேட்கலாம் என்று அறிவுறுத்துகிறார் சமூகப் பணித் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள டாக்டர் கேட்டி ஹெர்லி.

சலிப்புத் தட்டுவதை உதவி கோரும் அறிகுறியாகக் கருதாமல் அது இயல்பான ஓர் உணர்வு என்பதைப் பிள்ளைகளிடத்தில் உணர்த்தலாம்.

மனநிறைவு தரவல்லது

மனநிறைவையும் உற்சாக உணர்வையும் தரக்கூடிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கும் வாய்ப்பைச் சலித்துத் தட்டும்போது பிள்ளைகள் பெறுவர். 

ஒரு தோட்டத்தில் பிள்ளைகளை விட்டுப் பாருங்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. பின்னர், பூச்சிகளை எண்ணுதல், பந்தை உதைத்தல், பூக்கள் பழங்களைக் கவனித்தல் என அவர்களே வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவர்.

இந்தச் சுதந்திரத்தைப் பெற்றோர் அளிக்காவிட்டால் இயற்கை, விளையாட்டு, கலை ஆகியவற்றை நேசிக்கும் குணம் தங்கள் பிள்ளைகளிடம் உண்டு என்பதைப் பெற்றோர் உணராமல் போகலாம்.

சலிப்புத் தட்டுவதில் தவறில்லை

பிள்ளைகளுக்குச் சலிப்புத் தட்டிவிடுமோ என்று பெற்றோர் அஞ்சுவதுண்டு. இதனால் வீட்டில் பூகம்பம் வெடிக்கலாம் என்றும் அவர்கள் எண்ணிவிடுகின்றனர். ஆனால் நேரத்தைச் சுதந்திரமாகக் கழிக்கும் வாய்ப்பைத் தருவது முக்கியம்.

சிறு பிள்ளைகளுக்குச் சலிப்புத் தட்டுவதைத் தவிர்க்க, பெற்றோர் தங்களின் பிள்ளைகளுடன் தரையில் அமர்ந்து விளையாட நினைக்கலாம். ஆனால், கற்பனை உலகுக்குள் பிள்ளைகள் அடியெடுத்து வைப்பதை இது கட்டுப்படுத்தலாம்.

‘வீட்டைச் சுற்றி நடந்தபடி என்ன விளையாடலாம் என மூன்று யோசனைகளுடன் வா’ என்று பிள்ளைகளிடம் சொல்லிப் பாருங்கள்.

சலிப்புத் தட்டிய உள்ளத்தில் நேர்மறைச் சிந்தனை துளிர்விடும்.

சலிப்புத் தட்டுவதைத் தவிர்க்கும் நோக்கில் கைப்பேசிகளையும் தொழில்நுட்பச் சாதனங்களையும் பெற்றோர் பிள்ளைகளின் கையில் திணிப்பதுண்டு. ஆனால், அதில் முயற்சியும் இல்லை, முன்னேற்றமும் இருக்காது என்கிறார் டாக்டர் வெஸ்ட்கேட்.

இனி, அடுத்த முறை கைப்பேசியைப் பிள்ளையிடம் நீட்டும்போது அதனால் என்ன பயன் என்று எண்ணிப் பார்ப்போம்.

செய்தி: நியூயார்க் டைம்ஸ்

குறிப்புச் சொற்கள்