சிங்கப்பூரின் 700 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் இரவு விழா

சிங்கப்பூரின் 700 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் இரவு விழா

2 mins read
cce51cad-3dde-44b4-8ce4-46f58f008279
சிங்கப்பூர் இரவு விழா - படம்: சிங்கப்பூர் இரவு விழா
Google News Preferred Icon

பொதுமக்கள் அடுத்த மாதம் வாட்டர்லூ சாலையில் அமைந்துள்ள கோவில்கள்,கலைக்கூடங்கள், சந்தைகள் என கண் கவரும் இடங்களைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை பெறலாம். சிங்கப்பூர் இரவு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் ஒன்றான இந்தச் சுற்றுலாவில் சிங்கப்பூரின் மரபுடைமைக் கதைகளை நினைவுகூரும் வகையில் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

பிராஸ் பாசா, பூகிஸ் ஆகிய இரண்டு இடங்களின் வரலாற்றில் கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாண்டின் விழா பழங்காலத்து சிங்கப்பூர் நினைவுகளுக்கு பொதுமக்களை அழைத்துச் செல்லவிருக்கிறது. பலதரப்பட்ட பங்குதாரர்கள், பங்காளிகள், கலைஞர்கள் ஆகியோர் கைகோர்த்து இவ்விரு இடங்களையும் ஒளியூட்டவுள்ளனர்.

2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்கப்பூர் இரவு விழா ஒவ்வோர் ஆண்டும் உள்ளூர், அனைத்துலகக் கலைஞர்களின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. பங்குதாரர்களும் கலைஞர்களும் சந்திக்கும் தலமாகவும் இது அமைகிறது.

தேசிய மரபுடைமைக் கழகம் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள் இந்தாண்டு ‘பெரிய துறைமுக நகரமான சிங்கப்பூர்’ என்ற கருப்பொருளில் இடம்பெறும்.

சிங்கப்பூர் இரவு விழாவின் இந்த 14வது பதிப்பு அடுத்த மாதம் 18ஆம் தேதியில் இருந்து 26 வரை நடைபெறும். பார்வையாளர்கள் சிங்கப்பூரின் 700 ஆண்டுகால வரலாற்றை காட்சிகள், உணவுகள், கதைகள் போன்றவற்றின் மூலம் எதிர்பார்க்கலாம்.

அனைத்து வயதினரையும் ஈர்க்கவுள்ள இவ்வாண்டின் இரவு விழாவில் குடும்பங்களுக்காகவும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான நிகழ்வுகள் சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகத்தில் நடைபெறும்.

விழாவுக்கான அனுமதி இலவசமாக இருந்தாலும் சில நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். விழா பற்றிய மேல் விவரங்களுக்கும் நுழைவுச்சீட்டுகள் வாங்குவதற்கும் பொதுமக்கள் http://go.gov.sg/sgnightfest இணையத் தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்