அன்பும் ஆதரவும் வழங்கும் அந்திமகாலப் பராமரிப்பு

மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்துவரும் சிங்கப்பூரில் கொடிய நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நோயைக் குணப்படுத்த இயலாத நிலையில் இருந்தாலும் அதனால் ஏற்படும் தாங்க முடியாத வலி, உடல் சார்ந்த துன்பங்கள் போன்றவற்றைத் தாங்கிக்கொண்டு ஒருவரின் இறுதிக்காலத்தை அமைதியாகவும் கண்ணியமானதாகவும் அமைத்துத் தர முயல்கிறது அந்திம காலப் பராமரிப்பு.

துணைவியின் அருகே உயிர் பிரிய வேண்டும்

நோய்கள் ஒன்றன்மேல் ஒன்றாகப் புரட்டிப் போட வீட்டில் தன் மனைவி அருகில் இருக்கும்போதே தன்னுயிர் பிரிய வேண்டும் என்று விரும்புகிறார் திரு நடேசன் சுப்பையா கோபால், 72.

தமது 56 வயதில் நீரிழிவு நோயாளியான இவர், 67 வயதில் இதயக்குழாய் அடைப்பிற்கும் சிகிச்சை பெற்றார். 70 வயதில் சிறுநீர்ப்பைப் புற்றுநோய் தாக்க, நிம்மதிப் பெருமூச்சுவிட ஒரு நொடியும் கிடைக்காத இவருக்கு 2021 டிசம்பரில் இன்னுமோர் இடி.

வலது நுரையீரலில் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்ட பிறகு திரு கோபாலின் வாழ்க்கை இருண்டது. முன்பின் மருத்துவமனைப் பக்கம் எட்டி பார்க்காத இவர் தற்போது சிகிச்சைக்காக அன்றாடம் மருத்துவமனைகளுக்கு அலைய வேண்டியிருப்பதாகக் கண்கலங்கியவாறே கூறினார்.

கீமோதெரபி, இம்மியூனோதெரபி சிகிச்சைகள் பலனிக்காமல் போக, இனி மேற்கொள்ள இருக்கும் கதிர்வீச்சு சிகிச்சையும் கைவிட்டுவிடும் என்று நம்பிக்கையிழந்து விம்மினார் திரு கோபால்.

திருமணமாகி 51 ஆண்டுகளான இவருக்கு மனைவிதான் எல்லாம். கணவரின் கவலைக்கிடமான சூழ்நிலையில் அவருக்குப் பக்கபலமாக இருந்து கண்ணும் கருத்துமாக அவரைப் பேணி வருகிறார் திருவாட்டி லட்சுமி, 72.

பல நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டது, சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை மேற்கொண்டது ஆகியவை திரு கோபாலின் நினைவுகளில் இன்னும் அலைமோதுகின்றன.

நான்கு பிள்ளைகள் இருக்கும் இவருக்கு ஐந்து பேரப்பிள்ளைகள் மகிழ்ச்சி அளிக்கின்றனர். குழந்தைகள்மீது அளவு கடந்த பாசமும் மனைவியின் அளவில்லா அன்பும் இவருக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

வாழ்க்கையைச் சாகசமாக எடுத்துக்கொள்ளும் திரு கோபால், தான் நேசிப்பவர்களையும் குடும்பத்தினரையும் விட்டுப் பிரிவதற்கு வேதனைப்படுகிறார்.

“என் மனைவியுடன் நிம்மதியாக வாழ்கிறேன். என் மனைவிக்கு நான் எத்தனை முறை நன்றி கூறினாலும் அது அவர் எனக்கு செய்யும் தியாகத்திற்கு ஈடில்லை. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் என் மூன்றாவது மகள் நான் இறப்பதற்குமுன் சிங்கப்பூருக்கு வந்து என்னைப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் என் கடைசி ஆசை,” என்று கூறியபோதே திரு கோபாலின் கண்கள் கலங்கின.

கடைசி ஆசை நிறைவேற வேண்டும்

நான்கு பிள்ளைகள் சிறுவயதில் இருக்கும்போதே கணவரை ஆஸ்துமா நோய்க்குப் பறிகொடுத்தது மட்டுமின்றி, சாலை விபத்தில் ஒரு மகனையும் பறிகொடுத்தார் திருவாட்டி பக்கிரிசாமி பார்வதி, 70. இந்நிலையில், கடந்த ஈராண்டுகளாக உடல்நலக் கோளாறுகளால் இவரால் தொடர்ந்து வேலைக்குப் போக முடியவில்லை.

மகள்கள் இருவரும் அவரை இல்லப் பணிப்பெண்ணின் உதவியோடு கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வீட்டில் தூங்கியவாறே தன்னை அறியாமல் இறக்க வேண்டும் என்று திருவாட்டி பார்வதி விரும்புகிறார்.

வாழ்க்கையில் பெரிய வருத்தங்கள் ஏதும் இல்லையென்றாலும் தமது கடைசி ஆசை நிறைவேற வேண்டும் என்பது இவரது விருப்பம்.

22 வயதாகும் இவரது செல்ல பேத்தி தற்போது வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கிறார். படிப்பை முடித்து சிங்கப்பூருக்குத் திரும்பி வர இன்னும் நான்கு ஆண்டுகளாகும். எப்படியாவது இறப்பதற்குமுன் தன் பேத்தியின் திருமணத்தைப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் இவரது கடைசி ஆசை.

ஒற்றைப் பெற்றோராக பிள்ளைகளைக் கரைசேர்த்த திருவாட்டி பார்வதியை உடல்நலக் கோளாறுகள் வாட்டுகின்றன. அடிக்கடி கால் வீங்கிப்போவதால் வலிபொறுக்க முடியாமல் சர்க்கரை நாற்காலியே கதி என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார் இவர்.

15 ஆண்டுகளுக்குமுன் திடீரென நடக்க முடியாமல் மூச்சுத் திணறலால் அவதியுற்ற திருவாட்டி பார்வதிக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. 20 ஆண்டுகளாக நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள இவர், அறுவை சிகிச்சைக்குப் பதிலாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெறப் பரிந்துரைக்கப்பட்டார்.

இதுவரை நான்கு முறை ஆஞ்சியோகிராம் அமர்வுகளுக்குச் சென்ற இவருக்கு சிகிச்சையின்போது நரம்பில் ஏற்றப்பட்ட சாயத்தின் பக்க விளைவினால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இன்னல்கள் ஒவ்வொன்றாக இவரை வாட்ட, வெறும் மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு உயிர்வாழத் தீர்மானித்துவிட்டார்.

டயாலிசிஸ் எனும் ரத்தச் சுத்திகரிப்புக்குச் செல்ல வேண்டியிருந்தாலும், கடைசிக் காலத்தில் அதனால் ஏற்படக்கூடும் வலியை தாங்குவதற்குப் பதிலாக இப்படியே விட்டுவிடலாம் என்ற மனப்போக்கில் திருவாட்டி பார்வதி தமது இறுதி நாள்களை ஓட்டி வருகிறார்.

சீரான தூக்கம் இல்லாமல் அன்றாடம் தனது நிலைமையை நினைத்து வருந்தும் இவருக்கு, பகல் நேரங்களில் செல்லும் ‘ஹசீஏ காங் லெ’ அந்திம காலப் பராமரிப்பு இல்லம் கைகொடுக்கிறது. வாரத்தில் இரண்டு நாள் காலையிலிருந்து பிற்பகல் வரை இல்லத்தில் களிக்கும் இவர், அங்கு செல்லும்போதெல்லாம் நிம்மதி அடைகிறார்.

ஆறு மாதங்களாக அந்த இல்லத்திற்குச் சென்றுவரும் திருவாட்டி பார்வதி, அங்கு பராமரிப்பாளர்களோடு விளையாட்டுகள் விளையாடுவது, தன்னைப் போன்ற பிற நோயாளிகளுடன் நேரத்தைச் செலவிடுவது, சிறு உடற்பயிற்சிகள் செய்வது போன்றவற்றில் இன்பம் காண்கிறார்.

மருத்துவ அடிப்படையிலான ஆதரவு

மருத்துவ சமூக சேவையாளர்

அந்திமகாலப் பராமரிப்பு பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களும், சமூக சேவையாளர்களும் நோயாளிகளின் இறுதி நாள்வரை பக்கபலமாக இருந்து அவர்களைக் கண்காணித்துக்கொள்கின்றனர். நோயாளிகளைப் பேணுவது கடினம் என்றாலும் கண்ணும் கருத்துமாக அவர்களைக் கவனிப்பதில் உறுதிகொள்கின்றனர்.

நோயாளியின் உடல்நிலை நாளுக்கு நாள் குன்ற, மருத்துவ ரீதியான சுமைகளும் அதிகரிக்கின்றன. இப்பிரிவில் அனுபவமிக்க மருத்துவ சமூக சேவையாளரான பிரபா டெக்னா மிட்டி தனது அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.

செங்காங் சமூக மருத்துவமனையில் பணிபுரியும் இவர் அந்திமகாலப் பராமரிப்பு பெறும் நோயாளிகளுக்குச் சமூக சேவையாளராக இருக்கிறார். ஒரு நாளுக்கு நான்கிலிருந்து எட்டு நோயாளிகளைச் சந்திக்கும் திருவாட்டி பிரபா உணர்வுரீதியாக மிகச் சவாலான பணியை மேற்கொள்கிறார்.

நோயாளிகளுக்கு மனஆதரவு வழங்குவதுமின்றி நோயாளியின் குடும்பத்தினருக்கும் வேராக நிற்கிறார். நோயாளிக்கு மட்டுமின்றி, குடும்பத்தினருக்கும் இந்த சூழல் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும்.

அதை முற்றிலும் முறியடிக்க முடியாமல் போனாலும் தக்க ஆதரவு அளிப்பது, இவரது தலையாய பொறுப்பாக உள்ளது. மரணத்தை எதிர்நோக்குவதும், இன்னும் சிறிதுகாலந்தான் உலகத்தில் இருக்கப் போகிறோம் என்று முன்கூட்டியே அறிந்துகொள்வதும் கடினமான ஒன்று.

தன்னால் முடிந்தவரை மனநல ஆலோசனை அளித்து நோயாளிகளின் கடைசி ஆசைகளை நிறைவேற்றி வருகிறார் திருவாட்டி பிரபா. பெரும்பாலான வயது முதிர்ந்த நோயாளிகள் இறப்பதற்கு அஞ்சுவதாகவும், இளவயது நோயாளிகள் தங்கள் குடும்பத்தினரைவிட்டுப் பிரிவதற்கு வருந்துவதாகவும் இவர் குறிப்பிட்டார்.

மருத்துவர்கள்

மருத்துவராகப் பணியாற்றுபவர்கள் துணிச்சலோடு நோயாளிகளைக் கையாள்வர் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், டாக்டர் கோமல் தேவனி (Komal Tewani) நேரம் கிடைக்கும்போது ஒதுக்குப்புறத்தில் நின்று நோயாளிகளின் கவலைக்கிடமான நிலையைக் கண்டு உடைந்து போகாத நாளே இல்லை.

அன்றாடம் 15 முதல் 20 நோயாளிகளைக் கவனித்து வரும் அவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் மூத்த நிபுணராகப் பணிபுரிகிறார்.

முதியவர்கள் அந்திம காலப் பராமரிப்பை நாடினாலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கருவைச் சுமக்கும் கருவுற்ற பெண்களும் இதை நாடும் நிலைமை வந்துவிட்டது.

குழந்தைப் பிறப்புக்கு முந்திய நிலையிலிருந்து, குழந்தைப் பிறப்புக்குப் பின்னரும், இறப்பு வரையிலும் இருக்கும் பிரிவை வழிநடத்தி வரும் டாக்டர் தேவனி, நோயாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.

கருவுக்கு ஏற்படும் பாதிப்பால் தாயின் உயிருக்கும் அபாயம் இருப்பதால் அவர்களின் இறுதி ஆசைகளை நிறைவேற்றுவது, குடும்பத்தினருடன் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றுக்கு இவர் தலைமை தாங்குகிறார்.

அதற்கு அப்பாற்பட்டு டாக்டர் கோமல் நோயாளிகள் எதிர்நோக்கும் மனம் சார்ந்த துக்கங்களையும் கையாள வேண்டியுள்ளது. நோயாளிகளின் குடும்பங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதிலளிக்கவும் வேண்டும்.

படுக்கையில் இருக்கும் நோயாளிகள், மூச்சுத்திணறல், உணவை விழுங்க சிரமம், வலியால் துடிக்கும் நோயாளிகள் போன்றவர்களைச் சந்திக்கும் டாக்டர் கோமல், அவர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொண்டு அவர்களின் தேவைகளை நன்கு பூர்த்தி செய்ய கடமைப்பட்டுள்ளார்.

உயிர் பிழைக்க முடியாமல் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் மட்டுமே அந்திமகாலப் பராமரிப்பை நாட வேண்டுமென்ற தவறான கருத்தை சுட்டிய மருத்துவப் பேராசிரியர் லலித் குமார் ராதா கிருஷ்ணா, நோயாளி எதிர்நோக்கும் அறிகுறிகளையும் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்துவதே அந்திம காலப் பராமரிப்பின் முழுமையான நோக்கம் என்றார்.

சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தின், ஆதரவு, அந்திமகாலப் பராமரிப்பு பிரிவின் மூத்த நிபுணரான இவர், நோயாளிகளைப் பேணிக்காத்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஊன்றுகோலாக நிற்க மருத்துவர்கள் அதிக அளவில் உழைக்க வேண்டும் என்றார்

அந்திமகாலப் பராமரிப்பு மருத்துவர்கள், வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்ட நோயாளிகளின் அச்சம், குழப்பம், துயரம் ஆகியவற்றைச் சமாளிக்கவும் வேண்டும்.

நோயாளிகளை வீட்டில் பார்த்துக்கொள்ளும் பராமரிப்பாளர்களும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். நேரம், செலவு, உணர்ச்சிகள் என்னும் வட்டத்துக்குள் சிக்கி, சவால்களை எதிர்நோக்கும் பராமரிப்பாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்றார் பேராசிரியர் லலித்.

நோயாளிகளுக்கு உதவுவதில் மனநிறைவு

பத்தாண்டுகளுக்கு மேலாகத் தொண்டூழியப் பணியில் ஈடுபட்டுவரும் 32 வயது ரேணுகா ரவீந்திரன், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மரண பிடியில் சிக்கி தவிக்கும் நோயாளிகளின் இறுதி ஆசைகளை நிறைவேற்றும் உன்னத சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

தொண்டாற்றுவதில் மிகுந்த நாட்டம் கொண்டுள்ள குமாரி ரேணுகா, ஒவ்வொரு முறையும் மாறுபட்ட பின்னணியிலிருந்து வரும் நோயாளிகளைச் சந்திக்கிறார்.

கொவிட்-19 நோய்த்தொற்றின்போது சேவையாற்ற முதியோர் பராமரிப்பு இல்லங்கள், மருத்துவமனைகள், காப்பகங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்த சூழலில் தனது நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்ள குமாரி ரேணுகா வேறுவழி தேட வேண்டியிருந்தது.

‘ஆம்புலன்ஸ் விஷ் (Ambulance Wish)‘ எனும் லாப நோக்கற்ற இயக்கத்தை அறிந்த இவர், தாமும் அதில் சேர்ந்து கடுமையாக நோய்வாய்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தார்.

உயிருக்குப் போராடும் நோயாளிகள் தங்களது இறுதிநாள் நெருங்குமுன் பல நாள்களாக மனத்தில் புதைத்து வைத்துள்ள ஆசைகளைப் பகிர்ந்துக்கொள்ளும் தருணங்களில் கைகொடுக்கும் குமாரி ரேணுகா, இதன்மூலம் வாழ்வில் தான் பல வகையில் அதிர்ஷ்டத்துடன் வாழ்வதாக உணர்கிறார்

நோயாளிகளின் இறுதி ஆசைகளை நிறைவேற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்த குமாரி ரேணுகா, ஒரு முறை மலாய் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இறப்புக்குக் காத்திருக்கும் சமயத்தில் தன் இறுதி ஆசையாக குடும்ப புகைப்படம் எடுக்க விரும்பிய பயணத்தில் தானும் சேர்ந்துகொண்டதை மறக்க முடியாத நிகழ்வாகப் பகிர்ந்துகொண்டார்.

இரு மாதங்களுக்கு ஒருமுறை நோயாளிகளைச் சந்திக்கும் இவருக்கு ஒரு சமயம் நேரிட்ட சம்பவம் இன்னும் மனக்கண்முன் நிற்கிறது. நோயாளி ஒருவர் இறுதி ஆசையாக உலாப்படகில் (yacht) பயணம் செய்ய விரும்பியபோது, விடுமுறையில் இருந்த குமாரி ரேணுகாவுக்கு அவருடன் நடவடிக்கையில் ஈடுபட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.

விடுமுறையிலிருந்து திரும்பியவுடன் நோயாளிக்காக தான் ஏற்கெனவே தயாரித்த துணுக்குச் சேகரப் புத்தகத்தை அன்பளிப்பாக வழங்க எண்ணியிருந்த இவர், சிங்கப்பூருக்குத் திரும்பிய மறுநாளே நோயாளி மாண்டுவிட்ட செய்தியைக் கேட்டு மனமுடைந்துபோனார்.

இது போன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகளில் குமாரி ரேணுகாவுக்கு நேர நெருக்கடி சவாலாக உள்ளது. நோயாளிகளின் நிறைவேற்றப்படாத ஆசைகளால் பாதிப்படையும் இவர், வேலையிலிருந்து விடுப்பு அல்லது வேலையில் ஓய்வு நேரம் எடுத்து நோயாளியுடன் நேரத்தைச் செலவிடும் அளவுக்குத் தன்னை அர்ப்பணிக்கிறார்.

sanush@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!