உதயநிதி, தனுஷுக்குச் சண்டை சொல்லித் தந்த அடிமுறை ஆசான்

உதயநிதி, தனுஷுக்குச் சண்டை சொல்லித் தந்த அடிமுறை ஆசான்

2 mins read
b919e52b-6090-420e-8945-0f7509c1afcf
நடிகர் தனுஷுடன் ஆசான் ப. செல்வராஜ். - படம்: ஆசான் ப. செல்வராஜ்
multi-img1 of 3

மாமன்னன், பட்டாஸ் ஆகிய திரைப்படங்களில் அடிமுறை ஆசான் கதாபாத்திரத்தில் நடித்த 50 வயது ப.செல்வராஜ் நிஜ வாழ்க்கையிலும் பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் ஆசானாகத் திகழ்கிறார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த செல்வராஜ் ஆசான், பத்து வயதிலேயே தன் தற்காப்புக் கலை பயணத்தை தொடங்கினார். கருப்பையா என்ற வாத்தியாரிடம் சிலம்பம் பயிற்சி தொடங்கி, பிறகு கிட்டத்தட்ட முப்பது ஆசான்களிடமிருந்து அடிமுறை பயிற்சி பெற்றார்.

இன்று நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் தற்காப்புக் கலைகளில் ஈடுபட்டிருக்கும் செல்வராஜ் ஆசான், அடிமுறை, சிலம்பக் கலைகளோடு, கராத்தே, ஜூடோ, மல்யுத்தம், குத்துச்சண்டை, கிக்பாக்ஸிங் (Kickboxing), வாள்வீச்சு (Fencing), தை சீ (Tai Chi), சிலாட் (Silat), வோ கோ ட்ருயேன் (Võ Cổ Truyền) என பல தற்காப்புக் கலைகளிலும் பயிற்சி பெற்றுள்ளார். உலகெங்கும் இருக்கும் கலைகளும் விளையாட்டுகளும் இளையர்கள் தீய வழியில் செல்லாமல் இருக்க பெரும் உந்துகோலாக இருக்கின்றன என்று நம்புகிறார்.

மற்ற நாடுகளின் தற்காப்புக் கலைகள் பிரபலம் அடைய, தம்முடைய பாரம்பரிய தற்காப்புக் கலைகள் மட்டும் மறைந்து போவதை உணர்ந்த அவர், அவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக அடிமுறை சம்மேளனம், உலக சிலம்பச் சம்மேளனம் அமைப்புகளை நிறுவி, நடத்தி வருகிறார்.

அடிமுறை மற்றும் சிலம்பம் அனைத்துலக விளையாட்டாக அங்கீகரிக்கப் பட வேண்டும் என்பது ஆசானின் மையக் குறிக்கோளாக இருக்கிறது.

அதில் முதல் படியாக, டேக்வாண்டோ, ஜூடோ, குன் போகதோர் என்ற கம்போடியத் தற்காப்புக் கலை, வோவினம் என்ற வியட்நாமியத் தற்காப்புக் கலை போன்ற பல்வேறு தற்காப்புக் கலைகள் இடம்பெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அடிமுறை, சிலம்பம் கலைகளும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது இவரது இலக்கு.

அதற்கான முயற்சிகளின் வரிசையில், சிங்கப்பூர், மியன்மார், பங்ளாதேஷ், இலங்கை, நேப்பாளம், அமெரிக்கா போன்ற நாடுகளில் உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் உலக அடிமுறை சம்மேளனத்தின் கிளைகளைத் தொடங்கியுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் உள்ள உலக சிலம்ப சம்மேளனக் கிளையில் கிட்டத்தட்ட 120 மாணவர்கள் இருப்பதாக சொன்னார்.

“அடிமுறை என்பது தற்காப்புக்கானது மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியல்,” என்றார் செல்வராஜ் ஆசான். சண்டைப் பயிற்சி என்பதற்கு அப்பால் உடல் நலம், காயங்களையும் நோய்களையும் குணப்படுத்துதல் என மற்ற திறன்களையும் உள்ளடக்கியது தான் அடிமுறை என்றார்.

முற்காலத்தில், அடிமுறை கலையில் நன்கு தேர்ச்சி பெற, குறைந்தது 12 ஆண்டுகள் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இன்றைய வாழ்க்கைச் சூழலில் அது சற்று சாத்தியமில்லாத ஒன்று. அதனால் காலத்திற்கேற்ப மூன்றாண்டு பயிற்சித்திட்டங்களை தயார் செய்து நடத்தி வருவதாகக் கூறினார்.

மாமன்னன், பட்டாஸ் படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின், தனுஷ், சினேகா ஆகியோருக்கு அடிமுறை பயிற்சி அளித்த செல்வராஜ் ஆசான், திரைப்படத் துறையில் அடுத்த படியாக தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

azmina@sph.com.sg

குறிப்புச் சொற்கள்