விலைவாசி உயர்வை எதிர்கொள்ள புக்கிட் பாஞ்சாங் தொகுதியில் $1 கோப்பி-ஓ/தே-ஓ சலுகை, புக்கிட் பாஞ்சாங் ‘சேவ் வித் திங்காட்’ என்று குறைந்த விலையில் உணவு வாங்க வழிவகுக்கும் சலுகை என இரு திட்டங்கள் திங்கட்கிழமையன்று அறிவிக்கப்பட்டன.
தேசிய தினத்தை முன்னிட்டு இம்மாதம் முழுவதும் குறிப்பிட்ட உணவு நிலையங்களில் சாப்பிடும்போது கோபி-ஓ, தே-ஓ பானங்கள் ஒரு வெள்ளிக்கு மட்டும் விற்கப்படும்.
புக்கிட் பாஞ்சாங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் லியாங் எங் ஹுவா, உணவு நிலையங்களிலுள்ள கடைக்காரர்களுடன் கலந்துரையாடி இத்திட்டங்களை உருவாக்கினார்.
‘புக்கிட் பாஞ்சாங் கேர்ஸ் சேவ் வித் திங்காட்’ சலுகை மூலம் உணவை வீட்டுக்கு எடுத்து செல்லும் பொது ஐம்பது காசுவரை சலுகை கொடுக்கப்படும்.
புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் நடந்த இந்தத் திட்டத்தின் அறிமுகவிழாவில் சமூக ஆலோசனைக் குழுவை சேர்ந்த திரு சிம் சுவான் சான், சமூக நிலைய மேலாண்மைக் குழுவை சேர்ந்த திரு டேனியல் சூங் ஆகியோர் கலந்துகொண்டனர். உடல்நலமில்லாத காரணத்தால் திரு லியாங் எங் ஹுவா இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.
ஊஃபு காப்பிக் கடை, ஃபூட் ஹப், டி டியென் காப்பிக் கடை, புக்கிட் பாஞ்சாங் உணவங்காடி நிலையம், கிம் சான் லெங் காப்பிக் கடை போன்ற ஐந்து இடங்களில் இத்திட்டங்கள் இம்மாதம் முழுவதும் நடப்பில் இருக்கும். புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற உணவங்காடியில் மட்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இத்திட்டங்கள் நடப்பில் இருக்கும்.
இதில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஊக்குவிக்கும் நோக்கில், புக்கிட் பாஞ்சாங் உணவுக்கலன் ‘திங்காட்’, அவ்வட்டாரத்தில் வசிப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டது. உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல இந்தக் கலன்களைப் பயன்படுத்துவதால் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
கடந்த 13 ஆண்டுகளாக புக்கிட் பாஞ்சாங்கில் வசிக்கும் திருவாட்டி பார்வதி செல்லமுத்து, அவ்வட்டாரத்தில் நடக்கும் பல புதிய திட்டங்களை வரவேற்றுப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
“நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த அறிமுக விழாவில் ‘திங்காட்’ இலவசமாக வழங்கப்பட்டது. கடைக்கு எடுத்துச் செல்ல இது வசதியாக உள்ளதால் இனி நெகிழிப்பைகளை பயன்படுத்தத் தேவையில்லை. இதுபோன்ற பல திட்டங்கள் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி,” என்றார் அவர்.