தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீரிழிவு: நோய் அபாயங்களும் தடுப்பு வழிமுறைகளும்

2 mins read
0e20aea9-190d-4e02-82a0-594e98492cff
சிங்கப்பூரில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. - படம்: இணையம்

சிங்கப்பூரில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகச் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதோடல்லாமல் மூன்றில் ஒருவருக்கு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

நீரிழிவு பற்றி எளிமையாகச் சொன்னால், உடலில் சேரும் சர்க்கரை உயிரணுக்களில் நல்லது, ஆனால் ரத்தத்துக்குக் கெட்டது.

நீரிழிவு நோயின் முக்கிய பிரச்சினை ரத்தத்தில் இருந்து சர்க்கரையை அணுக்களுக்குள் தள்ள இயலாமலிருப்பது.

அப்படியானால் சர்க்கரையைத் தேவையான இடத்திற்கு எவ்வாறு அனுப்புவது? ரத்தத்தில் இருந்து உயிரணுக்களுக்கு சர்க்கரையை இயக்கும் இன்சுலினுக்கு உடலை உணர்திறன் செய்வதே அதற்குப் பதில்.

அதனால்தான் அதற்குரிய மருந்துகளும், நோயின் வீரியம் அதிகமானால் இன்சுலின் ஊசியும் வழங்கப்படுகிறது.

இது சாதரணமாகத் தோன்றலாம். ஆனால், இது மூளை முதல் பாதம் வரை பல்வேறு உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி, பெரும் விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது.

இதனைத் தொடர்ந்து நீரிழிவு, அது ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகளைப் பற்றி மருத்துவர் துரைராஜ் அளித்த விளக்கங்கள்:

சிறுநீரகம்: 

நீரிழிவின் முதல் பாதிப்பு சிறுநீரகங்கள். கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயால், சிறுநீரகங்கள் செயலிழக்க வாய்ப்புள்ளதோடு, அதன் விளைவாக ரத்த சுத்திகரிப்பு தேவைப்படுமானால் மிகப்பெரும் செலவின அதிகரிப்பு ஏற்படும்.

கண்கள்: 

இரண்டாவதாக நீரிழிவு நோயானது ரெட்டினோபதி எனும் ஒருவகை பார்வைக் கோளாறுக்குக் காரணமாக அமைகிறது. இது சுதந்திரத்தை இழக்க வழிவகுப்பதோடு பராமரிப்பாளர்களுக்கு பெரும் பாரத்தைக் கூட்டுகிறது.

ரத்த நாளங்கள்: 

ரத்த நாளங்களில் நீரிழிவு நோயின் தாக்கமானது இதயம் (மாரடைப்பு ஏற்படுத்துதல்), மூளை (பக்கவாதம்), கைகால்களை (கிருமி பாதிப்பால் கைகால் இழப்பு) பாதிக்கலாம்.

தொற்று:

நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்வதால், நிமோனியா, காசநோய், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

நரம்புகள்:

நீரிழிவு நோய் குறிப்பாக கால்கள், கால்களில் உள்ள நரம்புகளைப் பாதிக்கிறது. 

தோல்: 

நீரிழிவு நோயாளிகளின் தோல், நகங்கள் ஆகியவை வலுவிழப்பதோடு அடிக்கடி பாதிக்கப்படுகின்றன.காயங்கள், கொப்புளங்கள் முதல் சருமம் கருமையாகுதல், பூஞ்சை, பாக்டீரியா தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படுவது என பல வழிகளில் சருமத்தை நீரிழிவு நோய் பாதிக்கிறது.

இவையனைத்தையும் தாண்டி, ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நீரிழிவு நோயின் பொதுவான வடிவம் எளிதில் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தக்கூடியது என்பதுதான். உரிய நடைமுறைகளை பின்பற்றும்பொழுது முழு ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்கிறார் மருத்துவர் துரைராஜ்.

நோய் தடுப்பிற்கான சில வழிமுறைகளாக மருத்துவர் துரைராஜ் கூறுபவை:

பசித்து உண்ணுங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் இன்சுலின் உற்பத்தி அதிகமாகி, காலப்போக்கில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். 12 அல்லது 8 மணிநேர இடைவேளையில் உண்பது நல்லது.

தசைகளைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வது, ஒருவிதத்தில் நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்தாகும். அது உரிய விவேகமான அதிசயங்களைச் செய்யும்.

மருந்துகளை உரிய முறையில் உட்கொள்வதோடு குறிப்பிட்ட இடைவெளியில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது பெரும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடித்தளமிடும்.

சுவாசப் பயிற்சிகள், தியானம், யோகா உள்ளிட்ட மனநலப் பயிற்சிகள் நோய்த்தாக்கத்தைக் குறிப்பிடுமளவிற்கு குறைப்பதாக அண்மைய ஹார்வர்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்