இன்னும் 20, 30 ஆண்டுகள் கழித்து பாரம்பரிய கரகம் கட்டும் கலை நிலைத்து நிற்க வேண்டும். அதற்காகவே இந்தப் பயிலரங்கு மூலம் அடுத்த தலைமுறையினருக்கு இக்கலையைக் கொண்டு சேர்க்க முயல்கிறோம் என்கிறார் கரகம் கட்டும் கலைஞர் திரு வி.ஆர்.பாலகிருஷ்ணன்.
கடந்த 2022ஆம் ஆண்டு, அழிந்துவரும் நிலையிலுள்ள பாரம்பரியக் கலையான கரகம் கட்டும் கலையைப் பிரபலப்படுத்தும் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், கரகம் கட்டும் பயிலரங்கின் முதல் பகுதியை ஆகஸ்ட் 5ஆம் தேதி வழிநடத்தினார்.
கரகம் தொடர்பான பாரம்பரிய விருதின் தொடர்ச்சியாக, கலையைப்போற்றவும் வளர்க்கவும் பயன்படும் வகையில் தேசிய மரபுடைமைக் கழகம் அளிக்கும் நிதி உதவியையும் பெற்றுள்ளார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கரகம் கட்டிவரும் திரு பாலகிருஷ்ணன்.
அந்த நிதியை உரிய வகையில் பயன்படுத்தும் நோக்கில், இந்து அறக்கட்டளை வாரியமும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் இணைந்து, திரு பாலகிருஷ்ணன் தலைமையில், அனைவரும் கரகம் கட்டும் கலையைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயிலரங்கை நடத்தின.
அதோடு, கரகம் தொடர்பான தகவல்கள் அடங்கிய வழிகாட்டி நூலும் செய்முறை விளக்கக் காணொளியும் வெளியிடப்பட்டன.
இளையர்கள் கரகக் கலை பற்றிய விழிப்புணர்வு, அதை ஒட்டிய பாரம்பரிய முக்கியத்துவம், பக்தி, கலை வடிவத்தின் அழகு, கலாசாரத் தொடர்பு என அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளும் விதமான நிகழ்வுகளை நடத்தியதில் பெருமை அடைவதாகக் குறிப்பிடுகிறார் திரு பாலா.
கரகம் தொடர்பான பல்வேறு வகை ஆட்டக்கலைகள் இருந்தாலும் சக்திக் கரகம் தனிச் சிறப்பு வாய்ந்தது. கரகம் என்றாலே திருவிழாதான். கொண்டாட்டமும் மகிழ்ச்சியும், நையாண்டி மேளமும் என களைகட்டும் நிகழ்வு என்கிறார் திரு பாலா.
மேலும், கலந்துகொண்டவர்கள் அனைவருமே ஆர்வத்துடன் சிறப்பாகப் பங்காற்றியது மகிழ்ச்சியளித்தது என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து, ஸ்ரீ மாரியம்மன் கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் திரு.லட்சுமணன் கூறுகையில், “இந்தப் பயிலரங்கு மூலம் சக்திக் கரகம், ஆட்டக் கரகம் என இரண்டு வகை கரகம் பற்றி மக்கள் அறிந்துகொண்டார்கள்,” என்றார்.
மேலும் அவர், திருவிழா காலங்களில் பொதுவாக பூசாரி, பண்டாரம் என ஆண்கள் மட்டுமே கரகம் ஏந்துகின்றனர். ஆட்டக் கரகங்கள் பெரும்பாலும் முன்னரே தயார் செய்யப்பட்ட கரகத்தைக் கொண்டு ஆடுவர். பெண்கள் கரகம் வடிவமைக்கும் வாய்ப்பை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் இங்கு, அனைத்து பாலினத்தவருக்கும், எல்லா வயதினருக்கும் கரகம் கட்டும் வாய்ப்பு அமைந்தது மனநிறைவான அனுபவம் என்றார்.
தொடர்ந்து இன்னும் இரண்டு பயிலரங்குகள் நடத்த உள்ளதாகவும், கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, அடுத்தடுத்து என்ன செய்யலாம் என திட்டமிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏறத்தாழ 30 பேர் கலந்துகொண்ட இந்தப் பயிலரங்கில், கரகம் பற்றிய அறிமுகம் கொடுக்கப்பட்டு விளக்கக்காட்சிப் படங்களும் காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன. திரு பாலகிருஷ்ணன், திரு சண்முகம், திரு தினேஷ் ஆகிய மூன்று கரகம் கட்டும் கலைஞர்கள் இணைந்து கரகம் கட்டுவது எப்படி எனும் செய்முறை விளக்கமும் அளித்தனர்.
தொடர்ந்து அனைவருக்கும் கரகம் கட்ட தேவையான பொருள்கள் கொடுக்கப்பட்டு, கலைஞர்களின் உதவியோடு கரகம் கட்டும் பயிற்சியும் நடைபெற்றது.
பங்கேற்பாளரில் ஒருவரான திரு. அருண்குமார், 36, “ஒவ்வோர் ஆண்டும் தீமிதித் திருவிழாவில் நான் பங்கேற்பது வழக்கம். கரகத்தைப் பார்க்கும்போதெல்லாம் பூரிப்பு ஏற்படும். அதனைக் கட்டும் முறையை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் வந்தேன். நானே சொந்தமாக கரகம் ஒன்றைக் கட்டியுள்ளது பெருமையளிக்கிறது என்கிறார்.
மேலும், இதுபோன்ற கலை வடிவங்களைக் காணுகையில், தமிழ் மரபின் ஆழம் குறித்த ஆச்சரியம் மேலும் கூடுகிறது என்று சொன்னார் இந்த ஆண் தாதி.
மற்றொரு பங்கேற்பாளர், தொடக்கப்பள்ளி மாணவரான ஏழு வயதாகும் மணிகண்டன். இவர் கூறுகையில், “கரகம் வண்ணமயமாக இருக்கிறது. இதை என் தாயாருடன் இணைந்து செய்ததில் பெருமகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டார்.
திரு நந்தன் எனும் 17 வயது பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் பேசுகையில், இது ஒரு புதுவித அனுபவம். மேலும் இதுபோன்ற பயிலரங்குகளில் பங்கேற்கும் ஆர்வத்தைத் தூண்டியது இந்தப் பயிலரங்கு என்றார்.
47 வயது நடனக் கலைஞரான திருவாட்டி மேரி, “அடிப்படையில் நடனத்தில் இருக்கும் ஆர்வம் காரணமாக இந்தப் பயிலரங்கிற்கு வந்தேன். மிகவும் பயனுள்ள இந்தப் பயிலரங்கை நடத்தியவர்களுக்கு நன்றி,” எனத் தெரிவித்தார்.
அடுத்த தலைமுறை கரகம் கட்டும் கலைஞரும், பயிலரங்குப் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவருமான திரு தினேஷ்குமார், 38, “நான் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாகக் கரகம் கட்டுகிறேன். இளவயது கரகக் கலைஞராக இருப்பதால், இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் இந்தப் பழமையான கலையைக் கொண்டு சேர்ப்பதைக் கடமையாக எண்ணுகிறேன்,” என்கிறார்.
பங்கேற்பாளர்கள் அனைவரும் அடிப்படை கரக வடிவத்தை அடைய முடிந்ததைப் பார்ப்பது நெகிழ்வாக இருந்ததெனக் கூறினார்.
ஒரு மணிநேரத்திற்கு மேல் பயிற்றுவிப்பாளர்களின் உதவியுடன் தாங்கள் கட்டிய கரகத்தை பங்கேற்பாளர்கள் மகிழ்வுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.