கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புக் காலத்தின்போது சமூக நடவடிக்கைகளும் தொடர்புகளும் குறைந்து, வீட்டிலேயே அடைந்து இருந்தது பலரின் மனநிலையைப் பாதித்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதனை எதிர்கொள்ள சிலர் தங்கள் மனநிலையை பற்றியும் அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்ள சமூக ஊடகங்களை நாடினர். அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்த மனநல ஆலோசகர்களும் வல்லுநர்களும் தங்கள் நிபுணத்துவக் கருத்துகளையும் ஊடகங்களில் பதிவிடத் தொடங்கினர்.
இப்படி, மனநலம் பற்றிய விழிப்புணர்வு கொவிட்-19 பரவல் காலத்தில் அதிகரித்த நிலையில், இன்று அது சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்படும் தலைப்பாகத் திகழ்கிறது.
“மற்றவர்கள் தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிவது மனத்திற்கு ஆறுதல் அளிக்கிறது,” என்றார் உளவியல் இளங்கலைப் பட்டதாரி திவ்யா.
சமூக ஊடகங்கள் மூலம் பெருகும் மனநல விழிப்புணர்வு பெரும்பாலும் நன்மையையே தருகின்றன என்று அவர் சொன்னார்
இருப்பினும், விழிப்புணர்வு கூடுவதால் சில தீமைகளும் ஏற்படலாம். மனநலம் பற்றி மாறுபட்ட கருத்துகளை கேட்பவர்களுக்கு எவை நம்பகமானவை, எவை நம்பகமற்றவை என்ற குழப்பம் ஏற்படக்கூடும்.
நம்பகமான தகவல்கள் எவை என்பதை அடையாளம் காண மனநல ஆலோசகர் நஸ்ரின் ஷா பீவி சில குறிப்புகள் தருகிறார்.
எந்தவொரு தகவலைக் கண்டாலும், கூறியதைக் கூறியபடி உள்வாங்காமல் அதை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பது அவரது ஆலோசனை. அத்தகவலைப் பதிவுசெய்தது மனநல நிபுணரா அல்லது சாதாரண மனிதரா என்று தெரிந்துகொள்வது ஒரு வழி என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ‘மனச்சோர்வு இருப்பதற்கான ஐந்து குறியீடுகள்’, ‘பதற்றமான மனநிலைக்கான அறிகுறிகள்’ போன்ற காணொளிகள் வெளியான வண்ணம் உள்ளன. இதுபோன்றவற்றைக் கண்டு ஒருபோதும் தனக்கும் அந்த மனநோய் உள்ளது என்று ஒருவர் தானே முடிவுசெய்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார் நஸ்ரின்.
தானாக நோயைக் கண்டறிய முயல்வது ஒருவரின் தன்னம்பிக்கையைப் பாதித்து, எவ்வாறு அதைச் சமாளிப்பது என்ற போதுமான ஆதரவு இல்லாத நிலையில், மேலும் மனநிலையைப் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
பதிவுகளில் காண்பிக்கப்படும் அனுபவங்களையோ அறிகுறிகளையோ தானும் உணர்வதாகத் தோன்றினால், மனநல வல்லுநர் அல்லது மருத்துவரை நாடி ஆலோசனை பெறுவது நல்லது என்று நஸ்ரின் அறிவுறுத்தினார்.
azmina@sph.com.sg