சிங்கப்பூரின் 58வது தேசிய தினத்தை ஒட்டி ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்கான பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.
சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தையும் ஒற்றுமையையும் கற்றுத்தருவதை நோக்கமாகக் கொண்டு ‘இஎஸ் குருப் ஹோல்டிங்ஸ்’ நிறுவனமும் நல்லிணக்க, பன்முகத்தன்மை கலைக்கூடமும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
கட்டுமானத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் நல்லிணக்க, பன்முகத்தன்மை கலைக்கூடத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று கூடினர். கலைக்கூடத்தைச் சுற்றிப் பார்த்த பிறகு அனைவரும் தெலுக் ஆயர் சாலையில் நடந்துசென்று சமயம் சார்ந்த பல்வேறு கட்டடங்களைப் பார்வையிட்டனர்.
பல இன, சமயங்களைச் சேர்ந்த இந்த ஊழியர்களுடன் சமய, நல்லிணக்கத் துறையைச் சேர்ந்த இளம்தலைவர்கள் கலந்துரையாடினர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதால், பிற இன கலாசாரங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்க்க இத்தகைய நிகழ்வுகள் கைகொடுப்பதாக இஎஸ் குழுமத்தின் மனிதவள நிர்வாகி சிவகுமார் தெரிவித்தார்.
“ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளும்போதுதான் நட்புறவு வளர்கிறது,” என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் வசிப்போருக்கிடையே சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதும் அது குறித்த முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பின் ‘சோவிங் கேர் டுகெதர்’ பிரிவின் மேம்பாட்டு மற்றும் சமூக உறவுகளுக்கான இயக்குநர் நஸ்ஹத் ஃபஹீமா கூறினார்.
“நமது பல இன, கலாசார சமுதாயத்தில் அவர்களும் இணைந்து நம்மைப்போல் சமய நல்லிணக்கக் கலந்துரையாடலில் பங்கேற்க விரும்பினோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பங்குபெற வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரவேண்டும்,” என்றார் அவர்.