இயற்கையும் பல்லின கலாசாரமும் இணைந்த இசைப்படைப்பு

3 mins read
3879bc22-6e79-4d37-afaf-8047a0e26b61
ஸ்வரூபகா. - படம்: பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி
multi-img1 of 4

இயற்கையையும் பல்லின கலாசாரத்தையும் இணைக்கும் பாலமாக அமைந்தது அண்மையில் நடைபெற்ற ‘ஸ்வரூபகா’ எனும் இசைப் படைப்பு.

இயற்கையை மையமாக வைத்து நவரசத்தை இசைமூலம் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது இப்படைப்பு. இனம், சமயம், மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இயற்கை மனித வாழ்வோடு பின்னியிருக்க முற்பட்டது ஸ்வரூபகா.

கச்சேரி பாணியில் நடைபெற்ற இப்படைப்பின் கருவை பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் இசை இயக்குநர் டாக்டர் கானவினோதன் ரத்தினம் உருவாக்கினார்.

பிரபல புல்லாங்குழல் கலைஞரான அவர் இந்த இசை தொகுப்பில் உள்ளூர் கவிஞர் ஆல்வின் பாங்கின் ‘ஆங்கர்’ எனும் கவிதையை மையப்படுத்தி வயலின் கலைஞர் யோங் கைளின் உருவாக்கிய இசைப்படைப்பைச் சேர்த்துள்ளார்.

18 ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசையின் திரித்துவம் தியாகராஜா இசையமைத்த பகுதி இந்தப் படைப்பில் முக்கிய அம்சமாக அரங்கேறியது.

பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் பல இனத்தவர் வாழ்கின்றனர். சிங்கப்பூரின் அடையாளமாக இப்படைப்பில் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த இசைக்கலைஞர்களோடு நன்யாங் கலைச் சங்கத்தின் ‘இம்ப்ரெஷன்ஸ்’ குழுமத்தைச் சேர்ந்த மொத்தம் ஐந்து சீன, மலாய் இசைக் கலைஞர்கள் கைகோத்தனர்.

புல்லாங்குழல், வயலின், வீணை, மிருதங்கம், டிசி எனும் சீன புல்லாங்குழல், அக்கார்டியோன் எனும் காற்றினால் இசைக்கப்படும் இசைக்கருவி, சீன டிரம்ஸ், செல்லோ ஆகிய இசைக்கருவிகளின் இசையோடு கலந்தது கர்நாடக பாடகர் அம்பிளிப் பிள்ளையின் குரல்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் கலைப் பள்ளியில் இடம்பெற்ற கச்சேரியில் ஏறத்தாழ 300 பேர் கலந்துகொண்டனர்.

அன்பு, கருணை, துணிச்சல், மகிழ்ச்சி, கோபம், அருவருப்பு, அச்சம், அமைதி போன்ற உணர்ச்சிகளை பொதுவாக பரதத்தில் வெளிப்படுத்துவது எளிதே.

ஆனால், இசை மூலம் ஒவ்வோர் உணர்ச்சியும் வெளிக்கொணர்வது கடினமாக இருந்தாலும் அதனைத் துல்லியமாக கலைஞர்கள் வெளிப்படுத்தினர். கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் இசை வல்லமையை வெளிக்காட்டும் விதத்தில் சிறிது நேரத்திற்கு தங்களின் இசைக்கருவியை மட்டும் வாசித்து காதுகளுக்கு விருந்தூட்டினர்.

ஸ்வரூபகாவுக்கு மேலும் மெருகூட்டியது பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி நடனமணி சிவாஷ்னி குமாரின் விவரிப்பும் மகிழ்ச்சி உணர்வின் எதிரொளிப்பாக அவர் குயில்போல் ஆடியதும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் இயற்கைச்சூழல் மிகுந்த இடங்களை விரும்பி சுற்றிப்பார்க்கும் டாக்டர் கானவினோதன் அதை மையப்படுத்தி ஸ்வரூபகா இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

கடல் கொந்தளிப்பு, பறவைகளின் கீச்சொலிகள் போன்ற இயற்கைக்கூறுகளை இந்திய இசையோடும் வேற்றின இசையோடும் முதல்முறையாகத் கலந்ததுதான் ஸ்வரூபகா. வேற்றினக் கலைஞர்களாக இருந்தாலும் இந்திய இசையின் ஸ்வரங்களைக் கற்றுக்கொண்டு அவர்கள் வாசித்தது பாராட்டத்தக்கது.

பார்வையாளர்கள் அடுத்து அவர்களை ஈடுபடுத்தும் வகையில் அமையும் ஓர் இசை நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றார் டாக்டர் கானவினோதன். டிசி புல்லாங்குழலை வாசித்த டாக்டர் கிங்லுன் டான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக டாக்டர் கானவினோதனிடமிருந்து புல்லாங்குழல் கற்று வருகிறார்.

ஸ்வரூபகாவில் டிசி வாசித்த அவர், “இது எனக்கு ஓர் புதிய அனுபவம். இந்திய இசையைக் கற்று வாசித்தது எனக்கு சுலபமாக அமையவில்லை. இருந்தாலும் இது மிக தனித்துவம் வாய்ந்த இசை. அதை வாசிக்க கிடைத்த வாய்ப்புக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

பார்வையாளர்களில் ஒருவரான லோகரூபிணி ராஜேந்திரா, 26, “நான் இதற்கு முன்னர் பல்லின இசைக்கச்சேரிக்குச் சென்றுள்ளேன். ஆனால், ஸ்வரூபகா மிகவும் அற்புதமாக இருந்தது. சீன இசையும் இந்திய இசையும் கலந்தபோது அது கேட்பதற்கு உணர்வுபூர்வமாக இருந்தது,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்