சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் அதன் வாழ்நாள் உறுப்பினர் திருவாட்டி தமிழ்ச்செல்வி இராஜராஜனின் ‘காற்றலையில்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு அடுத்த வாரம் அறிமுகம் காண்கிறது. வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலகக் கட்டடத்தின் 16வது தளத்திலுள்ள ‘த போட்’ அரங்கில் அறிமுக விழா நடைபெறவிருக்கிறது. அந்த நூலை முன்னதாக தமிழகத்தில் திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி வெளியிட்டார்.
தமிழர் பேரவையின் தலைவர் திரு. வெ. பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் வரவேற்புரை ஆற்ற, தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் விழாவிற்குத் தலைமையேற்கிறார்.
திரு. உமா சங்கர் நாராயணன், திரு. தியாகராஜன் நடராஜன் ஆகியோர் கதைகளைப் பற்றி உரையாட, கவிமாலைத் தலைவர் திருவாட்டி இன்பா, எழுத்தாளர் திரு. இராம. வயிரவன் ஆகியோர் நூலை அறிமுகம் செய்வர்.
கவிமாலையின் நிறுவனரும் ‘மக்கள் மனம்’ ஆசிரியருமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ வாழ்த்துரை ஆற்ற இறுதியாக நூலாசிரியர் திருவாட்டி தமிழ்ச்செல்வி ஏற்புரையும் நன்றியுரையும் ஆற்றுவார்.
எழுத்தாளர் கழகச் செயலவை உறுப்பினர் திருவாட்டி பிரதீபா வீரபாண்டியன் நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றுவார்.
இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கதைக்கள உறுப்பினர்கள் ஆகிய அனைவரையும் இவ்விழாவிற்கு எழுத்தாளர் கழகமும் திருவாட்டி தமிழ்ச்செல்வியும் அன்புடன் அழைக்கின்றனர்.