தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீடித்த நிலைத்தன்மையில் ஆர்வமுள்ள இளையர்கள்

3 mins read
94f51dee-afcb-43d6-b1cb-162d1b6d122e
(இடமிருந்து) தங்கை வர்ஷா ரமேஷ், தந்தை ரமேஷ் நரசிம்மன், தாயார் அர்ச்சனா சுவாமிநாதன் உடன் சாதனா ரமேஷ் - படம்: சாதனா ரமேஷ்

நம் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை முடிந்த வரை மறு உபயோகத்திற்கு ஆட்படுத்துவது, மறுசுழற்சி செய்வது, புதிய பிளாஸ்டிக் பொருள்களை வாங்குவதையும், உபயோகப்படுத்துவதையும் தவிர்ப்பது என சிறு சிறு முயற்சிகளை ஒவ்வொருவரும் மேற்கொள்வதே நீடித்த நிலைத்தன்மையை நோக்கிய முதல் படியாக இருக்கும். அதை நான் செய்யத் தொடங்கி விட்டேன். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் அதை செய்ய ஊக்குவிக்கிறேன் என்கிறார் 17 வயதான சாதனா ரமேஷ்.

உயிரியல் துறையில் ஆர்வமென சொன்னதும் ‘மருத்துவர் ஆகிவிடுவார் சாதனா’ என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, இவரோ, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சுற்றுப்புறவியல் துறையில் இளங்கலை பட்டக்கல்வி பயில சேர்ந்துள்ளார்.

மேலும் இவர் தேசியச் சுற்றுப்புற வாரியம் அளிக்கும் நீடித்த நிலைத்தன்மை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது கல்விச் செலவுகளுக்கு உபகாரச் சம்பளம் கிட்டுவதோடு, படித்து முடிக்கும் தறுவாயில், உரிய அரசு நிறுவனங்களில் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் வேலைப் பயிற்‌சி வாய்ப்பும் அளிக்கப்படும்.

நீண்டகாலமாக சுற்றுச்சூழலிலும், இயற்கையிலும் ஆர்வம் இருந்ததாகச் சொல்லும் சாதனா, சுற்றுப்புறவியல் துறையின் அன்றாட நடப்புகளைப் படிக்க படிக்க துறைசார் ஆர்வம் அதிகரித்ததாகக் குறிப்பிடுகிறார்.

இதுவும் அறிவியல் துறைதான் எனக் கூறும் இவர், இந்தத் துறை தன்னைச் சிந்திக்க தூண்டுவதாலும், சமூகத்தை மாற்றி அமைக்கத் தேவையான துறையாக இருப்பதாலும், தான் எதிர்காலத்தில் செய்யப்போகும் வேலை, அர்த்தமுள்ளதாக இருக்குமென்று நம்புகிறார்.

பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாப்பதோடு, நிகர பூஜ்ஜிய ஆற்றல் கொண்ட கட்டடங்களை அதிகப்படுத்துவதும் காலத்தின் தேவையாகும். அவை சார்ந்த துறைகளில் எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதே என் இலக்கு என்கிறார் சாதனா.

தேசியச் சுற்றுப்புற வாரியம், பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை இணைத்து வழங்கும் இந்த உபகாரச் சம்பளம், 2008ல் இருந்து இப்பொழுது வரை 239 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் பொறியாளர்கள், வேதியியலாளர்கள், இயற்பியலாளர்கள் என பல்வகை கல்வி பயிலும் 15 இளையர்கள் இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.

இந்த உபகாரச் சம்பளம் பெற்ற மற்றோர் இளையரான திரு செந்தில்குமார் அருண் ராகவேந்திரன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு இளங்கலை இயந்திரவியல் பொறியியல் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

தலைமை நிர்வாகி திரு. கோ சி ஹௌவுடன் அருண், அவரது பெற்றோர்.
தலைமை நிர்வாகி திரு. கோ சி ஹௌவுடன் அருண், அவரது பெற்றோர். - படம்: பொதுப் பயனீட்டுக் கழகம்

சிறுவயதிலிருந்து இயந்திர மனிதவியல் துறையில் ஆர்வம் கொண்ட இவர், கல்லூரியில் பயிலும்பொழுது மூத்தோர் உணவங்காடிகளில் தட்டுகளைத் திரும்ப அளிக்க உதவி புரியும் தானியங்கி இயந்திரம் ஒன்றை நண்பர்களுடன் இணைந்து வடிவமைத்தார்.

தொடர்ந்து உணவு மேலாண்மை மேல் வந்த ஆர்வம் காரணமாக உணவுக் கழிவு கண்காணிப்பு நிறுவனத்தில் வேலைப் பயிற்சியில் இணைந்தார்.

“தேவையான அளவு மட்டுமே வாங்கி உண்ண வேண்டும் என்பதுதான் என் தாரக மந்திரம்,” எனக் குறிப்பிடுகிறார் 23 வயது இளையரான அருண்.

நாள்தோறும் எவ்வளவு உணவு வீணாகிறது என்பது குறித்த தரவுகளை ஆராய்ந்த பொழுது அதிர்ச்சிக்குள்ளான இவர், அதனைத் தொடர்ந்து நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்யும் வழிமுறைகள் குறித்த ஆர்வத்தை வளர்த்துக்கொண்டதோடு, அதற்கு உதவியாக இருக்கும் என, இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பித்தார்.

பொதுப் பயனீட்டுக் கழகம் அளிக்கும் இந்த உபகாரச் சம்பளம் மூலம் இவருக்கு கல்விக் கட்டணம், உயர் கல்வி பயில பொருளுதவி உள்ளிட்டவை கிடைப்பதோடு, பொதுப் பயனீட்டுக் கழகத்தில் வேலை பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் பொதுப் பயனீட்டுக் கழகத்தில் வேலை பயிற்சி மேற்கொள்ளவிருக்கும் இவர், “நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தைக் கற்க ஆவலாக உள்ளது,” என்றார்.

இந்த வேலைப் பயிற்சி சிறப்பாகச் சென்றால், நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தில் எதிர்காலத்திலும் பணியாற்ற விழைவதாகக் கூறினார்.

மேலும், “கல்வியில் முதல் இடம் பிடித்தால்தான் வாழ்க்கை என்று அர்த்தமில்லை. வாழ்க்கைப்போக்கில் கிடைக்கும் அனுபவப் பாடங்களைக் கற்று, அதற்கேற்ப தகுதிப்படுத்திக்கொள்வதே சிறப்பான எதிர்காலத்தை அளிக்குமென நம்புகிறேன்,” என்கிறார் அருண்.

குறிப்புச் சொற்கள்