சைவ சமயத்தில் போற்றப்படும் புனிதர்களான 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் பற்றிய நாடகத்தில் வானூர்தி வழியாக நாடக மேடைக்குக் கொண்டு செல்லப்பட்ட ‘மாங்கனி’ வடிவம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆதரவுடன் திருமுறை மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு நடத்திய இந்நாடகம் பிஜபி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) நடந்தேறியது.
எட்டாவது ஆண்டாக இந்த அமைப்பினரின் ஏற்பாட்டில் ஏறக்குறைய 150 பேர் கலந்துகொண்டு படைத்திருந்த இந்நாடகத்தைக் காண குறைந்தது 700 பார்வையாளர்கள் கூடினர்.
நாடக மாந்தர்கள் வசனங்களை நேரடியாகப் பேசாமல் நாடகக் கதையைப் பாடலாகப் பாடிய கதைசொல்லிகள் கூறிய வரிகளுக்கு நடனமாடி, பாவனைக் கொடுத்தனர்.
இதில் முக்கிய நடிகர்கள், இசைக்கலைஞர்கள் பலர் இளையர்களாகவும் அவர்களின் பெற்றோர்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் இவ்வாறு பங்காற்றியவர்கள், 43 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் இயங்கிய திருமுறை மாநாடு நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்றவர்களாவர்.
12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரிய புராணத்தில் இடம்பெறும் காரைக்கால் அம்மையார் பற்றிய குறிப்பில் புனிதவதியார் என்பவரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான் கனியைத் தோன்றச் செய்தார்.
இதனைச் சித்திரிக்கும் விதமாக அரங்கத்தின் பார்வையாளர் பகுதியிலுள்ள மேல் மாடத்திலிருந்து மாம்பழம் ஒன்றின் மாதிரி வடிவத்தை வானூர்தி ஒன்று கீழே பறந்து வந்து, புனிதவதியாராக வேடம் பூண்ட ஆனந்தி ராமநாதனின் கையில் இருந்த தட்டின்மீது இறங்கிய காட்சி, பார்வையாளர்களின் கைத்தட்டலையும் உற்சாக ஆரவாரத்தையும் பெற வைத்தது.
2014ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற நாடகங்களை நடத்தி வந்த தங்கள் அமைப்பினர், பல்வேறு தொண்டர்களின் ஆதரவால் நாடகத்தின் தரத்தை ஆண்டுக்கு ஆண்டு மேம்படுத்த முடிந்ததாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த நாடகத்தின் வெற்றிக்குப் பின்னால் பலர் இருந்துள்ளனர். அம்மையாரின் வாழ்க்கை வரலாறு குறித்து இந்நாட்டில் உள்ள பலரையும் அறியச் செய்ததில் என்னுடைய பங்கு உள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி,” என்று காரைக்கால் அம்மையாராக வேடமிட்டு நடித்த திருவாட்டி உமையாள் ராமநாதன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.