அண்மையில் வெளியான சில ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஆசிய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பார்பி, நடிகர் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களை மக்கள் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.
ஆனால் இப்படங்களுக்குப் போட்டியாக மெக்-2 திரைப்படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது.
அப்படம் எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்டமாக இருந்ததால் தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
குறிப்பாக சீனாவில் அதன் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
பெருங்கடல்களில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு ராட்சத சுறாக்களால் வரும் சவால்கள் பற்றிய படம் மெக்-2.
அப்படத்தை உருவாக்க கிட்டத்தட்ட 180 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது.
படத்தை சீனாவின் ‘சைனா மீடியா கேப்பிட்டல்’ நிறுவனத்துடன் இணைந்து வார்னர் புரோஸ் டிஸ்கவரி தயாரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 4ஆம் தேதி சீனாவில் படம் வெளியானது. முதல் வார இறுதியில் மட்டும் அது 72 மில்லியன் வெள்ளி வசூலானது.
வசூலில் அமெரிக்காவைவிட 77 விழுக்காடு அதிகமாக சீனாவில் வசூல் கண்டுள்ளது.
அதுபோக சீனாவில் பார்பி, மிஷன் இம்பாசிபிள் படங்களின் மொத்த வசூல் எண்ணிக்கையையும் மெக்-2 விஞ்சியுள்ளது.
இதேபோன்று இன்னும் சில நாள்கள் நிலைமை நீடித்தால் உலக அளவில் மெக்-2 படம் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் திரைப்படங்கள் சீனாவில் நல்ல வசூல் ஈட்டின.
ஆனால் அண்மைக்காலமாக சீனத் திரைப்படச் சந்தையில் ஹாலிவுட் படங்கள் வெற்றிபெறத் தடுமாறின.
இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பைப் பயன்படுத்தி சீனாவில் மீண்டும் வெற்றிபெற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
மெக்-2 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் சில சீன முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததுதான் என்றும் கூறப்படுகிறது.
மெக்-1 திரைப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது.
அது கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலர் வசூல் செய்தது.
அப்படம் சீனாவில் மட்டும் கிட்டத்தட்ட 170 மில்லியன் வெள்ளி வசூல் செய்தது.
அதைத்தொடர்ந்து மெக்-2 தயாரிக்கப்பட்டது.
தற்போது மக்களிடையே இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகலாம் என்று ஹாலிவுட் திரைப்பட ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
மெக்-2 திரைப்படத்திற்கு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

