இந்த ஆண்டு சிங்கப்பூர் இரவு விழா புதுப் பொலிவோடு சிங்கப்பூர் ஒரு மாபெரும் துறைமுக நகரம் என்ற கருப்பொருளில் நடக்கவுள்ளது. 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இவ்வாண்டு இடம்பெறவுள்ளன. அதில் ஒன்றாக இந்தியர்கள் மட்டுமின்றி பிற இனத்தவர்களும் சேர்ந்து உள்ளூர் இந்திய இசைக் குழுவினர் படைக்கவுள்ள ஜாஸ் இசை நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
பொதுவாக இந்திய இசை நிகழ்ச்சி என்று எடுத்துக்கொண்டால் பெரும்பான்மையான மக்கள் கேள்விப்பட்டிருப்பது கர்நாடக இசை. ஆனால் இந்தியப் பாரம்பரிய இசையும் மேற்கத்திய ஜாஸ் இசையும் இவ்விழாவில் இணையவுள்ளன.
‘ஜாஸ்’இன் அட் கேபிட்டோல் - எ நைட் இன் ஏஷியா’ எனும் இசை விருந்தில் பல்வேறு அனைத்துலக, உள்ளூர் இசைக் கலைஞர்கள் தங்களின் ஜாஸ் இசைப் படைப்புகளை வழங்கவுள்ளனர். அதில் ‘வர்ஷா’ மற்றும் ‘ராகாஜாஸ்’ எனும் இரு உள்ளூர் இந்திய இசைக் குழுவினர் புதிய முயற்சியாக ஆசிய இசைக் கூறுகளோடு ஜாஸ் இசையைச் சேர்த்துள்ளனர்.
நான்கு இசைக் கலைஞர்களோடு 2014ல் தொடங்கப்பட்ட வர்ஷா இசைக் குழுவில் தற்போது ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். டிரம்மர் எனும் மேளம் அடிப்பவர், கர்நாடக இசைப் பாடகர், மிருதங்கம் வாசிப்பவர், தாள வாத்தியக்காரர், கித்தார் இசைக் கலைஞர் எனப் பன்முகக் கலைஞர்களைக் கொண்டுள்ளது இக்குழு.
உறுப்பினர்களில் ஒருவரான முகமது நூர், சிங்கப்பூரின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் முகமது ரஃபியின் தம்பி ஆவார். இசை மீது பேரார்வம் கொண்ட இரு மூத்த சகோதரர்களுடன் பிறந்த நூர், சிறு வயதிலிருந்தே இசையைத் தனது மூச்சுக் காற்றுக்கு ஈடாகக் கருதிவருகிறார்.
1970களில் இசைப் பயணத்தைத் தொடங்கிய நூர், பல்லின இசை வாசித்த அனுபவம் கொண்டவர். சீன இசைத் துறையில் பல ஆண்டு அனுபவம் உள்ள இவர் வெளிநாடுகளுக்கும் சென்று வாசித்துள்ளார்.
வர்ஷா இசை குழுவில் மேளம் அடிப்பவராகவும், தாள வாத்தியக்காரராகவும் இருக்கும் இவர் சிங்கப்பூர் இரவு விழாவில் பார்வையாளர்கள் இதற்கு முன்னர் கேட்டிராத அளவில் மகிழ்ச்சியூட்டும் இசையை எதிர்பார்க்கலாம் என உறுதியளித்தார்.
இசை தனது வாழ்க்கை என்று கருதும் நூர், முன்னர் ஜாஸ் இசை வாசித்த அனுபவத்தை நினைவுகூர்ந்து, ஜாஸ் இசை தனித்துவம் வாய்ந்தது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“எந்நேரத்திலும் ஜாஸ் இசையை நம்மால் புதுமையாக்கி மேம்படுத்திக்கொள்ள முடியும். இசைக்கு எந்த வரம்பும் இல்லாததுபோலத்தான் ஜாஸ் இசையும். நாங்கள் இன்று இவ்வாறு ஒத்திகை பார்த்தாலும் நாளை நிகழ்ச்சியில் புதிதாக மாற்றியமைத்து இசை நிகழ்ச்சியை மேடையேற்றலாம். அந்த சிறப்பு ஜாஸ் இசைக்கே உரியது.” என்று நூர் கூறினார்.
நூருக்கு ஜாஸ் இசை வாசித்த அனுபவம் இருந்தாலும் வர்ஷா இசைக் குழுவில் கர்நாடக இசைப் பாடகராக இருக்கும் சாய் விக்னேஷ்வருக்கு இது புதிய அனுபவமே.
வலுவான கர்நாடக இசைப் பின்னணியிலிருந்து வரும் விக்னேஷ்வர், தனது தம்பி சாய் அகிலேஷ்வர் வர்ஷா இசைக் குழுவில் மிருதங்கக் கலைஞராக இருப்பதாகக் கூறினார். இருவரும் சிறு வயதிலேயே தங்களின் இசைத் திறனைப் பறைசாற்றும் வகையில் கர்நாடக இசையில் அரங்கேற்றத்தை முடித்துள்ளனர்.
மெல்லிசை இசையில் தொடங்கிய விக்னேஷ்வரின் இசைப் பயணம் இப்போது புதிய இசை வகைக்கு வந்துள்ளது. இந்திய இசை அமைப்போடு ஜாஸ் இசை அமைப்பைச் சேர்ப்பது கடினம் என்றாலும் அது சாத்தியம் என்று விக்னேஷ்வர் இசை நிகழ்ச்சியில் நிரூபித்துக் காட்ட முனைந்துள்ளார்.
வெவ்வேறு கலாசாரங்களை இணைக்கும் பாலம் இசை என்று நம்பும் விக்னேஷ்வர், வர்ஷாவின் இசைப் படைப்பு பல்லின மக்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கும் என்று கூறினார்.
காணொளித் தயாரிப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தில் தயாரிப்பாளராக இருக்கும் விக்னேஷ்வர், மக்கள் கூடிய விரைவில் வர்ஷா இசைக் குழு வெளியிட இருக்கும் இசைத்திரட்டை எதிர்பார்க்கலாம் என்றார்.
தந்தை விதைத்த இசை ஆர்வம் தனக்குள் இன்னும் ஒளிந்து கொண்டிருப்பதாக கூறிய 35 வயது ராகவேந்திரன் ராஜசேகரன், சிங்கப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைக் கலைஞர். 14 ஆண்டுகளுக்கு முன்னர் அவரும் அவரது பல்கலைக்கழக நண்பர்களும் ஒன்றிணைந்து ராகாஜாஸ் எனும் இசைக் குழுவைத் தொடங்கினர்.
டாக்டர் கானவினோதன் ரத்தினத்திடம் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுகொண்ட ராகவேந்திரன், லசால் கலைக் கல்லூரியில் ஜாஸ் இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இந்திய தாளங்களும் மேற்கத்திய தாளவாத்தியமும் நிறைந்ததுதான் ராகாஜாஸ் என்ற ராகவேந்திரன் முதன்முறையாக தனது இசைக்குழு சிங்கப்பூர் இரவு விழாவில் வாசிக்கவுள்ளது என்று பெருமையுடன் கூறினார்.
தங்களின் புத்தாக்கப் படைப்பை பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் முனைப்பில் இருக்கும் அவர், ஜாஸ் இசை உணர்வுகளின் பிரதிபலிப்பு என்கிறார்.
இந்திய இசையில் புகழ்பெற்றவை கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி இசை எனும் ராகவேந்திரன், இந்த இசை நிகழ்ச்சி மூலம் வாழ்க்கையின் அனைத்துத் தரப்புப் பார்வையாளர்களும் பொதுவான தளத்தில் நின்று இசையை ரசிக்கலாம் என்றார்.
ராகாஜாஸ் இசைக் குழுவைச் சேர்ந்த நான்கு கலைஞர்கள் புல்லாங்குழல், பாஸ் இசை, டிரம்ஸ், விசைப்பலகை ஆகியவற்றை வாசிக்கவுள்ளனர்.
டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்ஸில் இந்திய பாரம்பரியப் புல்லாங்குழல் வகுப்புகளை நடத்தும் ராகவேந்திரன் அடுத்த ஆண்டு ராகாஜாஸின் 15வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை வேறோர் இசை விருந்தில் மக்கள் எதிர்பார்க்கலாம் என்றார்.
சிங்கப்பூர் இரவு விழா ஏற்பாட்டுக் குழுவை வழிநடத்தும் யோகமலர் தியாகராஜன், “சிங்கப்பூரின் மரபை நினைவுகூரும் நிகழ்ச்சிகளைக் காண கிட்டத்தட்ட 600,000 மக்கள் இவ்வாண்டு கூடுவார்கள் என்று நான் நம்புகிறேன். பல கலைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இவ்வாண்டு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.
வர்ஷா மற்றும் ராகாஜாஸ் இசைக்குழுவினர் படைக்கவிருக்கும் இசை நிகழ்ச்சிக்கான கூடுதல் தகவல்களுக்குப் பொதுமக்கள் https://www.nightfestival.gov.sg/ இணையத்தளத்தை நாடலாம்.

