கூடுதலான ஆண்கள் மனநலச் சிக்கல்களுக்கு உதவி நாடுகின்றனர்: வல்லுநர்கள்

சிங்கப்பூரில் மனநலச் சிக்கல்களுக்கு உதவி நாடும் போக்கு ஆண்களிடையே அதிகரித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய மனநல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அண்மை ஆண்டுகளில் குறிப்பாக வயதான ஆண்கள் பலரும் மனநல ஆலோசகர்களை நாடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் அதுகுறித்து நண்பர்களோ சக ஊழியர்களோ தங்களைக் கேலி செய்யக்கூடும் அல்லது பலவீனமானவர்களாகக் கருதக்கூடும் என்ற அச்சமும் சில ஆண்களிடையே நிலவுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முன்பெல்லாம் மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் ரீதியிலான சிக்கல்களை ஆண்கள் தாங்களாகவே சமாளிக்க முயலும் போக்குதான் அதிகம் காணப்பட்டது.

ஆண்கள் எந்தவிதத்திலும் தங்கள் பலவீனத்தை வெளியில் காட்டக்கூடாது என்றே பாரம்பரிய ஆசியப் பண்புநலன்கள் போதித்துவந்துள்ளன.

வேலையிடச் சிக்கல்கள், குடும்பச் சிக்கல்கள் என எதுவாக இருந்தாலும் தானே போராடி அதற்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே பொதுவாக ஆணிடம் எதிர்பார்க்கப்படும் பண்பாக இருந்துவந்துள்ளது.

ஆனால் கொவிட்-19 உலகையே புரட்டிப் போட்ட நிலையில் உலகெங்கும் மக்களிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

புகழ்பெற்றவர்கள் முதல் நெருங்கிய நண்பர்கள் வரை பலரும் மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசுவதைப் பார்க்கும் ஆண்கள், தங்கள் தயக்கத்தை உடைத்து வெளிவருகின்றனர்.

அதனால், வேலையிடம், குடும்பம் தொடர்பான மனஅழுத்தத்திற்கு, கூடுதலானோர் உதவி நாடுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். உதவி நாடுவோரில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் முதிய ஆண்கள் எனக் கூறப்படுகிறது.

ஓர் ஆணுக்கு சமூகம் எழுதி வைத்த இலக்கணங்கள் மாறிவருவதை இது உணர்த்துகிறது.

இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வுகாண இயலாமற்போனால் அது அவர்களின் வேலைத்திறனையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது என்பதை வல்லுநர்கள் சுட்டினர்.

ஆனால் உதவி நாடியதால் பலனடைந்த பிறகு, மற்றவர்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்கவும் முனைந்துள்ளார் திரு தேவானந்தன் தமிழ்ச்செல்வி.

2012ஆம் ஆண்டில், நான்கு ஆண்டுகளாகப் பழகிய காதலியைப் பிரிய நேரிட்டதும் பெற்றோர் மணவிலக்கு நாடியதும் பொதுக்கல்விச் சான்றிதழ் ‘ஏ’ நிலைத் தேர்வுகளை எழுதவேண்டிய சூழலும் என எல்லாமாகச் சேர்ந்து மன அழுத்தத்திற்கு ஆளானார் தேவானந்த்.

“யாரிடமும் சொல்லாமல் மனத்திற்குள்ளேயே துயரத்தை அடைத்து வைப்பது உண்மையில் ஆரோக்கியமான ஆண்மையின் அடையாளமன்று. மீதமுள்ள வாழ்நாளை இழப்பது அல்லது அதை முடித்துக்கொள்வது என்பதைவிட உதவி கேட்பது பலமடங்கு நல்லது,” என்கிறார் இவர்.

தனது அனுபவத்தைக்கொண்டு தான் முன்பிருந்த அதே துயரமான நிலையில் இருக்கும் பிறருக்கு உதவ முடிவெடுத்தார் தேவானந்தன்.

2019ல் தன் மனைவி பிரியநிஷா நூருல்லாவுடன் இணைந்து ‘மென்டல் ஆக்ட்’ எனும் அமைப்பைத் தொடங்கினார். சிங்கப்பூர் இந்தியர்களுக்கு மனநலத் திட்டங்களையும் சேவைகளையும் வழங்குகிறது இந்த லாப நோக்கமற்ற அமைப்பு.

“ஆண்களுக்கு நான் சொல்லக்கூடிய அறிவுரை, ஈகோ, பழைய அனுபவங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மனநல சிகிச்சைக்குச் செல்லுங்கள் என்பதுதான். ஆண்களும் மனிதர்களே,” என்று கூறும் இவர், மனநல ஆலோசகரிடம் பேசிய பிறகே தனக்குத் தெளிவு கிடைத்ததாகக் கூறுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!