தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அழகியல், சமுக நலன், உடல் நலன்: அனைத்தும் வழங்கும் தோட்டக்கலை

3 mins read
0353382b-7348-4ada-886d-0ae4c71ab3e9
 தேசிய பூங்கா கழகம் (NParks), தென்கிழக்கு ஆசிய ஆர்க்கிட் சங்கம் (OSSEA) இணைந்து நடத்திய 2023 ஆம் ஆண்டிற்கான ‘ஆசிய பசிபிக் ஆர்க்கிட் மாநாடு’ (APOC) கடந்த ஆகஸ்ட் 16 முதல் 20 வரை நடைபெற்றது. - படம்: தேசிய பூங்கா கழகம்
multi-img1 of 3

நீடித்த நிலைத்தன்மையோடு வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்படும் ‘ஸ்கைரைஸ் க்ரீனரி’ (Skyrise Greenery) சிங்கப்பூரில், காலநிலை, சுற்றுச்சூழல் பின்னடைவுக்கு இயற்கையான தீர்வாக செயல்படும் என்கிறார் தேசிய பூங்காக் கழகத்தின் சமூக தோட்டக்கலை இயக்குனர் திருவாட்டி பூங்கோதை (படம்).

சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 இன் முக்கிய தூணாக விளங்கும் இந்த ‘ஸ்கைரைஸ் க்ரீனரி’ என்பது சிங்கப்பூரில் உள்ள வானுயர கட்டடங்களின் கூரை, முகப்பு மாடங்கள், மொட்டை மாடிகள் உள்ளிட்ட இடங்களில் வளர்க்கப்படும் தாவரங்களைக் குறிக்கிறது.

இவ்வகை பசுமைத் திட்டங்கள், நகர்ப்புற வெப்பத்தை தணிக்கவும், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான வாழ்விடங்களை வழங்கவும் உதவுகிறது.

சாலையோர மரங்கள், செடிகொடிகளுடன், நம்மைச் சுற்றியுள்ள அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள தாவரங்கள், நகர்ப்புற அழகையும் பசுமையையும் மேம்படுத்துவதோடு, இயற்கையை உட்கொணர உதவுகின்றன என்கிறார் அவர்.

தொடர்ந்து பசுமையான சூழலில் வாழ்வதன் மூலமும் வேலை செய்வதன் மூலமும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது என்கிறார்.

 ஆசிய பசிபிக் ஆர்க்கிட் மாநாடு

நீடித்த நிலைத்தன்மைக்கும், சமூக மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் வகையில், மக்களிடம் தோட்டக்கலை குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டவும், தோட்டக்கலையின் அழகியலைப் பறைசாற்றவும் பல முன்னெடுப்புகள் சிங்கப்பூரில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அம்முன்னெடுப்புகளில் ஒன்றான, தேசிய பூங்காக் கழகம், தென்கிழக்கு ஆசிய ஆர்க்கிட் சங்கம் இணைந்து நடத்திய 2023 ஆம் ஆண்டிற்கான ‘ஆசிய பசிபிக் ஆர்க்கிட் மாநாடு’ கடந்த ஆகஸ்ட் 16 முதல் 20 வரை நடைபெற்றது.

உலக அளவில் பல்வேறு விருதுகளை வென்ற 30க்கும் மேற்பட்ட தொழில்முறை வளர்ப்பாளர்களால் காட்சிப்படுத்தப்பட்ட ஆர்க்கிட் நிலப்பரப்பு, ஆர்க்கிட் நிபுணர்கள் தலைமையில் நடத்தப்பட்ட 100க்கு மேற்பட்ட போட்டிகள் உள்ளிட்ட அம்சங்களோடு இக்கண்காட்சி சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது.

வண்ணமயமான மலர்க் கண்காட்சிகளும், நிக்கோன் நிறுவனம், சிங்கப்பூரின் புகைப்படச் சங்கம் இணைந்து காட்சிப்படுத்திய ஆர்க்கிட் புகைப்படத் தொகுப்பு, வீட்டுத் தோட்டம் அமைக்க உதவும் தாவரங்கள், கருவிகளை வாங்க 50 க்கும் மேற்பட்ட கடைகள் ஆகியவை இக்கண்காட்சியின் சிறப்பம்சங்கள் என்கிறார் திருவாட்டி பூங்கோதை.

‘கம்யூனிட்டி இன் ப்ளூம்’ முன்னெடுப்பைக் கவனித்துக்கொள்ளும் இவர், பொழுதுபோக்கு ஆர்வலர்களிடையே பிரபலமான மூங்கில் ஆர்க்கிட், கிரீன் ஆன்டிலோப் ஆர்க்கிட் போன்றவை தொடங்கி, சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள வீட்டுத் தோட்டங்கள், சமூக மையங்கள், மத நிறுவனங்கள், பள்ளிகளில் இருந்து 10 சமூகத் தோட்டக் குழுக்களால் வளர்க்கப்பட்டு வரும் 100க்கும் மேற்பட்ட ஆர்க்கிட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுவதை மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

“சிங்கப்பூரின் சமூக தோட்ட பங்களிப்பாளர்கள், இந்த கண்காட்சிக்கு பங்களிப்பதோடு, பார்வையாளர்கள் ரசிக்க ஒரு அழகான காட்சியை வடிவமைத்திருப்பது மிகுந்த ஊக்கமளிக்கிறது,” என்கிறார் பூங்கோதை.

நல மேம்பாட்டு தோட்டங்கள்

தியோங் பாரு பூங்கா 
தியோங் பாரு பூங்கா  - படம்: தேசிய பூங்கா கழகம்

இவ்வகை அழகியல் சார்ந்த முன்னெடுப்புகள் ஒருபுறம் இருக்க, மனநலம் காக்கும் தோட்டக்கலை பற்றியும் வியந்துபேசுகிறார் பூங்கோதை.

இயற்கையுடனான மக்களின் தொடர்புகளை எளிதாக்குவதற்கும், உடல், மனநலம் மேம்படுவதற்கும் உரிய வடிவமைப்பு கொண்ட தோட்டங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் தேசிய பூங்காக் கழகம் சார்பில், இவ்வகை நல மேம்பாட்டு தோட்டங்களை வழிநடத்தும் இவர்.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் உட்பட அனைத்து வயதினரும் எளிதில் அணுகும் வகையில் சமதளத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, நீர்நிலைகள், கடல் காட்சிகள், பசுமையான சுற்றுப்புறம் உள்ளிட்டவைகளோடு கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார்.

நறுமணம் உள்ள, மருத்துவக் குணம் கொண்ட, வண்ணமயமான தாவரங்கள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் என காட்சிக்கு இனிய இத்தோட்டங்கள் மூத்தோரிடம் கடந்தகால நினைவுகளைத் தூண்டுவதோடு, அதிவேக செயல்பாடுடைய இளையருக்கு மன அமைதியையும் தருகின்றன. தேசிய பூங்காக் கழகம், சமூகத்தின் இயற்கைத் தொடர்புகளை அதிகரிக்கவும், சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் தொடர்ந்து உழைக்கிறது என்கிறார் திருவாட்டி பூங்கோதை.

குறிப்புச் சொற்கள்