லிஷாவின் தேசிய தினக் கொண்டாட்டம்

லிஷாவின் தேசிய தினக் கொண்டாட்டம்

2 mins read
70843117-e94c-4c9b-8998-470f727fadbd
பாலர் பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் தேசிய தினப் பாடல்களுக்கு ஆடிப் பாடி மக்களை உற்சாகப்படுத்தினர். - படம்: லிஷா

தேசிய தினத்தை முன்னிட்டு மக்களிடையே தேசிய உணர்வை வளர்க்க லிஷா எனும் லிட்­டில் இந்தியா வர்த்­த­கர்­கள், மரபுடைமைச் சங்கம் தேசிய தின நினைவு நிகழ்ச்சி ஒன்றை சனிக்கிழமை ஏற்பாடு செய்தது.

தேசிய கீதம், உறுதிமொழி ஆகியவற்றை மக்களுடன் சேர்ந்து பாடி தேசிய தினத்தைக் கொண்டாடுவது இந்நிகழ்ச்சியின் நோக்கம். சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி இவ்வாண்டு இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே நடந்தது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

செம்பவாங் ஸ்பார்க்கல் டாட்ஸ் பாலர் பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் தேசிய தினப் பாடல்களுக்கு ஆடிப் பாடி மக்களை உற்சாகப்படுத்தினர். சிறுவர்களுக்கு அன்பளிப்புப் பைகளும் சிறிய அளவிலான தேசியக் கொடிகளும் கொடுக்கப்பட்டன.

சிங்கப்பூருக்கு வந்திருந்த சுமார் 30 சுற்றுப்பயணிகளும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசித்ததாகக் குறிப்பிட்டார் லிஷாவின் கௌரவச் செயலாளர் ருத்ராபதி பார்த்தசாரதி.

“பள்ளிப் பருவம் முடிந்த பின் தேசிய கீதத்தைப் பாடும் வாய்ப்புகள் குறைவு. சிங்கப்பூரின் பெருமையைக் கொண்டாடவும் நம் நாடு கட்டிக்காக்கும் பண்புநலன்களையும் மக்களுக்கு எடுத்துச்சொல்ல இந்த நிகழ்ச்சி ஒரு தளமாக அமையும்,” என்றார் திரு ருத்ராபதி.

நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த பொதுமக்கள் கிட்டத்தட்ட 80 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. சிங்கப்பூரர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளுடன் தேசிய தினத்தை ஆண்டுதோறும் கொண்டாட இந்த நிகழ்ச்சி வழிவகுக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்