ஸ்ரீ சீரடி சாய் மகாராஜ் திருக்குட நன்னீராட்டு விழா

2 mins read
a9de5464-4bac-468c-8211-3249cc5f1d34
குடமுழுக்கு விழா அழைப்பிதழ். - படம்: அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்
multi-img1 of 2

செங்காங் வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ சீரடி சாய் மகாராஜ் திருக்குட நன்னீராட்டு விழா விமரிசையாக நடைபெறவுள்ளது. சீரடியிலிருந்து குருக்கள் சிறப்பு வருகை தருகிறார்.

அடுத்த மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு மேல் தொடங்கி பத்து மணிக்குள் நிகழ்வு முடிவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் ஸ்ரீ சீரடி சாய் மகாராஜ் ஆசிபெற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை இடம்பெறும் அன்னதானத்தில் கலந்துகொள்ளலாம்.

குடமுழுக்கு நாளில் காலை ஏழு மணிக்கு இரண்டாவது கால யாக பூசை ஆரம்பமாகும். அது முடிந்த கையோடு பக்தர்கள் சீர்வரிசை நடைபெறும். அதில் கலந்துகொள்ள பக்தர்கள் $25 கட்டணம் செலுத்தி தட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் பக்தர்கள் $101 கட்டணம் செலுத்தி கூட்டு வழிபாட்டில் பங்கேற்கலாம்.

குடமுழுக்கு நடைபெறும் அதே நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன. சிங்கப்பூர் ஸ்ரீ சிவன் கோயில் தேவார இசைமணி வ. விவேக் ராஜா ஓதுவார் குழு பாராயணம், சாய் மகேஷ் குழுவினர் சாய்பாபா பாடல்கள், ஸ்ருதிலயா கிரியேஷன்ஸ் ஜெயசம்போக் மற்றும் குழுவினர் வழிநடத்தும் பக்தி பாடல்கள், சென்னையைச் சேர்ந்த டாக்டர் கணேஷ் மற்றும் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் மற்றும் சாய் பஜன் இசைப் பேரொளி ஆகியவற்றை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.

குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்னர் பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் அடுத்த மாதம் முதல் வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் பூசைகளும் ஹோமங்களும் நடைபெறவுள்ளன.

நிகழ்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு ஆலயத்தின் மேலாளர் பாலாவை 9774 2022 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
கோயில்