எஸ்பிளனேட்டில் ஹரிஹரன்-லெஸ்லி லூயிஸ் இசை விருந்து

எஸ்பிளனேட்டில் ஹரிஹரன்-லெஸ்லி லூயிஸ் இசை விருந்து

2 mins read
4a24a1a3-f796-4fe2-b18b-0ad4e940dd1b
இசைக் கலைஞர்கள் ஹரிஹரன், லெஸ்லி லூயிஸ் - படம்: இணையம்

புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான ஹரிஹரனும் லெஸ்லி லூயிஸும் சிங்கப்பூர் மக்களுக்கு இந்தியக் கலவை இசையைப் புதிய பாணியில் விரைவில் படைக்க இருக்கின்றனர்.

‘கொலோனியல் கசன்ஸ்’ குழுவின் இசை நிகழ்ச்சி செப்டம்பர் 1ஆம் தேதி இரவு 8 மணிக்கு எஸ்பிளனேட்டில் மேடையேறும்.

இந்துஸ்தானி, கர்நாடக இசையும், பாப் பாணியிலான இசையும் சங்கமிக்கும் தனித்துவ இசையை தங்களின் படைப்பு மையப்படுத்துவதாக இருவரும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். 

1990களில் ஹரிஹரன்-லெஸ்லி இணைந்து உருவாக்கிய கொலோனியல் கசன்ஸ் இதுவரை ஐந்து வெற்றிகரமான பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. இரு திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளது. ‘எம்டிவி அன்பிலக்ட்’ எனும் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற முதல் ஆசிய இசைக் குழு இதுவே. 

இருவரும் முதன்முறையாக ஹார்ட் ரோக் கஃபேயில் 1998ல் படைத்த இசை நிகழ்வு நூற்றுக்கணக்கானோரை ஈர்த்து ஆர்ச்சர்ட் சாலையையே பரபரப்பாக்கியதை நினைவுகூர்ந்தார் திரு லெஸ்லி லூயிஸ்.

அத்தகைய இசை ஆர்வலர்கள் நிறைந்த சிங்கப்பூரில் மீண்டும் நிகழ்ச்சி படைப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர் இருவரும். 

பத்மஶ்ரீ, கலைமாமணி முதலிய உயரிய விருதுகளைப் பெற்றுள்ள ஹரிஹரன், தமது 50 ஆண்டு கால இசைப் பயணத்தில் தன்னை வளர்த்தெடுத்தோரில் மனதுக்கு மிக நெருக்கமானோராக இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், ஆஷா போஸ்லே, நௌஷத் அலி முதலியோரைக் குறிப்பிட்டர். 

“இளையராஜாவின் ‘மீட்டாத வீணை’ நான் பாடிய மிக கடினமான பாடல்களில் ஒன்று. அதிலுள்ள நுட்பங்களைப் புரிந்துகொள்ளவே ஒரு மணி நேரம் பிடித்தது. “ஏ. ஆர். ரஹ்மானின் உயிரே பாடல் என் மனதிலிருந்து நீங்காத ஒரு பாடல். அரை மணி நேரத்திலேயே பாடல் பதிவு முடிந்தது. என் மனதை அப்பாடல் அந்த அளவிற்குத் தொட்டிருந்தது,” என்றார் ஹரிஹரன். 

இசை அமைப்பாளராக தம் பயணத்தை 1980களில் தொடங்கிய லெஸ்லி, இந்தி திரையிசைத் துறையில் தடம் பதித்தவர். 1992ல் ஹரிஹரனுடன் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். இருவருக்குமே இருந்த கலப்பு இசை ஆர்வம் ‘கொலோனியல் கசன்ஸ்’ குழு அமையக் காரணமானது.

தம்மைப் பாட ஊக்குவித்து நுணுக்கங்கள் கற்று தந்த ஹரிஹரனை தம் பயணத்தில் முக்கிய தூணாக அவர் கருதுகிறார்.

முழுநேரக் கலைஞராகும் முன் சட்டக்கல்வி பயின்ற ஹரிஹரன், வளரும் இளம் இசைக் கலைஞர்களைப் பரவலாக வெவ்வேறு இசைகளை ரசிக்கவும் இசைத் திறனை முழுமையாக வளர்த்துக்கொள்ளவும் ஊக்குவித்தார்.

“இசை பாரபட்சமற்றது. அனைவருக்குமானது. பாடகர்கள் எவ்வளவு நயமாகப் பாடினாலும் எளியவர்களின் மனதை தொடும் வகையில், அவர்களின் குரலாக ஒலிப்பது முக்கியம் என நௌஷத் என்னிடம் கூறியதுண்டு. நாம் பாடும் மொழியைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இலக்கியம் படித்தல் அவசியம்,” என்றார் ஹரிஹரன். 

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் இசை அமைக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு பாடலை மக்கள் எதிர்பார்க்கலாம் என இருவரும் தெரிவித்தனர். நுழைவுச்சீட்டுகள் பெற: https://sg.bookmyshow.com/events/colonial-cousins/COLONIAL

குறிப்புச் சொற்கள்