தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மறதிநோய் வராமல் காக்கலாம்

5 mins read
ccd787f7-ef10-4b0d-96ad-be2eeabb25da
சிங்கப்பூர் அபெக்ஸ் ஹார்மனி லாட்ஜில் அமைதியான ‘டிஸ்கோ’ நடனத்தில் பங்கேற்ற மறதி நோயாளிகள். 12.5 2023 அன்று எடுக்கப்பட்ட படம். - படம்: ஏஎஃப்பி

மறதிநோய் (டிமென்ஷியா) வளர்ந்தவர்களில் எந்த வயதினரையும் பாதிக்கலாம். ஆனால், 65 வயதுக்கு மேலானவர்களிடையில் முதுமை மறதி அதிகமாக உள்ளது.

கடந்த 2015ல் மனநலக் கழகம் நடத்திய ஆய்வின்படி, சிங்கப்பூரில் 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 10 பேரில் ஒருவருக்கு மறதிநோய் உள்ளது. 80 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் பாதிப் பேருக்கு இப்பிரச்சினை உள்ளது.

இதன் அடிப்படையில், 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் 100,000க்கும் அதிகமானோர் இப்பிரச்சினையால் பாதிக்கப்படலாம் என மதிப்பட்டுள்ளது.

மறதி நோய் மூளையை முதன்மையாகத் தாக்குகிறது. பின்னர் பல்வேறு நோய்கள் அதன் தொடர்பாக வருகின்றன. இந்நோய் பாதிக்கப்பட்டவரின் மூளைச் செயல்பாடு படிப்படியாகப் பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு என்று எல்லாமே பாதிக்கப்படும்.

வயதானவர்களைப் பாதிக்கிறது என்றாலும், இது வயதாவதினால் ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவு அல்ல. 60 வயதைக் கடந்தவர்களுக்குச் சற்று ஞாபக மறதி ஏற்படுவது சாதாரண நிகழ்வு. மிகவும் பழக்கமானவர்களின் பெயர் மறந்து விடும். இது முதுமையின் விளைவு. ஆனால், பல நோய்களினாலும் ஞாபக மறதி ஏற்படலாம்.

மறதி உள்ளவர்கள் எல்லாம் டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. அதே சமயம் டிமென்ஷியா உள்ளவர்களுக்கு ஞாபக மறதி கட்டாயம் இருக்கும்.

முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி

மூளையிலுள்ள நரம்புத் திசுக்கள் மெதுவாக செயல்படுவதால் இது ஏற்படுகிறது. தனக்கு ஞாபக மறதி உள்ளதாக கவலை அடைந்து அவரே மருத்துவரிடம் செல்வார். ஒரு பொருளை தவறாகச் சொன்னாலும், அதை எடுத்துக் கூறினால், அவர் அதைப் புரிந்து திருத்திக்கொள்வார் .

ஆனால், மறதிநோய் பாதிப்பு இருந்தால் மறதியோடு கீழே உள்ள பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கும் மேல் இருக்கும்:

1. சரியாகப் பேச இயலாமை அதாவது உச்சரிப்புத் தெளிவின்மை. சரியான வார்த்தையைச் சரியான இடத்தில் உபயோகிக்கச் சிரமப்படுதல்.

2. தனக்கு தெரிந்த தினமும் செய்யக்கூடிய வேலையாக இருந்தாலும் அதைச் செய்யத் தெரியாமல் தவிப்பது.

3. தெரிந்த பொருள்களையோ அல்லது பெயர்களையோ நினைவில் கொண்டு வர முடியாமை.

தனக்கு ஞாபக மறதி ஏதுமில்லை என்று அவராகவே மருத்துவரிடம் செல்லமாட்டார். ஆகையால் அவரை குடும்பத்தினர்கள் தான் மருத்துவரிடம் அழைத்து வருவார்கள்.

ஒரு பொருளை தவறாகச் சொன்னாலும் அதை உறுதிபடக் கூறுவார். எவ்வளவு எடுத்துக் கூறினாலும் தன்னைத் திருத்திக்கொள்ளத் தெரியாது.

மறதிநோய் மூளையிலுள்ள ரசாயனப் பொருள்கள் குறைவதாலும் திசுக்கள் அழிவதாலும் ஏற்படுகிறது. மறதி நோய் ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. இதில் இரு வகையுண்டு.

காரணமின்றி ஏற்படுவது

அல்ஷைமர் நோய் (Alzheimer’s Disease) நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை. மரபுப் பண்பும் சுற்றுசூழலில் ஏற்படும் மாற்றமும் ஒரு காரணமாக இருக்காலம்.

மறதி நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் அல்ஷைமர் நோயினால் பாதிக்கப்படவர்கள். இதனை முழுமையாகக் குணப்படுத்த தற்போது எந்த சிகிச்சையும் இல்லை. மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

காரணங்களினால் ஏற்படுவது

ஒரு சில காரணங்களினால் ஏற்படும் மறதிநோய்க்கு, உரிய சிகிச்சையளித்தால் குணம் அடைய வாய்ப்புண்டு.

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், ரத்தத்தில் அதிகக் கொழுப்புச் சத்து, புகைபிடித்தல் போன்றவற்றால் இந்நோய் ஏற்படும் ஆபத்து அதிகம்.

மூளையில் கட்டி/ ரத்தக்கட்டி, அதிக மது அருந்துதல், தைராய்டு சுரப்பி குறைவாக சுரத்தல், வைட்டமின் பி1, பி6, 12 குறைபாடு, உறுப்புகள் செயலிழத்தலின் விளைவு, கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு, பார்க்கின்சன் நோய், எய்ட்ஸ், சிபிலிஸ் தொற்றுநோய்கள், துாக்க மாத்திரை, மனநோய்க்கு கொடுக்கும் மாத்திரைகளை அதிக நாள் சாப்பிடுவது, நாள்பட்ட மனச்சோர்வு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

அறிகுறிகள்

தொடக்கநிலை: முதுமை மறதியின் ஆரம்ப நிலை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஏனெனில் இது படிப்படியாக இருக்கும். மறதி, நேரத்தை இழப்பது, பழக்கமான இடங்களில் தொலைந்து போவது முதலியவை தொடக்கநிலையின் அறிகுறி. மறதி நோய் நடுத்தர நிலைக்கு முன்னேறும்போது​ அறிகுறிகளும் தெளிவாகின்றன.

• அண்மைய நிகழ்வுகள், மனிதர்களின் பெயர்களை மறந்துவிடுதல்

• வீட்டில் இருக்கும்போது குழப்பமடைதல்.

• தகவல்தொடர்புகளில் சிரமம்.

• தனிப்பட்ட கவனிப்பில் உதவி தேவை.

• அலைந்து திரிதல் மற்றும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பது உள்ளிட்ட நடத்தை மாற்றங்களைக் காட்டுகிறது.

மறதி நோய் மேலும் மோசமடையும்போது என்பது கிட்டத்தட்ட செயலற்ற நிலையாக இருக்கும். மற்றவரைச் சார்ந்தே இருக்கவேண்டி இருக்கும்.

நேரம், இடம் தெரியாமல் இருப்பது, உறவினர்கள், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம், சுய பாதுகாப்புத் தேவை அதிகரிப்பது, நடக்க சிரமப்படுதல், தீவிரமடையக்கூடிய நடத்தை மாற்றங்கள் இதன் சில அறிகுறிகள்.

பராமரிப்பு

மறதி நோய் உள்ளவர்களுக்கும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் ஆதரவளிக்கவும் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் சிங்கப்பூர் அரசாங்கம் பலநிலைகளில் உதவி நல்குகிறது.

ஆரம்பகால நோயறிதல், உடல் நலம், அறிவாற்றல், செயல்பாடு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், உடல்நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், நடத்தை மாற்றங்களைப் புரிந்துகொள்வதும் அதனை நிர்வகிப்பதும், பராமரிப்பாளர்களுக்குப் போதிய ஆதரவை அளிப்பது போன்றவை இந்நோயை எதிர்கொள்ள உதவும்.

மறதி நோய் பராமரிப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மற்றவர்களைப் பராமரிப்பதைவிட இப்பிரச்சினை உள்ளவர்களைப் பராமரிப்பதில் உணர்ச்சி, பொருளாதாரம், உடல் ரீதியான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

தடுக்கும் வழிகள்

எந்த வயதிலும் மூளை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். நடுத்தர வயதை அடைந்தவுடன் இது மிகவும் முக்கியமானது.

முதுமை, மரபியல் அல்லது பாரம்பரியத்தை மாற்ற முடியாது என்றாலும், சில உடல்நலம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை மாற்றுவது மறதி நோயை ஏற்படுத்தும் அபாயத்தைக் குறைக்க அல்லது தாமதப்படுத்துவதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.

சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபடுவது, சிந்தனைச் செயல்பாட்டைத் தூண்டும் வாசிப்பு போன்ற பழக்கங்கள், அறிவாற்றல் பயிற்சி, சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், புகை, மது பழக்கங்களைத் தவிர்ப்பது, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது, சமச்சீர் உணவு, ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது, மனச்சோர்வு, செவித்திறனை நிர்வகித்தல் போன்றவை மறதி நோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

மனச்சோர்வு, சமூகத் தனிமைப்படுத்தல், அறிவாற்றல் செயலற்ற தன்மை, காற்று மாசு போன்றவை கூடுதல் ஆபத்து காரணிகளாகும்.

குறிப்புச் சொற்கள்