தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அப்பன்’ நூல்வெளியீட்டு விழா

2 mins read
488b157f-2a2e-4028-87b9-5f5551145750
படத்தில் அழகுநிலா கணவர் செந்தில்நாதன், ‘அப்பன்’ நூலை வெளியிட்ட தாயார் தமிழரசி, நூலைப் பெற்றுக்கொண்ட எழுத்தாளர் ரமா சுரேஷ், எழுத்தாளர் அழகுநிலா, அவர் மகள் மதியரசி, மகன் விக்னேஷ். - செய்தி, படங்கள்: சிவானந்தம்
multi-img1 of 2

எழுத்தாளர் அழகுநிலாவின் ‘அப்பன்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி தேசிய நூலக வாரியத்தின் ‘தி போட்’ அரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மஹேஸ்குமாரும் விஷ்ணுவர்த்தினியும் அறிமுகம் செய்து பேசினார்கள்.

எழுத்தாளரும் கவிஞருமான மஹேஷ்குமார், புனைவு அல்லாத படைப்பான அப்பன் நூல், தங்களது கடந்தகாலத்தை மீள்பார்வை செய்துகொள்ளவும் குடும்ப உறவுகளைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கவும் வாசகர்களைத் தூண்டுகிறது என்றார். 

வளரும் கவிஞர் விஷ்ணுவர்தினி, பெற்றோருடனான பிள்ளைகளின் உறவு, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றமடைவதை நூலில் கண்டதாக ஓர் இளையரின் கண்ணோட்டத்தில் கூறினார். 

தொடர்ந்து அழகுநிலாவுடன் உரையாடல் அங்கத்தை சிவானந்தம் நீலகண்டன் வழிநடத்தினார்.  படைப்பூக்கமுள்ள புனைவு அல்லாத படைப்புகள் சிங்கப்பூரில் குறைவாகவே எழுதப்பட்டுள்ளன என்றும் அது வளர அப்பன் நூல்போன்ற முயற்சிகளுக்கு குடும்ப, சமூக, நிறுவன ஆதரவுகள் தொடரவேண்டும் என்றார் சிவானந்தம். 

தேசிய கலைகள் மன்றம் – சங்கம் இல்லம் உறைவிடத் திட்டம் 2022-2023இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவின் பெங்களூருவில் ஒருமாதம் தங்கியபோது, இந்நூலை எழுதத் தொடங்கியதாக அழகுநிலா தெரிவித்தார்.

அன்றாடத் தேவைகளின் நெருக்கடிகளிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாகப் படைப்புச் செயலில் மனம் குவிக்க உறைவிடத் திட்டம் உதவியதாகவும் அவர் கூறினார். 

அழகுநிலாவின் தாயார் திருவாட்டி தமிழரசி நூலை வெளியிட எழுத்தாளர் ரமா சுரேஷ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள், குறிப்பாகப் பெண் எழுத்தாளர்கள், திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

நிகழ்ச்சியில் இடையிடையே திரு சேதுராமன் மூன்று பாடல்களைப் பாடினார். குமாரி அஷ்வினி நிகழ்ச்சியின் நெறியாளராகச் செயல்பட்டார்.

குறிப்புச் சொற்கள்