இந்திய முஸ்லிம் பேரவையின் தேசிய தின நிகழ்ச்சி

இந்திய முஸ்லிம் பேரவையின் தேசிய தின நிகழ்ச்சி

2 mins read
05268dde-411e-46d7-8648-91e488ef7146
பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மதரஸா மாணவர்கள், விருந்தினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். - செய்தி, படம்: இந்திய முஸ்லிம் பேரவை

டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூரின் 58வது தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் நடைபெற்றது.

அப்பள்ளிவாசல் இமாம் மௌலவி அஸீஸுல்லாஹ் திருக்குர்ஆனில் இருந்து சில வசனங்களை ஓதி, அவ்வசனங்களை தமிழில் மொழிபெயர்த்து நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.

அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் மதரஸா மாணவர்கள், அழைப்பாளர்கள், விருந்தினர்கள் சேர்ந்து சிங்கப்பூர் தேசிய கீதம் பாடினர். பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் ஹாஜி எம்.ஒய்.முஹம்மது ரஃபீக் சிங்கப்பூர் தேசிய உறுதிமொழியைத் தமிழில் கூற அனைவரும் முன்மொழிந்தனர்.

ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் இந்திய முஸ்லிம் பேரவையின் இரண்டாம் உதவித் தலைவருமான திரு ஆதம் சாஹுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.

தேசிய தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூர் எவ்வாறு தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது என்பதைக் காட்டும் ‘அன்றும் இன்றும் சிங்கப்பூர்’ என்ற காணொளி 1970களில் சிங்கப்பூர் இருந்ததையும் தற்போது உள்ளதையும் எடுத்துக்காட்டியது.

‘திறன்களை உருவாக்குவதற்கான திறன்கள்’ என்ற தலைப்பில் ‘எடிகுவஸ்ட் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியுட்’ தலைமை நிர்வாக அதிகாரி இத்ரீஸ் மாலிம், கல்வி, பயிற்சி, மேம்பாடு குறித்த விழிப்புணர்வு உரை நிகழ்த்தியதோடு அதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிதி ஆதரவு பற்றியும் எடுத்துரைத்தார்.

பின்னர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவரும் சமூக அடித்தளத் தலைவருமான ஹாஜி அ.முஹம்மது பிலால், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் சிங்கப்பூரர்களின் மேம்பாட்டிற்கும் தலைவர்கள் உருவாக்கி கட்டிக்காத்த நல்லிணக்கமும் கல்வியும் இன்றுவரை அரணாக இருந்து வருவதையும் அதை சமூகம் கட்டிக்காத்து தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இணைப் பேராசிரியர் முனைவர் ரஸ்வானா பேகம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.அன்பரசு ஆகியோருக்கு புரவலர் ஹாஜி முஹம்மது ரஃபீக்கும் திரு ஆதம் சாஹுல் ஹமீதும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்வின் இறுதியில் ஆன்மீக இசை முரசு நெல்லை எஸ்.எம்.அபுல் பரக்கத்தின் இனிய பாடல்களோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இந்திய முஸ்லிம் பேரவையின் உதவி பொதுச் செயலாளர் அப்துல் மாலிக் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்