தன்னைப் பார்த்துக்கொள்பவர் என்றுகூட பாராமல், 33 வயது தாதியரான குமாரி தேவி ராமன் ஒரு நோயாளியால் தாக்கப்பட்டார். எனினும், டான் டோக் செங் மருத்துவமனையில் கடந்த 11 ஆண்டுகளாக தாதியாகப் பணிபுரியும் குமாரி தேவிக்கு இதுபோன்ற நிலைக்கு ஆளாவது ஒன்றும் புதிதல்ல.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயதான நோயாளி ஒருவர், தனக்குக் குளிர்ந்த நீர் வேண்டும் என்று அடம்பிடித்து தாதியர்களை மீறி வெளியே செல்ல முயன்றபோது அவரைத் தடுத்த தாதியர்களை அடித்துத் தகாத வார்த்தைகளில் திட்டியதை நினைவுகூர்ந்தார் குமாரி தேவி.
அவர் தன் கைகளையும் குத்தித் தகாத சொற்கள் பேசியதாக தேவி குறிப்பிட்டார். இதற்கு முன் இந்த நோயாளி முரட்டுத்தனமாக நடந்துகொண்ட சம்பவம் இருந்துள்ளதால், இம்முறை சில நொடிகளில் பாதுகாவலர்கள் உடனடியாக அங்கு வந்தனர்.
“நான் பணிபுரிந்த பிரிவில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. எங்களை அடித்து, புண்படுத்தும் வகையில் நோயாளிகள் சிலர் பேசுவார்கள். சிலரின் குடும்பத்தாரும் இப்படி நடந்துகொள்வதுண்டு,” என்றார் இவர்.
இருப்பினும் நோயாளி தாதியரைத் தாக்கினால் அதை எதிர்த்துச் சக நோயாளிகள் குரல் கொடுப்பதும் உண்டு என்று கூறினார் தேவி.
“எங்களைத் தகாத வார்த்தைகளால் பேசும்போது பக்கத்தில் உள்ள நோயாளிகள் அவர்களைத் தட்டிக் கேட்பார்கள். மருத்துவமனையின் ஆதரவு மட்டுமின்றி சக மருத்துவ ஊழியர்களும், நோயாளிகளின் ஆதரவும் இந்த பணியில் தொடர்ந்து இருக்க எனக்கு ஊக்கம் அளிக்கிறது,” என்றார் இவர்.
குமாரி தேவி பார்த்துக்கொள்ளும் சில நோயாளிகள் மனரீதியாக நலமில்லை என்பதால்தான் டான் டோக் செங் மருத்துவமனை தனது மருத்துவர்களையும் தாதியர்களையும் பாதுகாக்கும் வகையில் முயற்சியெடுத்து வருகிறது.
“இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் மருத்துவமனையின் பாதுகாவலர்கள் உடனே சம்பவ இடத்திற்குச் சென்றுவிடுவார்கள். சம்பவம் மோசமாகும் நிலையில் காவல்துறையினர் அழைக்கப்படுவார்கள். மருத்துவமனையில் வேலை செய்யும் அனைவருடைய பாதுகாப்பும் எங்களின் பொறுப்பு,” என்று மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்யும் குழுவில் இருக்கும் திருமதி கீதா பட்டாத் ராகவன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சுய நினைவுடன் இருந்து முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் நோயாளிகளின் படுக்கை அருகில் பாதுகாவலர்கள் நிறுத்தப்படுவர். ஆனால் நோயால் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்த நோயாளிகளுக்கு அவ்வாறு தேவையில்லை என்றும் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் சொன்னார் திருமதி கீதா.
இதுபோன்ற துன்புறுத்தலைக் கண்டு அஞ்சாமல் எப்படி புகார் செய்வது, எப்படி தற்காத்துக் கொள்வது என்று முக்கிய ஆலோசனைகளை மருத்துவப் பணியாளர்களுக்கு எடுத்துக்கூற இந்த மருத்துவமனை பல பயிற்சிகளும் வகுப்புகளும் நடத்தி வருகிறது என்றார் திருமதி கீதா.
இந்த சம்பவத்திற்குப் பிறகு மருத்துவமனை அவருக்குத் தகுந்த உதவியை வழங்கியதாகவும் குறிப்பிட்டார் குமாரி தேவி.
“உடல்ரீதியாக என்னைப் பரிசோதித்த பிறகு, என் மனநலனையும் மதிப்பிட மனநல ஆலோசனைக்கு என்னை அனுப்பி வைத்தார்கள். காவல்துறையிடம் புகார் செய்ய எனக்கு ஊக்கமும் தந்தனர். உடல்ரீதியாகக் குணமடைய எனக்கு விடுப்பும் தரப்பட்டது,” என்று தனக்குக் கிடைத்த ஆதரவைப் பற்றி பகிர்ந்துகொண்டார் குமாரி தேவி.
11 ஆண்டுகளில் இதுபோன்ற பல சம்பவங்களை அனுபவித்தும் இவர் மனம் தளராமல் தொடர்ந்து நோயாளிகளுக்குச் சேவை செய்ய டான் டோக் செங் மருத்துவமனை அளிக்கும் ஆதரவும் பணியின் மீது இவருக்கு இருக்கும் ஆர்வமும் காரணங்கள் என்று குறிப்பிட்டார்.
“எங்களைப் போன்ற தாதியர்களும் சக மனிதர்கள்தான் என்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள். தொற்றுநோய்க் காலத்தில் எங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் எங்களுக்கு வெளியில் அவமரியாதை கிடைக்கவே செய்கிறது. எங்கள் அருகில் வந்தால் நோய் தொற்றிவிடும் என்ற அச்சத்தால் பலர் எங்களைச் சரியாக நடத்துவதில்லை,” என்று கவலையுடன் குறிப்பிட்டார் குமாரி தேவி.
இதன் தொடர்பில் மருத்துவப் பணியாள்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற எச்சரிக்கை கொண்ட சுவரொட்டிகள் மருத்துவமனை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன என்று திருமதி கீதா விளக்கினார்.
இதுபோன்ற நடத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படாது என்பதை அனைவரும் உணரவேண்டும் என்றார் திருமதி கீதா.
மேலும், தகாத முறையில் நடந்துகொள்ளும் நோயாளிகளும் அவரின் குடும்பத்தாரும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற எச்சரிக்கை இத்தகைய நடத்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறார் திருமதி கீதா.
மருத்துவமனைகளோடு நின்றுவிடாமல் பள்ளிகளிலும் வெளியிடங்களிலும் இதுபோன்ற துன்புறுத்தலுக்கு எதிரான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று குமாரி தேவியும் திருமதி கீதாவும் கேட்டுக்கொண்டனர்.

