சிங்கப்பூர்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான நெப்போலியனின் ‘இரைக்கு அலையும் நிகழ்’, ‘புல்வெட்டி’ ஆகிய இரு கவிதை நூல்கள் சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளியீடு கண்டன.
ரேஸ் கோர்ஸ் ரோடு - அஞ்சப்பர் உணவகம், நிகழ்வரங்கு (மாடியில்) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாடர்ன் மோண்டிசோரி இன்டர்நேஷனல் குழுமத் தலைவர் டாக்டர் டி. சந்துரு, இந்திய மரபுடைமை நிலையத் தலைவர் ரா. ராஜாராம், முஸ்தபா தமிழ் அறக்கட்டளைத் தலைவர் மு.அ. முஸ்தபா மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் கலை, இலக்கியப் பிரமுகர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.
நெப்போலியன் எழுதி, இசையமைத்த “ தமிழைப்போல மொழிகள் இல்லை என் தாய் மொழி தமிழே” எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவரது மகள்கள் ரெமிலா, ஜெனிலா இருவரும் இணைந்து பாடி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.
“தமிழ் மொழிக்கும், உள்ளூர்த் தமிழ்ப் படைப்புகளுக்கும் சிங்கப்பூர் அளித்து வரும் ஆதரவு மிக முக்கியமான ஒன்று. நெப்போலியனின் கவிதை நூலில் சிங்கப்பூரைப் பிரதிபலிக்கும் கவிதைகள் மிக முக்கியமானவை,” என்றார் திரு ரா. ராஜாராம் .
“நெப்போலியனின் இடைவிடாத படைப்பு முயற்சியும் அவரது கவிதைகளும் இது போன்ற நூல் வெளியீடுகளும் சிங்கப்பூரின் தமிழ் மொழிக்கும் சிங்கையில் தொடர்ந்து வளரும் தமிழுக்கும் சான்றாகும் “ என்று டாக்டர் டி. சந்துரு கூறினார்.
தனது ஒவ்வொரு படைப்பிற்கும் சிங்கப்பூர்த் தமிழ் சமுதாயம் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவே தமக்கு பெரும் ஊக்கம் என்று கவிஞர் நெப்போலியன் குறிப்பிட்டார்.