தென்கொரிய நிகழ்ச்சியில் இந்தியச் சேலை

சிங்கப்பூரைச் சேர்ந்த 27 ஆடை வடிவமைப்பாளர்கள், சிங்கப்பூரில் மாறிவரும் ஃபேஷன் போக்குகளை தங்களின் ஆடை அலங்காரம் மூலம் தென்கொரியாவின் சோல், பூசான் நகரங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

அவர்களில் ஒருவரான கவிதா துளசிதாஸ், இந்நிகழ்வுக்காக இந்திய மரபையும் சிங்கப்பூர் அடையாளத்தையும் உள்ளடக்கிய ஓர் அழகான சேலையை வடிவமைத்திருந்தார்.

அண்மையில் ‘சிங்கப்பூர் ஸ்டோரீஸ்’ எனும் தேசிய ஆடை அலங்காரப் போட்டியில் வாகை சூடிய கவிதா, தமது ஆடை வடிவமைப்புகளில் எப்பொழுதும் சிங்கப்பூரர் எனும் தன் அடையாளத்தின் தாக்கம் இருக்க வேண்டுமென்று விரும்புபவர்.

இந்தியப் பாரம்பரிய உடைகள்மீது அதிக நாட்டம் கொண்டுள்ள இவர், தமது வடிவமைப்பில் தென்கொரியாவில் காட்சிப்படுத்தப்படும் ஆடை, சேலையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

லாசால் கலைக் கல்லூரியின் நாகரிகப்பாணிப் பள்ளியும் சிங்கப்பூர் நாகரிகப்போக்கு மன்றமும் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தோடு கைகோத்து கொரிய அறநிறுவனத்தின் ஆதரவில், ‘#எஸ்ஜிஃபேஷன்நவ்’ நிகழ்வின் மூன்றாவது பதிப்பில் முதல் முறையாக சிங்கப்பூருக்கு அப்பாற்பட்டு தென்கொரியாவில் சமகால ஆடை வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தின.

‘#எஸ்ஜிஃபேஷன்நவ்’ எனும் ஆண்டுதோறும் நிகழும் ஆடையலங்கார நிகழ்வானது, சிங்கப்பூரின் சமகால புதுபாணிக் கூறுகளை மையமாக வைத்து நடைபெறும் ஓர் நிகழ்வு.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே கலாசாரப் பாலமாகத் திகழும் இந்நிகழ்வு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. சென்ற மாதம் தொடங்கிய இந்நிகழ்வு, அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் நிறைவுபெறும்.

தாம் வடிவமைத்த சேலைக்கு மலாய் இனத்தவர் விரும்பி அணியும் கெபாயா உடையை ரவிக்கையாக மாற்றியமைத்துள்ளார் கவிதா.

வெள்ளை மலர்ச் சரிகையை மெருகூட்டும் நீல, தங்க நிற மணிகள் கொண்ட அச்சேலையின் பார்சி கலாசார வேலைப்பாடுகள், முழுக்க முழுக்க கைவேலைப்பாடுகள். தூய்மையை வெளிப்படுத்தும் விதமாக சேலையில் மலர் வடிவங்கள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

இந்தியப் பின்னணியின் வெளிப்பாடாக மிளிரும் அந்தச் சேலையை விளக்கிய கவிதா, “சேலை எக்காலத்திற்கும் ஏற்ற உடை. எனக்கு பார்சி வேலைப்பாடுகள் மிகவும் பிடிக்கும். சீனாவில் தொடங்கிய இந்த வேலைப்பாடானது, பின்னர் இந்தியாவிலும் பரவியது. தொடக்கக் காலங்களில் இந்திய உடைகளில் அதன் தாக்கம் மிகுதியாக இருந்தது,” என்றார்.

ஆடை வடிவமைப்பு தனது படைப்பாற்றலாக இருந்தாலும், சேலையை உருவாக்கிய கைவினைஞர்களின் அயராத உழைப்புக்கு ஈடு எதுவும் இல்லை என்று மெச்சினார் கவிதா.

கிட்டத்தட்ட ஒன்பது மாத உழைப்பில் உருவான கவிதாவின் படைப்பு, இந்தியர்களைத் தங்களின் வேர்களுடன் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாகரிகப்போக்கு என்பது ஒருவரின் அடையாள உணர்வு என்று கூறும் கவிதா, அதனுடன் பின்னிப் பிணைந்துள்ளார். தன் தாயாரைப் பார்த்து இத்துறையில் சாதிக்கும் முனைப்பை அவர் வளர்த்துக்கொண்டார்.

பெரும்பாலோர்க்கு அறிமுகமான ‘ஸ்டைல்மார்ட்’ ஆடை கடையின் இயக்குநரான கவிதா, ஆடை வடிவமைப்பில் தொடர்ந்து சோதனை முயற்சிகளை மேற்கொள்கிறார்.

18 வயதில் தனது முதல் ஆடைத் தொகுப்பை வெளியிட்ட அவர் பல்வேறு பரிணாமங்களை எடுக்கும் நாகரிகப்பாணித் துறையில் ஒருவர் நிலைத்து நிற்க நாகரிகப் போக்குகளை உடனடியாக கண்டறிந்து விழிப்புடன் இருக்க வேண்டுமென்றார்.

தம் தொழிலில் வெற்றி நடைபோடும் பல முன்மாதிரிப் பெண்கள் தம் வாடிக்கையாளர் பட்டியலில் இருப்பதாக குறிப்பிட்ட கவிதா, நாகரிகப்போக்குத் துறையில் திறன்களை வளர்த்துக்கொள்வதையும் வேலைப்பாடு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதையும் சவால்களாக சுட்டினார்.

சிங்கப்பூரில் ஆடை வடிவமைப்புகளுக்குத் தேவைப்படும் கைவினைஞர்கள் குறைந்துவரும் நிலையில் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளதாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

ஆடை வடிவமைப்பாளர் ஆகாமல் இருந்திருந்தால் ஊடகத் துறையில் நுழைந்திருக்கக்கூடும் என்ற கவிதா அடுத்து, பாரிஸ் நகரத்தில் நடக்கவிருக்கும் நாகரிக ஆடையலங்கார வார நிகழ்வில் தனது ஆடை வடிவமைப்புகளை காட்சிப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!