தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்புத் தேவைகள் கொண்ட மகனை ஆளாக்கிய சிறந்த தாய்

2 mins read
முகமது அர்ஷட் ஃபவாஸ்: கடினமான சூழ்நிலைகளிலும் என்னை வளர்த்து ஆளாக்கிய என் அன்புத் தாயே என் முன்மாதிரி
aa6184ae-0fbe-470e-a9c2-612e53d74dfa
‘ஜாமியா சிங்கப்பூர்’ அறநிறுவனம் நடத்திய ‘முன்மாதிரித் தாயார்’ விருதுக்கான இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற திருமதி மெஹரூன் நிஷா, 52, அவரது மகன் முகமது அர்ஷட் ஃபவாஸ், 26. - படம்: முகமது அர்ஷட் ஃபவாஸ்

ஒற்றைத் தாயாக சிறப்புத் தேவையுடைய மகனை வளர்த்து இன்று அவரைப் புகழ்பெற்ற பாடகராகவும் ஒரு நிறுவனத்தின் தோற்றுநராகவும் ஆளாக்கியுள்ளார் திருவாட்டி மெஹரூன் நிஷா, 52.

‘ஜாமியா சிங்கப்பூர்’ அறநிறுவனம் நடத்திய ‘முன்மாதிரி தாயார்’ விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஐந்து தாய்மார்களில் இவரும் ஒருவர்.

செப்டம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் நடந்த பரிசளிப்பு விழாவில் திருவாட்டி மெஹரூன், முதல் பரிசைப் பெறாவிடினும் வாழ்வில் அவரும் ஒரு வெற்றியாளரே.

ஏழாண்டுக் காதலுக்குப் பின் நடந்த அவரது திருமணம், ஐந்தாண்டு நிறைவை நெருங்கும்போது முறிந்துபோனது. அன்பும் அரவணைப்பும் நிறைந்த நினைவுகள், சுடுசொற்கள், வன்முறை, மணவிலக்கு என்ற வடுக்களாயின.

இருப்பினும், தான் தவமிருந்து பெற்ற, அப்போது ஒன்றரை வயதாக இருந்த மகனை வளர்த்து ஆளாக்கவேண்டும் என்ற தன்முனைப்போடு தனியாகப் போராடினார் திருமதி மெஹரூன்.

அவரது வாழ்வையே மாற்றும்படியான மற்றொன்றும் நிகழ்ந்தது. அவரது மகனின் பாலர் பள்ளி ஆசிரியர்கள், “அவர் மற்ற குழந்தைகள் போல் இல்லை; பிறரைத் தள்ளுகிறார். இடி விழுந்தால் மேசைக்குக் கீழே ஒளிந்துகொள்கிறார்,” என்று பலமுறை புகாரளித்தனர்.

மகனுக்கு ‘ஏடிஹெச்டி’ எனும் கவனக்குறைபாடும் ‘ஆட்டிசம்’ எனும் தொடர்புத்திறன் குறைபாடும் இருப்பது தெரிந்தவுடன் மனந்தளரவில்லை அவர்.

“கல்வி முக்கியம். ஆனால், வாழ்க்கைத் திறன்கள் அதைவிட முக்கியம். எனவே, அவர் பள்ளியில் ஒரு மதிப்பெண் பெற்றாலும் அவரைப் பாராட்டுவேன்,” என்றார் இந்த அன்புத் தாயார்.

அவரது ஊக்குவிப்பில் இன்று உயிரோவியப் பயிற்றுவிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், மாய வித்தைக் கலைஞர், நிகழ்ச்சி நெறியாளர் என பன்முகம் கொண்ட திறனாளராக உயர்ந்து நிற்கிறார் முகமது அர்ஷட் ஃபவாஸ், 26. கோ சோக் டோங் விருது, என்விபிசி, எஃப்டபிள்யூடி விருதுகளையும் பெற்றுள்ளார் இவர்.

தாயாரும் மகனும் ‘ஜாமியா’, ‘பெர்தாபிஸ்’ போன்ற உள்ளூர் அறநிறுவனங்களுக்கும் பாகிஸ்தான், இந்தோனீசியா, மலேசியா என மற்ற நாடுகளில் உள்ள சிறுவர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் டீன் டீட் டுனியா சேவைகள்வழி நிதி திரட்டியும் நேரடியாகவும் தொண்டாற்றுகின்றனர்.

‘இன்க்லூசிவிடி ஃபார் ஆல்’ என்ற சமூகநோக்கு நிறுவனத்தை அர்ஷட்டும் தாயாரும் கொவிட்-19 பொழுது தொடங்கினர். இதன்வழி இரண்டரை ஆண்டுகளில் ஒன்பது இணையவழி இசை நிகழ்ச்சிகளை வழங்கி சிறப்புத் தேவை உடையோர் தங்கள் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பளித்துள்ளனர்.

வரும் அக்டோபரில் நேரடி இசை நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்து சிறப்புத் தேவை உடைய கலைஞர்களை ஊக்கப்படுத்த விரும்பும் தாய்-மகன் தொடர்ந்து நிதி திரட்டி வருகின்றனர்.

“சில நேரங்களில் பணம் இல்லாதிருந்தபோது எங்கள் கதவைத் தட்டி உணவுகூட அன்பு நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதனால், பிறருக்கு உதவ என் மகனுக்கும் கற்றுக்கொடுக்கிறேன்.

“சிறப்புத் தேவை உடைய பிள்ளைகள் பலரின் பெற்றோருக்கும் அவர்களுக்குப் பிறகு பிள்ளைகள் எவ்வாறு சமாளிப்பர் என்ற கவலையுண்டு. அர்ஷட் தன்னால் தனியாக சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறார்,” என்றார் உடல்நலப் பிரச்சினைகளைத் தாங்கிவரும் திருமதி மெஹரூன்.

“கடினமான சூழ்நிலைகளிலும் என்னை வளர்த்து ஆளாக்கிய என் அன்பு அம்மாவே என் முன்மாதிரி,” என்றார் அர்ஷட்.

குறிப்புச் சொற்கள்