பிரபல ‘கறிபஃப்’ கடைஒன்றுக்கு வெளியே சனிக்கிழமை (செப்டம்பர்) பிற்பகல் நேரத்தில் வாடிக்கையாளர் வரிசை நீண்டுகொண்டு சென்றிருந்தது.
நாவூர வைக்கும் கமகம கறிக்குழம்பு கலந்த ரொட்டி வாசனை. ஆவலுடன் கடைக்குள் சென்று அட்டைப் பெட்டிகளுக்கு பதார்த்தங்களுடன் வெளியே வரும் வாடிக்கையாளர்கள்.
காத்தோங் வட்டாரத்திலுள்ள ஓனன் ரோட்டில் அமைந்துள்ளள ‘இந்தியன் முஸ்லிம் பேக்கரி அண்ட் கன்ஃபெக்ஷனரி’ என்ற அந்தக் கடை, 1942 முதல் செயல்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமையுடன் மூடியுள்ள அந்தக் கடை, இனி இங்கு மக்களுக்குத் தனது கதவுகளைத் திறக்காது.
இதற்கான காரணம் கொடுக்கப்படவில்லை. மூடல் குறித்த அறிவிப்பை அந்தக் கடை, கடந்த வியாழக்கிழமையன்று வெளியிட்டது. மூடலுக்கான காரணத்தைக் கேட்டறிய வேண்டாம் என்று அந்தக் கடை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது. தமிழ் முரசுக்குப் பதில் கொடுக்கவும் கடை உரிமையாளர்கள் மறுத்தனர்.
மாவும் வெண்ணெய்யும் கலந்து பாதியாக மடக்கப்பட்டு தயாரிக்கப்படும் ‘கறிபஃப்’ என்ற பதார்த்தத்தை இந்தக் கடை விற்கிறது. சதுரங்கமாக, முக்கோணமாக அல்லது அரைவட்ட வடிவில் காணப்படும் ‘கறிபஃப்’ பிற்குள் இறைச்சிக் குழம்பு உருளைக்கிழங்கு, முட்டை, இறைச்சி போன்றவை இருக்கும்.
ஷெய்க் ஜென் புக்ஸ் என்ற பங்ளாதேஷ் நாட்டவர் இந்தக் கடையை நிறுவியதாக ‘மதர்ஷிப்’ இணையப்பக்கம், ‘மாக்கான் சூத்ரா’ தளத்தை மேற்கோள் காட்டி குறிப்பிட்டது.
கடை நிறுவனரின் வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாவது தலைமுறையினர் இந்தக் கடையை நடத்தி வருவதாகவும் அந்தத் தளம் குறிப்பிட்டது.
கடை மூடல் குறித்து ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமையன்று பதிவு செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரின் அமின், தம் காலஞ்சென்ற தாத்தா இந்தக் கடையிலிருந்து ‘கறிபஃப்’களை அடிக்கடி, குறிப்பாக ரமலான் நோன்புக் காலத்தில், வாங்கித் தந்ததை நினைவுகூர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் தாம் தங்கியிருந்தபோதும் இந்தக் ‘கறிபஃப்’களை வாங்கி உறையவைத்து அங்கு மறுபடியும் சூடாக்கிச் சாப்பிட்டதாகத் திரு அம்ரின் குறிப்பிட்டார்.
கடை மூடப்படுவது குறித்த செய்தியை அறிந்ததும் கணவருடனும் ஒரு வயது மகனுடனும் வந்திருந்ததாக அயிஷா, 30, தமிழ் முரசிடம் தெரிவித்தார். “கடை மூடும்போதுதான் இதனைப் பற்றி அறிகிறேன் என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற அரிய உணவுக் கடைகள் குறித்த கட்டுரைகளும் காணொளிகளும் கூடுதலாக வெளிவந்திருக்கவேண்டும்,” என்றார்.
இவ்வட்டாரத்திலுள்ள பல்வேறு கடைகளிலிருந்து கறிபஃப் வாங்கி ருசிக்கும் முன்னாள் வங்கியாளர் கிளமெண்ட், இக்கடையின் மிளகாய் மாட்டிறைச்சி கறிபஃப்பை பெரிதும் விரும்புவதாகக் கூறினார். “இருந்தபோதும் இந்தத் தரத்தில் கறிபஃப் விற்கும் மற்ற கடைகள் இந்த வட்டாரத்திலேயே பல உள்ளன,” என அவர் குறிப்பிட்டார்.

