சிங்கை நாமக்கல் சங்கத்தின் பவள விழா கொண்டாட்டம்

சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தில் தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து மக்கள் வாழ்வாதாரம் தேடும் நோக்கத்தில் சிங்கப்பூருக்கு வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவு வழங்கும் விதமாக நாமக்கல் தாலுகா நலனபிவிருத்தி சங்கம் 1948ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி நிறுவப்பட்டது. நாமக்கல் பகுதி மக்கள் ஒன்றிணைந்து செயற்படுதல், ஆதரவற்றோருக்கு முறையான உதவியை வழங்குதல் முதலியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு சங்கம் செயல்படத் தொடங்கியது.

இருமுறை பெயர் மாற்றம் கண்ட சங்கம் தற்போது சிங்கை நாமக்கல் சங்கம் என்றழைக்கப்படுகிறது. கல்வி, பண்பாடு என பல அம்சங்களில் கவனம் செலுத்தி ஆக்ககரமான செயல்களில் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கம் தொடங்கப்பட்டபோது ஏறத்தாழ 50 குடும்பங்கள் மட்டுமே இருந்தன. இன்று 200 குடும்பங்களுக்கும் அதிகமாக வளர்ந்து அவர்களின் மரபையும் கலாசாரத்தையும் சங்க உறுப்பினர்கள் கட்டிக்காத்து வருகிறார்கள்.

சங்கத்தின் இவ்வாண்டு நிகழ்வுகளில் முத்தாய்ப்பாக திகழ்ந்தது அதன் 75ஆம் ஆண்டு பவள விழா கொண்டாட்டம்.

‘நமது மரபுடைமை நமது எதிர்காலம்’ எனும் கருப்பொருளில் சென்ற சனிக்கிழமை மாலை ஆர்க்கிட் கண்ட்ரி கிளப் வளாகத்தில் இடம்பெற்ற இக்கொண்டாட்டத்தில் 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். வந்தவர்களுக்கு அன்பளிப்பாக சங்கத்தின் வரலாறு ஆவணப்படுத்தப்பட்ட புத்தகம் வழங்கப்பட்டது.

கடந்த 2008ஆம் ஆண்டு, சங்கம் தனது 60ஆம் ஆண்டில் வைர விழாவைக் கொண்டாடியது. அதற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் பல முக்கியமான அங்கங்கள் இடம்பெற்றன.

அவற்றில் ஒன்று, கொண்டாட்ட நிகழ்வில் இடம்பெற்ற ஆவணப்படம். சங்கத்தின் கூறுகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது.

சங்கத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் நாமக்கலுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டனர். தங்களின் பூர்வீக கிராமங்களுக்குச் சென்று, தங்களின் சமுதாய வரலாற்றைப் புரிந்துகொண்டு ஆவணப்படத்தை உருவாக்குவதற்கான தகவல்களை அவர்கள் திரட்டினர்.

பயணத்தின் வேறோர் அங்கமாக குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் குலதெய்வக் கோவில்களுக்கு அவர்கள் சென்றனர். பாரம்பரிய ஒயிலாட்டத்தைக் கண்ட அனுபவம் ஒருபுறம் இருக்க, அங்கிருக்கும் பள்ளிக்கும் அவர்கள் சென்றனர்.

தற்செயலாக பள்ளியில் அன்று, கல்வியில் சிறப்புத் தேர்ச்சி கண்ட முதல் ஐந்து மாணவர்களுக்கு நாமக்கல் சங்கத்தில் முன்பு உறுப்பினராக இருந்த மறைந்த திருவாட்டி காளியம்மாளின் ஆதரவில் விருது வழங்கப்பட்டது.

கோழிப் பண்ணைகளுக்கும் லாரி கட்டுமானத் தொழிலுக்கும் பெயர்போன நாமக்கல்லுக்குச் சென்ற அவர்கள், அவற்றைக் காணும் வாய்ப்பை விட்டுவிடவில்லை.

இரண்டு பாக ஆவணப்படத் தொடரின் முதல் பாகத்தில், நாமக்கலில் இருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த முன்னோர்களின் வரலாறு இடம்பெற்றது.

குலதெய்வ வழிபாடு, கொங்குநாடு வரலாறு, பாரம்பரிய இசை, உணவு, இலக்கியம், நடனம், குடும்பத்தில் தாய்மாமனின் பங்கு, திருமணச் சடங்குகள், திருமணச் சடங்குகளில் அருமைக்காரரின் பங்கு, சமூகத்தில் பச்சை குத்தும் சிறப்பு போன்றவற்றை முதல் பாகத்தில் அறியலாம்.

இரண்டாம் பாகத்தில், வேலைவாய்ப்புகளுக்காக சிங்கப்பூரை நாடி வந்த முன்னோர்கள் பற்றி விளக்கப்பட்டது. மேலும், அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் சமுதாயத்தினரைக் கவனிக்க ஒற்றுமையுடன் சங்கத்தை உருவாக்கிய விதம், சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகள், கோவில்களிலும் அடித்தள அமைப்புகளிலும் சேவையாற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அம்சங்கள் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றது.

கொண்டாட்ட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், “சிங்கை நாமக்கல் சங்க சமுதாயத்தினர் தங்களது தனித்துவம், பாரம்பரியம், மரபுடைமை, தமிழ்மொழி வளர்ச்சி போன்றவற்றை கட்டிக்காக்க விழைகின்றனர். இந்தப் பாராட்டத்தக்க முயற்சியை முன்னெடுத்துச் செல்ல சமுதாயத்தைச் சேர்ந்த இளையர்கள் முன்வர வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

கொண்டாட்டத்தில் வேறொரு முக்கிய அம்சமாக, பல ஆண்டுகளாக சங்கத்தில் சேவையாற்றியதற்காக ஐந்து முன்னோடி உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். ஆடல் பாடலுடன் களைகட்டிய நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷனுக்கு $7,500 காசோலையைச் சங்கம் வழங்கியது.

இளையர்கள் சங்கத்தில் ஈடுபாட்டுடன் சேர வேண்டும் என்ற முனைப்பில் சங்கத்தின் பவள விழா கொண்டாட்டத்தில் இளையர்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் நடைபெற்றது.

சிங்கை நாமக்கல் சங்கத்தின் துணைத் தலைவரும் பவள விழா கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுச் குழுவின் துணைச் செயலாளருமான ஆர். செல்வராஜு, இந்தக் கொண்டாட்ட விழாவில் பல அம்சங்களில் பங்காற்றியுள்ளார்.

தமது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், “ஜனவரி மாதத்திலிருந்து நாங்கள் கொண்டாட்ட விழாவுக்கான ஏற்பாடுகளில் முழுவீச்சில் இறங்கினோம். சமுதாயத்தைச் சார்ந்த சங்கமாக இருப்பதால் இனிமேல் இதை முன்னெடுத்து செல்ல இளையர்கள் நிச்சயமாக முன்வர வேண்டும்.” என்று கூறினார்.

சிங்கை நாமக்கல் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளருமான திருவாட்டி குணவதி நல்லதம்பி விழாவில் ஆவணப்படம் பெரிய அங்கமாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தை வித்திட்டவர்.

ஆவணப்படத்தை தயாரிக்க தனது குழுவோடு அதிக நேரத்தை அர்ப்பணித்த அவர், “எங்கள் சமுதாயத்தின் வரலாற்றை மக்களுக்கு கொண்டு சேர்க்க ஆவணப்படத்தை காட்சிப்படுத்துவதை தவிர வேறு எந்த யோசனையும் எனக்கு தோன்றவில்லை. இதற்கு பிறகு நாங்கள் இளையர்களை ஈர்க்கவும் சங்கத்தை பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டு தேசிய மரபுடைமைக் கழகத்தோடு இணைந்து கண்காட்சியையும் நடத்தவுள்ளோம்.” என்றார்.

கொண்டாட்ட விழாவில் சங்கத்தின் இளைய உறுப்பினர்களில் சிலர் நெறியாளர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவரான சந்திரசேகர், 41, ஐந்து பேர் கொண்ட நெறியாளர் குழுவை உருவாக்கினார். “நமது பாரம்பரியமும் மரபுடைமையையும் இக்காலத்து இளையர்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. உலகமயமாக்குதலில் ஒருவரின் அடையாளம் அவரது கலாசாரத்தை ஒட்டியே இருக்கிறது,” என்று திரு சந்திரசேகர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!