இந்தியக் கலாசாரத்தையும் மலாய்க் கலாசாரத்தையும் இணைக்கும் பாலமாக அமையவிருக்கிறது ராடின் மாஸ் எனும் நடன படைப்பு.
சிங்கப்பூர் வரலாற்றை நினைவுகூரும்போது பலருக்கு ஜாவானிய இளவரசியான ராடின் மாஸ் ஆயு நினைவிற்கு வராமல் போகலாம்.
பழங்கால தெலுக் பிளாங்கா கிராமத்தில் வளர்ந்த அந்த இளவரசி வாழ்வில் பட்ட துன்பங்களை முன்னிலைப்படுத்தி இப்படைப்பு உருவாக்கப்படுகிறது.
அழகு தேவதைபோல் தோற்றமளிக்கும் ராடின் மாஸ் ஆயு விடாமுயற்சிமிக்கவள். பல இன்னல்களுக்கு நெடுகிலும் வலிமையுடன் நடைபோடும் அவள் சிறு வயதிலேயே தனது தாயை இழந்துவிட்டவள். தந்தையோடு அவள் பகிர்ந்துகொண்ட அன்பும் பாசமும் நிறைந்த ஒரு படைப்பாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்துடன் ஜாவானிய நடனமும் கலந்து உருவான இந்தப் படைப்பில் தமிழர்களின் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஜாவானியக் கலாசாரத்தின் ‘குடா கெப்பாங்’ ஆட்டமும் இடம்பெறும். ‘வாயாங் குளிட்’ நாட்டுப்புறக் கலையும் மேடையேறவுள்ளது.
தெமாசெக் அறநிறுவனத்தின் ஆதரவில் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி முதன்முறையாக ஸ்ரீ வாரிசான் சோம் சையட் மலாய்க் கலை நிறுவனத்தோடு கைகோத்து இப்படைப்பைப் பெரிய அளவில் அடுத்த மாதம் படைக்கவுள்ளது.
கலை இயக்குநரும் மறைந்த திருவாட்டி சாந்தா பாஸ்கரின் மகளுமான மீனாட்சி பாஸ்கர், “இந்தியக் கலாசாரத்தில் இடம்பெறும் பரதநாட்டியத்துக்கு அப்பாற்பட்டு நாங்கள் ஸ்ரீ வாரிசான் சோம் சையட் நிறுவனத்தோடு இணைந்து ஜாவானிய நடன அம்சங்களையும் இந்தப் படைப்பில் இடம்பெறச் செய்துள்ளோம். பார்வையாளர்களின் கண்களுக்கு இது ஒரு புதிய விருந்தாக அமையும் என்று நம்புகிறேன்,” என்றார்.
அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு விக்டோரியா அரங்கத்தில் இந்த நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த 90 நிமிட படைப்பிற்கான நுழைவுச்சீட்டுகளைப் பொதுமக்கள் $25, $30 விலைகொடுத்து https://www.bhaskarsartsacademy.com/events/upcoming இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.