தமிழ் இலக்கியத்தில் காப்பியங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு என்பதை வலியுறுத்தியது இவ்வாண்டின் காப்பிய விழா.
ஐம்பெருங்காப்பியங்களில், குறிப்பாக சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இடம்பெறும் பெண்ணியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதமாகவும் பெண்களைப் போற்றும் விதமாகவும் விழா அமைந்தது.
கதைகளில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மூலம் மனிதன் வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை முன்னிலைப்படுத்தி காப்பிய விழாவில் முக்கியமான அம்சங்கள் அரங்கேறின.
ஞாயிற்றுக்கிழமை காலை தேசிய நூலகத்தின் ‘போட்’ அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் கலந்துகொண்டார்
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் எட்டாவது முறையாக நடைபெற்ற விழாவில் இலக்கியக் களத்தின் தலைவர் இரத்தின வேங்கடேசன் நோக்கவுரையாற்றினார்.
“தமிழனின் வாழ்வில் முக்கிய அங்கமாக இருப்பது நம் காப்பியம். அதன் மூலம் நாம் நம் மரபையும் கலாசாரத்தையும் ஆழமாக அறியலாம். காப்பியத்தின் அவசியம் நமக்கு தெரிந்தால்தானே நாம் பிறகு நம் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க முடியும்,” என்றார் அவர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக கவிதைநதி ந வீ விசயபாரதி வழிநடத்திய கவியரங்கம் அமைந்தது.
‘காப்பிய மாந்தர்கள் உணர்த்தும் அறம்’ என்ற தலைப்பை ஒட்டி கவியரங்கத்தில் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரங்களான மாதவி, கோவலன், காயசண்டிகை, ஆபுத்திரன், மணிமேகலை ஆகியோரைப் பற்றி ஐந்து கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாணவர் உரைவீச்சு அங்கத்தில் மாணவர்கள் இருவர் தங்களுக்குப் பிடித்த காப்பியக் கதாபாத்திரத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டனர்.
மாணவி முத்து சுவேதா, மணிமேகலையில் இடம்பெற்றுள்ள ஆபுத்திரன் கதாபாத்திரம் எவ்வாறு பிச்சை எடுத்து காணமுடியாதவர், கேட்கமுடியாதவர், நடக்கமுடியாதவர், முதலானோர் பலருக்கும் கொடுத்தபின் எஞ்சிய உணவை உண்டு உயிர் வாழ்ந்தான் என்பதை விளக்கிக் கூறினார்.
பிறகு அவனுக்கு அள்ள அள்ளக் குறையாமல் உணவு இருக்கும் பாத்திரம் ஒன்று கிடைத்தது. அந்த அமுதசுரபி பின்னர் மணிமேகலை கைக்கு வந்தது. அவ்வாறு பிறருக்கு உதவும் நெஞ்சம் படைத்த ஆபுத்திரன்போல நாமும் இருக்க பழகிக்கொள்ள வேண்டும் எனும் கருத்தை சுவேதா முன்வைத்தார்.
சுவேதாவைப் போலவே மாணவி வைஷ்ணவி கண்ணன் சிலப்பதிகாரத்தின் மாந்தர்களுள் ஒருவரான கவுந்தியடிகளைப் பற்றி விளக்கினார். கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு கவுந்தியடிகள் அழைத்து வருகிறார். ஊர்மக்கள் சிலர் கோவலனையும் கண்ணகியையும் பார்த்து நகைக்க, அவர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ளவில்லை என்று கூறி, கவுந்தியடிகள் அவர்களைச் சபிக்கிறார்.
மேலும், தமிழர் கலாசாரத்தில் விருந்தோம்பலின் அவசியத்தைப் புரியவைத்த கவுந்தியடிகள் கண்ணகியை நன்றாக கவனித்துக்கொண்டார். மனிதநேயம், விருந்தோம்பல் எனும் இரு முக்கியமான கலாசாரக் கூறுகளை கவுந்தியடிகள் மூலம் ஒருவர் கற்றுக்கொள்ளலாம் என்றார் வைஷ்ணவி.
அதன்பின், சமூகம், மொழி, பொதுச்சேவை இன்ன பிற பணிகளில் சிறந்திருக்கும் தமிழ்த்தம்பி ந.வீ. சத்தியமூர்த்திக்கு சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களம் அமைப்பு இவ்வாண்டிற்கான இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பித்தது. பின்னர் சிந்தனைச்செல்வர் ஸ்டாலின் போஸ் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த இல்லத்தரசி திருவாட்டி ரத்தினம், “நான் முதல் முறையாக காப்பிய விழாவுக்கு வந்திருக்கிறேன். ஐம்பெருங்காப்பியங்கள் படித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. இது போன்ற சமூக நிகழ்வுகளுக்கு நாம் நம் பிள்ளைகளையும் அழைத்து வந்தால் அவர்களுக்கும் இலக்கியத்தின் முக்கியத்துவம் புரியும்,” என்றார்.