தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் இந்திய நகைச்சுவையாளராக வலம் வரும் ரிஷி புத்ராணி

4 mins read
834523a8-4f7c-4489-af4a-52b5ebfe5340
நகைச்சுவை நிகழ்ச்சி படைக்கும் ரிஷி. - படம்: அமண்டா டான்
multi-img1 of 3

சிங்கப்பூர் மக்களிடையே நன்கு அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் ரிஷி புத்ராணி.

ஹாங்காங் அனைத்துலக நகைச்சுவைப் போட்டியில் வாகை சூடிய முதல் சிங்கப்பூரர் எனும் பெருமைக்கு இவரே சொந்தக்காரர்.

நடிகர், தொகுப்பாளர், நகைச்சுவையாளர் எனப் பன்முகம் கொண்ட இவர், இம்மாத இறுதியில் ‘ஆர்டிஃபிஷியல் இண்டியன்’ எனும் நகைச்சுவை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளார்.

சிந்தி மொழி பேசும் தையல்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷி, பிற இந்தியக் குடும்பங்களில் இருப்பதுபோல தாமும் ஒரு மருத்துவர், பொறியாளர் அல்லது வழக்கறிஞர் ஆவார் என்ற எதிர்பார்ப்புடன் வளர்ந்து வந்தார்.

ஆனால், அந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக, ரிஷி நகைச்சுவையாளருக்கு அப்பாற்பட்டு, எழுத்தாளர், பயிற்றுவிப்பாளர் என மற்ற துறைகளிலும் மிளிர்ந்து வருகிறார்.

பதின்ம வயதுகளில் எதிர்காலத்தில் எத்துறையில் கால்பதிக்கப் போகிறோம் என்ற குழப்பத்துடன் வாழ்ந்த ரிஷி, தான் நிச்சயமாக பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப்போவதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார்.

பள்ளிப் பருவத்தில் இந்தியக் கலாசார சமுதாயத்தின் நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்த ரிஷி, பின்னர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொடர்புத் துறையில் (Communication studies) இளநிலைப் பட்டம் பெற்றார்.

அதிலிருந்து அவர் நிகழ்ச்சி தயாரிப்புகளில் ஈடுபடத் தொடங்கினார். வேலைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பாளராக பொறுப்பேற்கும் வாய்ப்பு ரிஷிக்குத் தற்செயலாகக் கிட்டியது. அதனைச் சிறப்பாக மேற்கொண்ட அவர், பின்னர் நிகழ்ச்சிகளுக்கு நெறியாளராகச் செல்வதில் நேரத்தைச் செலுத்தினார். அவ்வப்போது கொஞ்சம் நகைச்சுவையோடு கலந்து பேசுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

நகைச்சுவைப் பாணியில் பேசி அசத்திய ரிஷி, தனக்கு அது எளிதாகக் கைவருவதை உணர்ந்தார். சிங்கப்பூரில் புகழ்பெற்ற நகைச்சுவையாளர்கள் குமார், ஃபக்கா ஃபஸ், மார்க் லீ போன்றவர்கள் வரிசையில், ரிஷி தன்னையும் இணைத்துக்கொள்ள விரும்பினார்.

நாடக வகுப்புகளுக்குச் செல்லும்போது தன் பயிற்றுவிப்பாளர் ஒருமுறை தன்னிடம், “உன்னால் பிறரைச் சிரிக்க வைக்க முடியும். உன்னால் சோக கதாபாத்திரம் எளிதாகச் செய்ய முடிவதால் உனக்கு நகைச்சுவை எளிதாக வரும்,” என்று கூறியது ரிஷியை அத்துறையில் கால்பதிக்கத் தூண்டியது.

இவரது நகைச்சுவை முழுக்க முழுக்க சிங்கப்பூரர் எனும் அடையாளத்தையும் சிங்கப்பூர் கதைகளையும் மையமாகக் கொண்டே விளங்குகிறது.

காற்பந்துமீது பேரார்வம் கொண்ட ரிஷி, இளவயதில் தன் நண்பர்களுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் முதல் தளத்தில் காற்பந்து விளையாடிய நாள்களை நினைவுகூர்ந்தார்.

பெரும்பாலும் மதுக்கூடங்களில் ரிஷி நகைச்சுவை நிகழ்ச்சிகள் வழங்குவதை நாம் காணலாம். நிகழ்ச்சி நடப்பதற்குமுன் அவர் பல வேலைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. பார்வையாளர் கோணத்தில் நகைச்சுவையைக் கேட்டுச் சிரித்துவிட்டுப் போனாலும் ஒருவரைச் சிரிக்க வைப்பது கடினம் என்பதுதான் உண்மை என்கிறார்.

“ஒரு பாடலை நாம் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கலாம். ஆனால், யாரும் நகைச்சுவையை, அதுவும் தனிக்குரல் நகைச்சுவையை (ஸ்டாண்ட் அப் காமெடி) நினைத்து நினைத்துச் சிரிக்க மாட்டார்கள்,” என்று ரிஷி கூறினார்.

வேலைச்சுமை பல நேரங்களில் ஆக்கிரமித்துக் கொண்டாலும், ரிஷிக்குத் தமது குடும்பம்தான் முதன்மையானது. சகோதரியுடன் வளர்ந்த அவருக்குத் தான் செல்லமாக வளர்க்கும் நாய்களுடன் மிக நெருக்கம். அத்துடன், நேரம் கிடைக்கும்போது பூங்காவிற்கு செல்வது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, சமூகச் சேவையில் ஈடுபடுவது போன்றவற்றுக்கும் அவர் நேரம் ஒதுக்குகிறார்.

வாழ்வில் தான் பல பேரைக் கண்டு ஊக்கமடைந்ததாகப் பகிர்ந்துகொண்ட ரிஷி, ரஸல் பீட்டர்ஸ் எனும் கனடிய நகைச்சுவையாளரை அதிகம் பார்த்து வளர்ந்ததாகக் குறிப்பிட்டார். அவரை நேரில் கண்ட அனுபவம் ரிஷிக்கு மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.

வேலையின் பொருட்டு சீனா, ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்றுள்ள ரிஷி, அண்மையில் அமெரிக்காவில் ஒரு மாதம் செலவிட்டார்.

அங்கு நியூயார்க், லாஸ் வேகஸ், லாஸ் ஏஞ்சலிஸ் ஆகிய நகரங்களுக்குச் சென்ற ரிஷி, அங்கிருந்த புகழ்பெற்ற ‘கோத்தம் காமெடி கிளப்’பில் நகைச்சுவை நிகழ்ச்சியைப் படைத்தார்.

வேலைக்கு அப்பாற்பட்டு அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் சிலரைச் சந்திப்பது, உணவு வகைகளைச் சுவைப்பது, உள்ளூர் மக்களோடு உரையாடுவது, மற்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என நேரம் செலவழித்தார்.

அமெரிக்கப் பயணம் தனக்குப் பிறரைச் சிரிக்க வைப்பதை விட ஒருவர் நகைச்சுவை மூலம் தன்னை எவ்வளவு வெளிப்படுத்த இயலும் என்பதைக் கற்றுத்தந்ததாக ரிஷி சொன்னார்.

ஒரே துறையைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ரிஷி, தன் மனைவி ஷாருல் சன்னாவை விசித்திரமான முறையில் சந்தித்ததாக கூறினார்.

தொடக்கத்தில் இந்தித் திரையுலகில் நடிகராக வேண்டுமென்ற ஆசை வைத்திருந்த ரிஷி, அதே விருப்பம் கொண்டிருந்த தன் மனைவியைப் பள்ளிப் பருவத்தில் சந்தித்துக் காதலித்தார். நகைச்சுவையாளராக இருக்கும் ஷாருல், ரிஷியின் தீவிர விமர்சகர். இணையர் இருவரும் ஒருவரை ஒருவர் ஊக்குவிப்பதோடு, தங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆலோசனை வழங்கவும் தவறுவதில்லை.

நகைச்சுவையாளர் ஆகாமல் இருந்திருந்தால் கல்வியாளராகி இருக்கக்கூடும் என்ற ரிஷி, எதிர்காலத்தில் நகைச்சுவைத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி போடும் சூழல் நேரிட்டால் பிறரின் பேச்சுத்திறனை வளர்க்க பயிற்றுவிப்பாளராகப் போவதாகக் கூறினார்.

தான் அமைத்துக்கொண்ட இந்த அர்த்தமுள்ள தொழில் தனக்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறிய அவர், அண்மைக் காலத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரை இழந்தார். இதனால் அவரது உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டன.

அத்துடன், கொவிட்-19 பரவல் காலத்திலும் அவரின் உடல்நலம் குன்றியது. முறையற்ற உணவுப் பழக்கமும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதும் அவரைப் புரட்டி போட்டது. ஆயினும், பின்னர் உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளரின் உதவியோடு, உடற்பயிற்சியில் முழு கவனம் செலுத்திய அவர், தற்போது மிடுக்காகத் தோற்றமளிக்கிறார்.

இம்மாதம் 29, 30ஆம் தேதிகளில் இடம்பெறவிருக்கும் அவரது நகைச்சுவை நிகழ்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் அறியாத வகையில் ஒரு இந்தியன் புதைந்து இருக்கிறான் எனும் கருத்தை முன்னிலைப்படுத்தி நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விவரங்களுக்கு https://sg.bookmyshow.com/e/RBAI2023 எனும் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்