செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாகும், தவறான ‘அறிவியல்’ தகவல்களைக்கொண்ட யூடியூப் காணொளிகள் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவதாக பிபிசி நிறுவனம் அண்மையில் கண்டறிந்துள்ளது.
ஏறத்தாழ 20 மொழிகளில், 50க்கு மேற்பட்ட கற்றல் தகவல்களைக் கொண்ட ஒளிவழிகள், தவறான தகவல்கலைப் பரப்புகின்றன என்கிறது அந்த பகுப்பாய்வு.
அறிவியல் ஆதாரமற்ற தகவல்கள், உண்மைக்குப் புறம்பான, நிரூபிக்கப்படாத கோட்பாடுகள், பொதுமக்களை வேண்டுமென்றே திசை திருப்ப முயலும் நம்பிக்கைகள் உள்ளிட்டவை, ஒரு குறிப்பிட்ட, செல்வாக்கு மிகுந்த குழுவின் நலனுக்காகப் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் உருவாகும் பிரமிடுகள், மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தை மறுப்பது, வேற்றுகிரகவாசிகளின் இருப்பு போன்ற, நிரூபிக்கப்படாத கோட்பாடுகளைக் காணொளிகளாக வெளியிடுகின்றன இவ்வகை ஒளிவழிகள்.
பரபரப்பான வர்ணனைகள், கவர்ச்சியான தலைப்புகள், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வியத்தகு படங்கள் என அழகிய அம்சங்களுடன் வரும் இக்காணொளிகள், குழந்தைகளாலும் பொதுமக்களாலும் அதிகம் பார்க்கப்படுகின்றன.
மக்கள் பார்வையிடுவதன் மூலமும் விளம்பரங்கள் மூலமும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவை வெளிவருகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ‘கல்விக் காணொளிகள்’ எனும் குறிச் சொற்களைக் கொண்டுள்ளதால் குழந்தைகளுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
பிபிசியின் குழு, அரபு, ஸ்பானிஷ், தாய் உள்ளிட்ட மொழிகளில், இதுபோன்ற தவறான தகவல்களைக் கொண்ட பல ஒளிவழிகள் உருவாகின்றன என்றும் அவற்றில் பல, ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட சந்தாதாரர்களையும் பார்வையாளர்களையும் கொண்டுள்ளதையும் கண்டறிந்துள்ளது.
காணொளிப் படைப்பாளர்கள் ஒவ்வொருநாளும் பல காணொளிகளை வெளியிட வேண்டியுள்ளது. அதனை விரைவாகச் செயலாக்க, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக, உண்மைபோலத் தோன்றும் உண்மைக்குப் புறம்பான காணொளிகளை உருவாக்குகின்றனர் என இந்த பகுப்பாய்வு குறிப்பிடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த பகுப்பாய்விற்காக தவறான தகவல்களைக் கொண்டு காணொளிகளைத் தயாரித்த பிபிசி நிறுவனக் குழு, குழந்தைகளுக்கான யூடியூப் கணக்குகளையும் உருவாக்கி அந்தக் காணொளிகளை பார்த்தனர். பின்னர் தொடர்ந்து அதேபோன்ற தவறான தகவல்கள் கொண்ட காணொளிகள் பரிந்துரைக்கப்படுவதையும் கண்டறிந்தனர்.
லண்டன், தாய்லாந்து போன்ற பகுதிகளில் உள்ள 10-12 வயதுடைய குழந்தைகளிடம் ஆதாரமற்ற அறிவியல் தகவல்கள் அடங்கிய காணொளிகளைக் காட்சிப்படுத்தியபோது, பெரும்பாலும் அவர்கள் அவற்றை நம்புகின்றனர்.
பத்திரிகையாளர்கள் அந்தக் காணொளிகள் செயற்கை நுண்ணறிவில் தயாரிக்கப்பட்ட தவறான தகவல்கள் அடங்கியவை என்று குழந்தைகளுக்கு விளக்கியபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கருத்துரைத்த யூடியூப் நிறுவனம், குழந்தைகளுக்கு 13 வயதிற்கு உட்பட்டோருக்கான யூடியூப் கிட்ஸ் எனும் தனிப்பட்ட செயலியைப் பரிந்துரைப்பதாகவும் அதில் வெளியாகும் காணொளிகள் தரத்தில் அதிக கவனம் செலுத்துபவை என்ற தவறான தகவல்களை அகற்றி குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தளத்தை வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்ததாக பிபிசி கூறியது.