திரு லீ குவான் இயூவுக்காகத் தம் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருந்ததாக அவரின் மெய்க்காவலராக இருந்த 83 வயது கருப்பையா கந்தசாமி குறிப்பிட்டார்.
மறைந்த திரு லீயின் நேர்மை, அர்ப்பணிப்பு, சிங்கப்பூருக்கு ஆற்றிய பங்களிப்புகள் ஆகியவற்றைக் கண்டு திரு கந்தசாமி வியந்ததாகவும் சிங்கப்பூரைக் கட்டி எழுப்பிய அந்தப் பிரதமருக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்ததாகவும் அவர் கூறினார்.
“திரு லீயைக் கொல்வதற்காக யாரேனும் குறிவைத்திருந்தால், நான் அவருக்கு முன்னால் குதித்திருப்பேன். அவருக்காகக் குண்டடி பட நான் எந்நேரமும் தயாராக இருந்தேன்,” என்று திரு கந்தசாமி ‘தப்லா’ நாளிதழிடம் உற்சாகம் தொனிக்கப் சொன்னார்.
செப்டம்பர் 16ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட திரு லீயின் 100வது பிறந்தநாளன்று அவரை நினைவுகூரும் வகையில் தமது நீண்டகாலச் சேவையைப் பற்றிய நினைவலைகளைத் திரு கந்தசாமி பகிர்ந்துகொண்டார்.
“என்னைப் பொறுத்தவரை நான் இல்லையென்றால், என் மனைவிக்கு மட்டுமே இழப்பு. ஆனால் என் தலைவர் இல்லையென்றால், மில்லியன்கணக்கானோர் தவிக்க நேரிடும்,” என்றார் ‘கந்தா’ என்று செல்லமாக அழைக்கப்படும் திரு கந்தசாமி.
“சிங்கப்பூரில் மட்டுமல்ல, மற்ற இடங்களில் உள்ள மில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியவர் திரு லீ. மற்ற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டு, வர்த்தகங்களையும் அமைத்து, நம் நாட்டின் எதிர்காலம் பிரகாசிக்க வகைசெய்தார் அவர்,” என்றார் திரு கந்தா.
திரு லீக்குப் பாதுகாவல் அதிகாரியாக 1970 முதல் 1990 வரை பணியாற்றிய நிலையில், திரு லீயின் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டுக்கு திரு கந்தசாமி அனுப்பப்பட்டார். திரு லீக்கான பாதுகாவலர் பட்டியலில் அதிக காலம் பணியாற்றியவர் இவரே.
“திரு லீயை மிக அணுக்கமாகக் கவனித்து வந்ததால் அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவருக்காகப் பணியாற்றிய அந்த ஆண்டுகள் என் வாழ்நாளின் பொற்காலம்.
தொடர்புடைய செய்திகள்
“அவர் சிடுசிடு என இருந்தாலும் என் மீது கோபப்பட்டதே இல்லை. எப்போதும் தம்மைச் சுற்றிப் பார்த்துக்கொண்டவாறு மற்றவர்களைச் சோதிப்பார். அவர் பக்கத்திலேயே நான் இருந்ததால் என் பொறுப்பு என்ன என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
“மற்ற பாதுகாவல் அதிகாரிகளைவிட நான் அதிக காலம் பணியாற்ற முடிந்த காரணத்தை அறியேன். ஒருவேளை திரு லீ என் மீது நம்பிக்கை வைத்திருக்கலாம். அவர் குடும்பத்தாரும் என்னை நம்பினர். திரு லீயின் அந்தரங்கச் செயலாளருடன் நான் தினமும் பேசுவேன். அவருடன் நல்லுறவு வைத்திருந்தேன்,” என்றார் திரு கந்தா.
டெர்விட் ரோட்டில் இருந்த விக்டோரியா பள்ளிக்குச் சென்ற முதல் ஜூரோங் வட்டாரவாசி தான்தான் என்று அவர் குறிப்பிட்டார். மூத்தோர் காற்பந்து மன்றத்தை நிறுவிய திரு கந்தா, நண்பர்களுடன் தாம் திறமையாகக் காற்பந்து விளையாடியதையும் தம் பள்ளி காலத்தை மகிழ்ச்சிகரமாகக் கழித்ததையும் நினைவுகூர்ந்தார்.
அப்படி இருந்த காலகட்டத்தில் தமக்குப் பிரச்சினை வரவிருப்பதாக உயர்நிலை 4ல் இருந்தபோது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினாராம். ‘எதற்காக?’ என்று அவர் அந்த நண்பரிடம் கேட்டபோது, ஒவ்வொரு கடையாகச் சென்று பணம் வசூலித்துக் குண்டர் கும்பல் தலைவரிடம் பணத்தைக் கொடுப்பதற்காக அவர்களின் வட்டாரத்தில் உள்ள குண்டர் கும்பல் ஆட்கள் திரு கந்தாவைக் குறிவைத்துவிட்டதாக நண்பர் கூறினார்.
“நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா ரப்பர் தோட்டத் தொழிலாளி, அம்மா புல் வெட்டுபவர். அதனால், என் நண்பர் கூறியதைக் கேட்டு வேறு வழியின்றி நான் காவல் துறையில் சேர்ந்தேன். அந்தக் காலத்தில் உயர்நிலை மூன்று முதல் காவல் துறையில் சேரும் வாய்ப்பு வழங்கப்பட்டது,” என்றார் அவர்.
குறி பார்த்துச் சுடுவதில் வல்லவராக இருந்ததுடன் உடலைக் கட்டாக வைத்திருந்தார் திரு கந்தா. அதனால் காவல் துறைப் பயிற்சிப் பள்ளியில் அவர் பயிற்றுவிப்பாளர் ஆனார்.
உயர் அதிகாரி தம் திறமையைப் பார்த்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட திரு கந்தசாமி, ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறினார்.
காவல்துறை தலைமையகத்திற்கு வருமாறு அதிகாரி கூறியதை அடுத்து திரு கந்தா அங்குள்ள பாதுகாப்புத் தளபத்தியத்தின் மெய்க்காவலர் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.
“நீ ஒரு மெய்க்காவலர் ஆகப் போகிறாய் என்று அதிகாரி என்னிடம் சொன்னார். என் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதுதான் என் வாழ்க்கையின் பொன்னான துவக்கம்,” என்றார் அவர்.
“திரு லீ அப்போது புகழ்பெற்ற ஒரு நபராக இருந்தபோதும் அவரிடம் அதிகாரத் தோரணை இருந்ததே இல்லை. என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு ‘ஜெண்டில்மேன்’. அவர் சிங்கப்பூருக்குத் தான் முன்னுரிமை வழங்கினார். அதற்குப் பிறகுதான் அவரின் குடும்பம் என்று சொல்லலாம்,” என்றார்.
வேலையை முடித்துவிட்ட பின்னர்தான் உறங்கச் செல்லும் பழக்கமுடையவர் திரு லீ. மறுநாள் காலையிலேயே எழுந்து உடற்பயிற்சி செய்வார்.
“மழையோ வெயிலோ திரு லீ தவறாமல் அதிபர் மாளிகை வளாகத்தைச் சுற்றி உடற்பயிற்சி செய்வார். விடுமுறை உட்பட ஒவ்வொரு நாளும் இதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்,” என்றார் திரு கந்தா.
திரு லீ அவரது உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடாய் இருந்ததை நினைவுகூர்ந்தார் திரு கந்தா.
தமது 50வது பிறந்தநாளுக்கு முந்தைய நாளான 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று திரு கந்தா தம் பணிக்காலத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்தார். இதுகுறித்து அவர் திருமதி லீயிடம் பேசினார்.
இதைத் திரு லீயிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார் திருமதி லீ. அன்று காலை 11 மணிக்குத் திரு லீயுடன் மின்தூக்கியில் சென்ற திரு கந்தா, தாம் பதவி ஓய்வுபெற முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.
“மின்தூக்கியிலிருந்து வெளியேறிய பின்னர், தம் பையைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் ‘ஏன்’ என்று காரணம் கேட்டார். எனது ஓய்வுக்கால வயதைத் தாண்டி ஐந்து ஆண்டுகள் ஆவதாக அவரிடம் கூறினேன். என் வயதைக் கேட்டறிந்த அவர் எனக்கு 50 வயதுக்கான தோற்றம் இல்லை என்றார்.
“அதன் பின்னர் எனக்கு வேறு வேலை வாய்ப்பு உள்ளதா என்று கேட்டார். நான் ஆமாம் என்றதும் ‘உனக்குப் போக வேண்டி இருந்தால் போய்தான் ஆக வேண்டும்’ என்றார்.
“கொஞ்ச நேரம் நடந்த அந்த அரிய உரையாடல் அவரது நெறிமுறைக்குச் சான்று. நான் போனதும் என் இடத்திற்கு வேறொருவர் வருவார். இது வாழ்க்கையின் உண்மை,” என்றார் திரு கந்தா.
மறுநாள், காவல்துறை பாதுகாப்புப் பிரிவின் தலைவர் தம்மை அழைத்து மிகச் சிறந்ததொரு பிறந்தநாள் பரிசை அளித்ததாக திரு கந்தசாமி கூறினார். திரு லீ தாமே எழுதிக் கையெழுத்திட்டிருந்த நற்சான்றிதழ் அது. அதில், “எனது அந்தரங்கப் பாதுகாவல் அதிகாரியாக 1970 முதல் இருந்திருக்கிறார். வேகமும் விவேகமும் அவரிடம் உண்டு. என் அசைவுகளை முன்னரே அறிந்து எந்த ஓர் இடையூறும் எனக்கு நேராதவாறு அவர் பார்த்துக்கொண்டார். உதவி செய்யும் மனப்பான்மை, வளங்களைக் கையாளும் திறமை, பணிவன்பு இவற்றையும் அவரிடம் காண முடியும். நம்பிக்கையான ஓர் அந்தரங்கப் பாதுகாவல் அதிகாரியை நாடும் யாவருக்கும் இவரை நான் பரிந்துரை செய்வேன்,” என்று எழுதி இருந்தது.
ஒரு மாமனிதனிடமிருந்து இத்தகைய மகத்தான நற்சான்றிதழைப் பெற்றது, கனவு நனவாவதற்கும் மேல் என்றார் கந்தா.
இந்த நற்சான்றிதழை அவர் ஒருபோதும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.
“20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவருக்கு நான் வேலை செய்ததற்கான ஆதாரம் அந்த நற்சான்றிதழ்,” என்றார் அவர்.
சாங்கி விமான நிலையத்தின் ‘விஐபி’ வளாகத்தில் அடுத்த 14 ஆண்டுகளாக நெறிமுறை அதிகாரியாகப் பணியாற்றிய பின்னர் மனைவியுடன் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார். அவரும் 77 வயதுடைய அவரின் மனைவி அன்னபூரணியும் இன்னமும் டாக்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார்கள்.
சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக இருவரும் தங்களின் மூத்த மகனைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இழந்துவிட்டனர். தற்போது தம்பதியர் தங்களின் இரண்டாவது மகனுடனும் அவரின் குடும்பத்தாருடனும் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் வசிக்கின்றனர்.
சம்பளத்துடனும் ஓய்வூதியத்துடனும் தமது நிதி நிலையைச் சுமுகமாக வைத்திருக்கும் திரு கந்தசாமி, “வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.

