சிறைக் கைதிகளுக்கு மறுவாய்ப்பு வழங்கும் மஞ்சள் நாடா ஓட்டம்

ஞாயிறு, செப்டம்பர் 24 - மழையையும் பொருட்படுத்தாது தற்போதைய, முன்னாள் கைதிகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கத் திரளாகத் திரண்டனர் 6,500க்கும் மேற்பட்ட மக்கள்.

“மறுவாய்ப்புகளையும் தாண்டி ஓடுங்கள்,” என்ற கருவில் நடந்த 14வது மஞ்சள் நாடா சிறை ஓட்டத்தில் உள்ளூர், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டு கைதிகளுக்கு மறுவாய்ப்பு அளிக்க உறுதி பூண்டனர்.

10 கிலோ மீட்டர் போட்டி ஓட்டம், 6 கிலோ மீட்டர் சாதாரண ஓட்டத்தில் மக்கள் விடியற்காலையில் பங்கெடுத்தனர். படம்: ரவி சிங்காரம்

10 கிலோ மீட்டர் போட்டி ஓட்டம், மற்றும் 6 கிலோ மீட்டர் சாதாரண ஓட்டம் ஃபார்ன்பொரோ சாலையில் தொடங்கி, பழைய சாங்கி சிறைச் சுவரில் முடிந்தது.

கைதிகளுக்கும் குடும்பங்களுக்கும் சிங்கப்பூர் சிறைத் துறையும் மற்ற சமூக அமைப்புகளும் செயல்படுத்தும் திட்டங்களை மக்களுக்குக் காண்பிக்கச் சாவடிகளும் இடம்பெற்றன. கைதிகளின் சமையல், கலைப் படைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

தற்போதைய, முன்னாள் கைதிகளின் படைப்புகள், வெற்றிக் கதைகள், மற்றும் அவர்களுக்கும் அவரகளது குடும்பங்களுக்கும் சிங்கப்பூர் சிறைச் சேவை, சமூக அமைப்புகள் வழிநடத்தும் திட்டங்களைக் கண்காட்சி மக்களுக்கு உணர்த்தியது. படம்: ரவி சிங்காரம்

மக்கள் நம்பிக்கை மனுக்களையும் கைதிகளுக்கு எழுதினர்.

வருடாந்திர மஞ்சள் நாடா சமையல் போட்டி கைதிகளின் சமையல் திறன்களை மேம்படுத்தி சிறையைவிட்டு வெளியானதும் உணவுத் துறைக்குள் நுழைய உதவுகிறது. படம்: ரவி சிங்காரம்

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

சுற்றுப்புறத்திற்கு ஏதுவான மூலப்பொருள்களைக் கொண்டு ஓட்டத்திற்கான சட்டையும் கயிற்றுப்பையும் தயாரிக்கப்பட்டன. ‘க்லூப் எஸ்ஜி’ உடன் இணைந்து பங்கேற்றவர்களின் பழைய ஓட்டக் காலணிகள் மறுசுழற்சியும் செய்யப்பட்டன.

2009 முதல் 2022 வரை சுமார் 102,000 பங்கேற்பாளர்கள் பங்குபெற்று சுமார் $1,400,000 நிதி திரட்ட உதவியுள்ளனர். இவ்வாண்டு இதுவரை $305,625.00 நிதி திரட்டப்பட்டுள்ளது. மக்கள் தொடர்ந்து இணையத்தில் நன்கொடை அளிக்கலாம்.

திரட்டிய தொகை தற்போதைய, முன்னாள் கைதிகளையும் அவர்களது குடும்பங்களையும் ஆதரிக்கும் திட்டங்களுக்குப் பயன்படும்.

ஓட்டத்தில் கலந்துகொண்ட ‘கோச் கஃபே’ நிறுவனர் டேவிட் கிங் ராஜ், 41, தன் சிறை அனுபவத்தை வெற்றிகரமாகப் பின்வைத்து, தற்போது வீடுகளிலும் பள்ளிகளிலும் இளையர்களை நல்வழிப்படுத்திவருகிறார். தன் தாயார்மீது வைத்திருந்த அன்புதான் தன்னை மனந்திருந்தச் செய்தது என்றார்.

சிறையைத் தாண்டியும் நல்ல மறுவாழ்வு உள்ளது என நிரூபித்து, இளையர்களைச் சீர்திருத்தும் டேவிட் கிங் ராஜ், 41 வெற்றிக்கதை காட்சிக்கு இருந்தது. படம்: ரவி சிங்காரம்

“கைதிகளுக்கு ஆதரவு வழங்க நண்பர்களோடு கலந்துகொண்டேன். நல்ல அனுபவமாக இருந்தது,” என்றார் கணேஷ் பாஸ்கரன், 27.

தற்போதைய கைதிகளும் பங்குபெற்றனர்

இவ்வாண்டின் மஞ்சள் நாடா ஓட்டத்தில் 137 கைதிகள் பங்குபெற்று மொத்தம் $8,220 நிதியைத் திரட்டியுள்ளனர். படம்: சிங்கப்பூர் சிறைத் துறை

இவ்வாண்டின் மஞ்சள் நாடா சிறை ஓட்டத்தின் நிதி திரட்டு முயற்சிகளில் 137 கைதிகளும் பங்குபெற்றுள்ளனர்.

சாங்கி சிறைச்சாலை வளாகத்திற்குள் ஓடிய அவர்கள், மொத்தம் $8,220 நிதியைத் திரட்டியுள்ளனர்.

இதன்வழி கைதிகள், தாம் மாறப் போவதாக எடுத்திருக்கும் உறுதிமொழியை நிலைநாட்டியதோடு சமுதாயம் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் இரண்டாம் வாய்ப்புக்காக நன்றியும் தெரிவித்தனர்.

அவர்கள் ஓடிய ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நிறுவனங்கள் $10 நன்கொடை அளித்தன. ஆளுக்கு 6 கிலோமீட்டர் ஓடினர்.

இந்த ஓட்டத்தில் இரண்டாம் முறையாக பங்குபெற்றார் சாமுவேல் (உண்மையான பெயர் அல்ல), 37.

தன் சிறைக்காலத்தின்போது கிடைத்த ஆதரவைக் கருதி, சமுதாயத்திற்குத் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஓட்டத்தில் கலந்துகொண்டார்.

போதைப் பொருள் உட்கொள்ளுதல், திருட்டு, வன்முறை, போன்ற குற்றங்களுக்காக 25 வயதிலிருந்து சிறைக்குள் ஐந்து முறை சென்றுவந்துள்ள சாமுவேல், தற்போது தமது ஆறாவது சிறைத் தண்டனையின் முடிவை நெருங்கிவருகிறார்.

இருப்பினும், இம்முறை சிறையின் புதிய செயல்திட்டங்களால் தன்னில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

போதைப் பொருள் பழக்கத்தை விட்டொழிக்க 9 மாத செயல்திட்டம், கவிதை மற்றும் சமையல் போட்டிகள், ‘கார்டன்ஸ் பை த பே’ கண்காட்சி, போன்றவற்றில் கலந்துகொண்டதால் போதைப் பொருள்களைத் தாண்டியும் வாழ்க்கை இருப்பதை உணர்ந்தார்.

தொழிலாளர் சிற்றுண்டியகத்தில் காலைச் சிற்றுண்டியை சமைக்கவும் மதிய உணவைப் பரிமாறவும் வாய்ப்பு கிடைத்தது. பணத்தைக் கையாளும் பொறுப்பு அவரை நம்பி ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தன்னம்பிக்கைக் கூடியுள்ளதாகக் கூறினார்.

ஒற்றைப் பெற்றோர் குடும்பத்திலிருந்து வந்த சாமுவேல், தவறான சுற்றத்தாருடன் பழகியதால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி மற்ற குற்றங்களையும் புரியத் தொடங்கினார்.

“குற்றம் புரிந்தோர் மீண்டும் குற்றம் புரிவதற்கு சமுதாயம் தம்மை ஏற்றுக்கொள்ளாததும் ஒரு காரணமே; தம்மை ஏற்றுக்கொள்ளும் தீய சகவாசங்களுக்கு இரையாகின்றனர்.” என்றார்.

தான் மீண்டும் சமுதாயத்திற்குத் திரும்பும்போது மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வர் என நம்புவதாகக் கூறினார்.

குடும்பப் பொறுப்புகளை ஏற்க உயர்நிலை இரண்டிலேயே படிப்பை நிறுத்திய இவர், சென்ற ஆண்டு சிறையில் ‘ஓ’ நிலைத் தேர்வுகளை எழுதி, தன் நெடுநாள் கனவை நிறைவேற்றினார்.

எதிர்காலத்தில் மேற்படிப்பு படித்து, தமிழ் நாடகங்களுக்கு வசனங்கள் எழுத விரும்புகிறார். “போதைப் பழக்கத்தை ஒழிப்பது வாழ்நாள் முழுதும் நான் மேற்கொள்ள வேண்டிய போராட்டம். சிறைச்சாலையின் திட்டங்கள் என்னால் முடியும் என்ற நம்பிக்கை அளித்துள்ளது,” என்றார்.

நட்புச் செயல்திட்டம்வழி தொண்டூழியர்கள் கைதிகளுக்கு மனுக்கள், தொலைபேசி அழைப்புகள், நேர்சந்திப்புகள்வழி நட்பும் ஆதரவும் வழங்குகின்றனர். கைதிகள் வெளிவந்தபிறகும் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள். படம்: ரவி சிங்காரம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!