சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பியான லீ குவான் இயூ எப்போதும் சிங்கப்பூரின் வருங்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார் என்றும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களை நாம் எப்போதும் மறக்கக்கூடாது என்று திரு லீ இளையர்களிடம் வலியுறுத்துவார் என்றும் உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் துணையமைச்சர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் கூறினார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த திரு. லீயின் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் லீ குவான் இயூவின் 100 கருத்துரைகள் அடங்கிய கையேட்டின் வெளியீடு ஆகிய நிகழ்வுகளின் சிறப்பு விருந்தினராக இவர் கலந்துகொண்டார். கடந்த 16.09.2023 சனிக்கிழமை அன்று அவரது 100ஆவது பிறந்த நாளில் இந்நிகழ்வு தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது.
விழாவின் சிறப்பு அங்கமாக எட்டு இளையர்கள் எட்டுத் தலைப்புகளில் திரு. லீ குவான் இயூ பின்பற்றிய கொள்கைகள் பற்றி உரையாற்றினர். ஊழலின்மை குறித்துச் செல்வி பாவை சிவக்குமார், திறமைக்கு மதிப்புப் பற்றி திரு. யுகேஷ் கண்ணன், நேர்மை குறித்துச் செல்வி அருணா கந்தசாமி, சமத்துவம் பற்றித் திரு. கவின் சசிகுமார், தொலைநோக்கு பற்றிச் செல்வி சௌமியா திருமேனி, அரசதந்திரம் குறித்துச் செல்வி கிருஷ்மிதா ஷிவ் ராம், துணிவு பற்றிச் செல்வி தன்மதி பன்னீர்செல்வம், உழைப்புக் குறித்துச் செல்வி யாழினி கமலக்கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். திரு. எஸ்.என்.வி. நாராயணன் கருத்தரங்கை வழிநடத்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் உரையாற்றினார். எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் தலைமையுரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் செயலாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் வரவேற்புரை ஆற்ற, துணைத் தலைவர் திரு. சு. முத்துமாணிக்கம் நன்றியுரை ஆற்றினார். இளையரான செல்வி சரண்யா முசிலா நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார்.

