ஒப்பனைக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்ட ஒரு போட்டி

2 mins read
329d6d9f-7881-4c87-8112-d9414a520406
போட்டியில் கலந்துகொண்ட ஒப்பனைக் கலைஞர்களுடன், அவர்களின் கைவண்ணத்தில் ஒப்பனை செய்யப்பட்ட நங்கையர். - படம்: ‘த ச்சோசேன் ஒன்’ தயாரிப்பு நிறுவனம்

இலங்கையைச் சேர்ந்த 22 வயதான ஷாலினி லக்ஷிகா மதுஷாலினி எனும் முக ஒப்பனைக் கலைஞர் ‘த ச்சோசன் ஒன்’ (The Chosen One) எனும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனம் நடத்தும் அனைத்துலக ஒப்பனைக் கலைஞர்களுக்கான போட்டியில் பங்குபெற முதன்முறையாக விமானமேறி சிங்கப்பூர் வந்துள்ளார்.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ஒப்பனைக் கலை பயின்ற இவர், கடந்த ஈராண்டுகளாக ஒப்பனை நிலையம் நடத்தி வருவதோடு, நடிகர் சந்தானம் நடித்து வெளிவந்த ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் நடனக் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்துள்ளார். இன்னும் தனது தொழிலை விரிவுபடுத்தும் கனவின் முதற்படியாக இந்தப் போட்டி இருக்குமெனக் கருதி வந்துள்ளார்.

திரைப்படத் துறை தொடங்கி, தனியிசைக் காணொளிகள், குறும்படங்கள் என அனைத்திலும் ஒளிரும் திரைக் கலைஞர்களை மெருகேற்றிக் காட்டும் பெரும் பங்கு முக ஒப்பனைக் கலைஞர்களைச் சார்ந்தது.

எனினும், அவர்கள் பெருமளவில் அங்கீகரிக்கப்படுவதில்லை. அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மலேசியாவில் நடத்தப்படும் இந்த ஒப்பனைக் கலைஞர்களுக்கான போட்டியின் முன்னோட்ட நிகழ்வு, நோரிஸ் ரோட்டில் உள்ள எஸ்.கே அரங்கில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது.

இதில் ஒரு சிங்கப்பூரர், எட்டு மலேசியக் கலைஞர்கள், ஓர் இலங்கைத் தமிழர் என பத்து ஒப்பனைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற 39 வயதான சிட்டி சலீனா, “நான் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றுகிறேன். இதுவரை பெருமளவில் அங்கீகாரம் கிடைத்ததில்லை. வாழ்க்கை 40களிலும் தொடங்கலாம். எந்தக் கனவையும் காண வயது ஒரு தடை அல்ல. இந்தத் தளம் மூலமாக வாய்ப்புகள் பெற்று வளர்ச்சி காண விரும்புகிறேன்,” என்றார்.

மலேசியாவில் ஒப்பனைக் கலைஞராகவும், பயிற்றுவிப்பாளராகவும் இருக்கும் அற்புத மலர், தன்னிடம் ஒப்பனைக் கலை பயிலும் மூன்று பேருடன் இப்போட்டியில் கலந்துகொள்ள வந்துள்ளார். ஒப்பனைக் கலை கற்ற சில ஆண்டுகளில் அதிகளவு வாய்ப்புகள் பெற்று பயிற்றுவிப்பாளராக மாறிய இவர், எதிர்காலத்தில் பெரிய ஒப்பனைக்கலைப் பயிற்சிக் கழகத்தைத் தொடங்க ஆர்வம் கொண்டுள்ளார். அதற்கு இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையுமெனக் கருதுகிறார்.

வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று, மலேசியாவின் ஜோகூர் பாரு (மசாய்) நகரில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர் ரொக்கம் உள்பட 7,500 சிங்கப்பூர் வெள்ளி மதிப்புள்ள பரிசுகளைப் பெறுவர். அதோடு, த ச்சோசேன் ஒன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைத்து பணியாற்றும் வாய்ப்புகளையும் பெறுவர்.

இதுகுறித்து பேசிய இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர், ‘த ச்சோசேன் ஒன்’ நிறுவன இயக்குனர் அபு கரீம் இஸ்மாயில், “திரைக்குப் பின்னால் அதிக உழைப்பைச் சிந்தும் ஒப்பனைக் கலைஞர்களைச் சிறப்பாக உணர வைப்பதோடு, அவர்களது திறமைக்குத் தீனி போடும் விதமாக இந்தப் போட்டியை நடத்துவதில் பெருமை. இதனைச் சாத்தியப்படுத்த உடன் உழைத்த நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும், சக கலைஞர்களுக்கும் நன்றி,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்