இந்திய பாரம்பரிய பரதநாட்டியத்துடன் ஜாவானிய நடனம் இணைந்து படைக்கப்பட்ட நடன படைப்பொன்று அண்மையில் மேடையேறியது. ராடின் மாஸ் என்னும் அப்படைப்பில் தமிழர் கலாசாரத்தில் இடம்பெறும் பொய்க்கால் குதிரையாட்டம் (ஜாவானிய நடனமான ‘குடா கெப்பாங்), பாரம்பரிய நாட்டுப்புற பொம்மலாட்டக் கலையான ‘வாயாங் கூலிட்’ ஆகிய அம்சங்கள் இடம்பெற்றன.
இளம் வயதிலேயே தனது தாயை இழந்த ஜாவானிய இளவரசி ராடின் மாஸ் ஆயு, தன் அப்பாவின் அன்பில் வாழ்ந்து வந்தாள். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான உறவின் மீது பொறாமை கொண்ட அரச பரம்பரையினர் அவர்களைக் கொல்வதற்கு சதி தீட்டினர். அதிலிருந்து தப்பிய இருவரும் முன்பு தெமாசெக் என்றழைக்கப்பட்ட சிங்கப்பூருக்கு வந்தனர்.
ஆனாலும், ராடின் மாஸ்க்கு விடியல் வரவில்லை. தந்தையின் இரண்டாவது மனைவியின் சித்திரவதையால் அவதியுற்ற ராடின் மாஸ் அவளின் விருப்பத்துக்கு மாறான டெங்கு பாகுஸ் எனும் உறவினரை மணம் முடிக்கவில்லை என்றால் அவளும் அவளது தந்தையும் கொலை செய்யப்படுவார்கள் என்ற அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.
தனக்குப் பிடிக்காத உறவினரை மனம் முடிப்பதிலிருந்து தப்புவதற்கு வழி தேடியபோது, தீயவர்கள் கும்பலில் ராடின் மாஸும் அவள் தந்தையும் சிக்கிக் கொண்டார்கள். தன் தந்தையை தீயவர்கள் தாக்க வந்தபோது அவரைக் காப்பாற்ற வந்த ராடின் மாஸ் பரிதாபமாக உயிரிழந்தாள். இத்தகைய உணர்வுபூர்வமான கதைக் கருவை நடன பாணியில் கலைஞர்கள் தங்கள் ஆற்றலை வெளிக்காட்டி அசத்தினார்கள்.
தெமாசெக் அறநிறுவனத்தின் ஆதரவில் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி மலாய் நடன இயக்கம் ஸ்ரீ வாரிசான் சோம் சாய்ட்டுடன் இணைந்து இப்படைப்பை அக்டோபர் 14ஆம் தேதி மாலை அரங்கேற்றியது. இரு கலாசாரங்களுக்கிடையேயான பாலமாக அமைந்த இப்படைப்பில், நாடக பாணியில் ஒருவர் ராடின் மாஸ் கதையைக் கூறினார்.
அதற்கு ஏற்றால்போல. இந்திய மற்றும் மலாய் நடனமணிகள் கதைக்கு தேவையான முக பாவனைகளோடு நடனமாடி பார்வையாளர்களுக்குக் கதையை நடித்துக் காட்டினார்கள்.
படைப்பை மேலும் மெருகூட்ட வைத்தது டாக்டர் கானவினோதன் ரத்னம் இதர இசை கலைஞர்களோடு கைகோத்து வழிநடத்திய இசைக் கச்சேரி. விக்டோரியா அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் படைப்பைக் காண வந்திருந்தனர்.
பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநரான மீனாட்சி பாஸ்கர், ஸ்ரீ வாரிசான் சோம் சாய்ட் அமைப்பை சேர்ந்த கலைஞர்களுடன் ஒன்றிணைந்து ராடின் மாஸ் படைப்பிற்குரிய நடனங்களை இயக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அகாடமியின் நிறுவனரும் மீனாட்சி பாஸ்கரின் தாயாருமான மறைந்த திருவாட்டி சாந்தா பாஸ்கர் இதற்கு முன்பு ஸ்ரீ வாரிசான் சோம் சாய்ட் இயக்கத்தின் நிறுவனர் திருவாட்டி சோம் சாய்ட்டுடன் இணைந்து பல படைப்புகளைப் படைத்துள்ளார்.
“எங்களுக்கும் ஸ்ரீ வாரிசான் சோம் சாய்ட் இயக்கத்துக்கும் இடையேயான 58 ஆண்டுகால நட்பைப் பறைசாற்றும் விதமாக இப்படைப்பு அமைந்துள்ளது. பரதநாட்டியத்துக்கும் அப்பாற்பட்டு எங்களால் வேறு விதமான நடன முறையையும் கற்றுகொண்டு வித்தியாசமான வடிவில் நடனம் படைக்க முடியும் என்பதை ராடின் மாஸ் நிரூபித்துள்ளது,” என்று மீனாட்சி கூறினார்.
ராடின் மாஸ் ஆயு கதாபாத்திரத்தில் நடனமாடிய பிஜு கௌரிப்ரியா, “நான் ஆறு வயதிலிருந்து பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியில் பரதநாட்டியம் கற்றுகொண்டு வருகிறேன். முதல் முறையாக நான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடனம் ஆடுவதோடு நிறுத்தாமல் நாடக வடிவில் பார்வையாளர்களுக்கு கதையை ஆடிக்கொண்டே சொல்லும் கடினமான முயற்சியில் இறங்கினேன். இந்தப் புதிய அனுபவம் மூலம் நான் பலவற்றைக் கற்றுகொண்டேன்,” என்று சொன்னார்.
ஒன்றரை மணி நேப் படைப்பை காண வந்த இல்லத்தரசி ரத்தினம், 54, “நான் இதுவரை வெறும் பரதநாட்டிய படைப்புகளை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். முதல் தடவையாக மலாய் நடனத்தோடு இணைந்து பரதநாட்டிய நடனத்தைக் கண்டேன். இது மிகவும் புதுமையாக இருந்தது. மலாய் நடன இசைக்கு ஏற்றவாறு இந்திய இசைக் கலைஞர்கள் இசை படைத்தது ஒரு பாராட்டத்தக்க முயற்சி,” என்று பகிர்ந்தார்.

