தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழகத்தின் ஆண்டுவிழா கொண்டாட்டம்

தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழகத்தின் ஆண்டுவிழா கொண்டாட்டம்

2 mins read
aa944503-7b0f-4b15-be8d-0fad5839a124
புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழகத்தின் 15வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு குடும்பங்கள் கலந்துகொள்ளும் வகையில் பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாரயிறுதி நாள்களில் நடைபெறவிருக்கும் அக்கொண்டாட்டத்தில் முக்கிய அங்கமாக தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழகம் புதிதாக ‘என்சிஸ் ஃபைட்ஸ் கேன்சர்’ (NCIS Fights Cancer) எனும் புதிய இருவழித்தொடர்பு கைப்பேசி விளையாட்டு ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

விளையாட்டில் ஈடுபடும் பயனர்கள் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகளை அதன்மூலம் அறிந்துகொள்வார்கள். மேலும், வசதி குறைந்த புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கும் பங்களிக்கும் விதத்தில் அவர்கள் விளையாட்டு கொள்முதல் மூலம் உதவிக்கரம் நீட்டலாம். தொகை அனைத்துமே தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழகத்தின் புற்றுநோய் நிதிக்குச் செல்லும்.

கொண்டாட்டத்தின் முதல் நாளில் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தின் துணைவியாரான திருவாட்டி ஜேன் இட்டோகி கலந்துகொள்வார். அந்நாளில் புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்களின் வாழ்க்கை கதைகள் மற்றவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் வகையில் காண்பிக்கப்படும்.

வருகையாளர்கள் $20 நன்கொடையளித்து பெற்றுக்கொள்ளும் செலவு அட்டைகளை வைத்து அவர்கள் கொண்டாட்ட நிகழ்வில் இருக்கும் கடைகளில் தங்களுக்குப் பிடித்தமான உணவு, பானம், ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம். அத்துடன், அவர்களுக்கு இலவச அன்பளிப்புப் பைகளும் காத்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டு நாள் கொண்டாட்ட நிகழ்வில் பொதுமக்கள் தங்களை புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறை, உடற்பயிற்சி, புற்றுநோய் உண்டாக்கும் உடற்சோர்வில் இருந்து இளைப்பாற தேவையான வழிமுறைகள் முதலியவற்றை நிபுணர்கள் அமர்வுகளில் பகிர்ந்துகொள்ளும் குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம். இதை ஒட்டிய சிறப்புக் கருத்தரங்கு ஒன்றும் நடைபெறவுள்ளது.

நுரையீரல் பரிசோதனை, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை முறைகள், மூளை அறுவை சிகிச்சை எவ்வாறு நடைபெறுகிறது, புற்றுநோயாளியின் வாழ்க்கையில் மருத்துவ சமூக சேவையாளரின் பங்கு போன்ற தகவல்களை அறிந்துகொள்ள பொதுமக்கள் https://form.gov.sg/64f5928ffd20860012f9da7b இணையத்தளம் மூலம் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்து அமர்வில் கலந்துகொள்ளலாம்.

அடுத்த மாதம் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் கொண்டாட்டம் சன்டெக் சிட்டி ஏட்ரியத்தின் டவர் மூன்றிலும், நான்கிலும் காலை 10 லிருந்து மாலை ஆறு மணி வரை இடம்பெறும். அனைவருக்கும் இலவச அனுமதி. மேல் விவரங்களுக்கு https://www.ncis.com.sg/events/NCISCelebratesLife/Pages/default.aspx இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்