தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மாயா’ கலைக்கூடத்தில் மயக்கும் ஓவியங்கள்

2 mins read
2b40420b-ed89-4635-b746-a0f948643103
பல வண்ணங்கள், பல்வேறு விதமான தொடு உணர்வுகளைக் கொண்டுள்ள திருவாட்டி ஜலீலா நியாஸின் 40 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. - படம்: மாயா கலைக்கூடம்

நட்பு, திருமண உறவு, பெற்றோர்-பிள்ளை உறவு போன்ற உறவுகளில் இருப்போர் தங்களை வளர்த்துக்கொள்வதற்கு இடைவெளி அவசியம் என்கிறார் ஓவியக் கலைஞர் ஜலீலா நியாஸ், 46. இந்தக் கருத்தின் வெளிப்பாடாக ‘ஸ்பேசஸ்’ என்ற தாவர வடிவங்களைக் கொண்ட ஓவியத்தை இவர் வரைந்துள்ளார். இந்த ஓவியத்துடன் 40 வண்ண ஓவியங்கள் இடம்பெறும் கண்காட்சி அக்டோபர் 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது.

பவளப்பாறைகள், மூங்கில்கள், இஸ்லாமிய எழுத்தோவியம் ஆகியவற்றை திருவாட்டி ஜலீலாவின் ஓவியங்களில் காணலாம். எண் 57 கெந்திங் லேனிலுள்ள ‘மாயா’ கலைக்கூடத்தில் உள்ள இந்தக் கண்காட்சியை தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராகிம் திறந்து வைத்தார்.

மிகச் செறிவான வண்ணப் பின்புலங்களின் மீது நுட்பமான வடிவங்களில் தங்கக் கண்ணாடி மற்றும் வெள்ளி ‘அக்ரிலிக்’ சாயம் தீட்டுவதை திருவாட்டி ஜலீலா தமக்குரிய பாணியாகக் கொண்டிருப்பதாக மாயா கலைக்கூடத்தின் இணை நிறுவனர் மஸ்துரா ஷாரி தெரிவித்தார்.

திருவாட்டி ஜலீலா நியாஸின் ஓவியங்கள்
திருவாட்டி ஜலீலா நியாஸின் ஓவியங்கள் - படம்: டினேஷ் குமார்

திருவாட்டி ஜலீலா, தம் ஓவியங்கள் மட்டும் இடம்பெறும் கண்காட்சிகளை இதுவரை நான்கு முறை நடத்தியுள்ளார். 2000ல் தம் முதல் தனிக் கண்காட்சியைத் திருவனந்தபுரத்தில் நடத்திய இவர், திருமணத்துக்குப் பிறகு 2003 முதல் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சிங்கப்பூரில் இவரது முதல் தனிக் கண்காட்சி 2015ல் செங்காங் பொது நூலகத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூரில் கலைஞர்களுக்கு அரசாங்கம் ஆதவளித்து வந்தாலும் கலைக்கூடங்களுக்கு வருகை அளித்து மக்கள் ஆதரவளிக்கும்படி திருவாட்டி ஜலீலா கேட்டுக்கொள்கிறார்.

“ஓவியக்கலைக் கண்காட்சிகள் மக்களை மேலும் எளிதில் சென்றடையும் விதமாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் இவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்