மனநலப் பிரச்சினைகள் பற்றிய உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுப் படைப்பாற்றல் கண்காட்சி சிங்கப்பூரில் நடைபெறுகிறது.
டோபி காட்டில் உள்ள காட்சிக் கலை மையத்தில் (Visual Arts Centre), அக்டோபர் 27 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை இக்கண்காட்சி இடம்பெறும். நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.
புத்தாக்க நிறுவனமான ‘ஆர்ஜிஏ’ சிங்கப்பூரும் சிங்கப்பூர் மனநல உள்ளாய்வு நிலையமும் (எஸ்ஏஎம்ஹெச்) இணைந்து இதனை வழங்குகின்றன.
வெவ்வேறு பின்னணிகள், வயதுகளைச் சார்ந்த எட்டு சிங்கப்பூரர்களின் மனநல அனுபவங்களை, செயற்கை நுண்ணறிவுப் படைபாற்றல் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களாக சித்திரிக்கிறது இக்கண்காட்சி.
மனநலப் பிரச்சினைகளோடு வாழும் இந்த எட்டுப் பேரை ‘எஸ்ஏஎம்ஹெச்’ முன்மொழிந்தது.
தங்கள் உணர்ச்சிகளை, மனஅழுத்தங்களைப் பற்றி அவர்கள் பகிர்வதைக் காணொளிகளாகப் பதிவுசெய்து, அவற்றிலிருந்து முக்கிய வாக்கியங்களை எடுத்து செயற்கை நுண்ணறிவுப் படைபாற்றல் மென்பொருளில் உட்புகுத்தியது ‘ஆர்ஜிஏ’ சிங்கப்பூர்.
அக்டோபர் 26ஆம் தேதி இரவு நடந்த கண்காட்சித் திறப்புவிழாவில் ஜாலான் புசார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிசால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
‘எஸ்ஏஎம்ஹெச்’ புத்தாக்கச் சேவைகள் பிரிவில் மக்களைச் சென்றடையும் குழுவின் தலைவரான சரீன் கோவும் இக்கண்காட்சியில் இடம்பெறும் எட்டு சிங்கப்பூரர்களில் ஒருவர்.
தொடர்புடைய செய்திகள்
“வார்த்தைகளால் வெளிப்படுத்தமுடியாத உணர்ச்சிகளைப் புகைப்படங்களால் உணர்த்துகிறோம்,” என்றார் அவர்.
‘மனநலப் பிரச்சினைகள் பற்றி கூடுதல் பகிர்வுகளும் புரிந்துணர்வும் சிங்கப்பூரில் நிலைபெறுவது அவசியம்.”
“அதற்கு முன்னோடியாக இந்த எட்டு சிங்கப்பூரர்களும் தம் அனுபவங்களைத் தைரியமாகப் பகிர்ந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது,” என்றார் ‘எஸ்ஏஎம்ஹெச்’ தொடர்பு, கல்வி, ஈடுபாடு மேலாளர் கலிஸ்தா ரோஜ்.
“செயற்கை நுண்ணறிவுப் படைப்பாற்றல் மூலம் சமுதாயத்துக்கு நன்மை பயக்க விரும்பினோம்,” என்றார் ‘ஆர்ஜிஏ’ சிங்கப்பூர் நிர்வாகப் படைப்பதிகாரி எட் சியோங்.
“கண்காட்சி மூலம் மனநலப் பிரச்சினைகளோடு வாழ்வோரின் உணர்வுகளைப் பற்றி நல்ல புரிதல் எனக்கு ஏற்பட்டது.
“இத்தகைய கண்காட்சியை நான் காண்பது இதுவே முதல்முறை,” என்றார் பார்வையாளர் ரீகன்.
இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
மேல்விவரங்களுக்கு: https://www.promptingfeelings.com/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

