சிறப்புத் தேவை உடையோர் பற்றிய மனப்பான்மைகளை மாற்ற, அக்டோபர் 13ஆம் தேதி, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஒரு கருத்தரங்கு நடந்தது.
‘எக்ஸ்ட்ராடினரி பீபில்’, ‘இன்க்லூஸ்’ நிறுவனங்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் சிறப்புத் தேவைகள் கொண்ட பேச்சாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
தெமாசெக் பல்துறைத் தொழிற்கல்லூரியின் ‘சென்வொகேட்ஸ்’ ஆர்வக்குழு, நிகழ்ச்சிக்குத் துணைபுரிந்தது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மெங் ஈ வாங் வழிநடத்திய கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. இவர் பார்வையற்றவர்.
அதில் பங்குபெற்ற ஷெரி டோ, ‘எஸ்எம்ஏ’ எனப்படும் முதுகெலும்பு தசைவளக்கேடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சிங்கப்பூரில் சிலர் இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘எஸ்எம்ஏ’ மோசமடையும் வேகத்தைக் குறைக்க, ரிஸ்டிப்லாம் மருந்து ஷெரிக்குத் தேவைப்படுகிறது. அதன் விலையோ ஓராண்டுக்கு $375,000. எனவே, https://rayofhope.sg/campaign/sherry/ இணையத்தளம்வழி நிதி திரட்டி வருகிறார். இதுவரை சிறு தொகையே திரட்டப்பட்டுள்ளது.
மருந்து கிடைக்காவிடில் விரைவில் உடல் உறுப்புகளை அசைக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். சுவாசிக்கவும் உண்ணவும் சிகிச்சை தேவைப்படும் என்றார் அவர்.
‘எஸ்எம்ஏ’க்கான மருந்துகள், அரசாங்கம் ஆதரிக்கும் அரிய நோய்களுக்கான நிதி மருந்துப் பட்டியலில் தற்போது இல்லை.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் இரண்டாம் அங்கமாக, தனிப் பேச்சுகளும் நடைபெற்றன.
தன் திறனை மட்டும் பாராமல் சிறப்புத் தேவை உடையவர் என்பதற்காக விருதுகள் கொடுப்பது தனக்கு மனவருத்தம் ஏற்படுத்துவதாகக் கூறினார் ஃபியோனா டான்.
கிளவ்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் பார்வையை படிப்படியாக இழந்துவரும் எர்னா ஃபெளசானா, கண் தெரியாதவருக்கு சமையல் வகுப்புகளை நடத்திய அனுபவத்தைப் பகிர்ந்தார்.
‘டூஷன்’ தசைவளக்கேட்டினால் பாதிப்படைந்த ஓவியர் ஷாலொம் லிம், கேட்கும் திறன் குறைபாடு இருந்தபோதும் பியானோ வாசிக்கும் டாக்டர் அசாரியா டான், ‘இன்க்லூஸ்’ ஆட்சேர்ப்பாளர் ஃபதிமா சோரா, தன்னுடல் தாக்குநோய் கொண்ட ஷெரி சூன் ஆகியோரும் பேசினர்.
‘எஸ்ஏஏசி’ தலைமை நிர்வாகி பர்னார்ட் சியூ, சிறப்புத் தேவைகள் கொண்டோருக்கு உகந்த வேலைகளை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சிறப்பு நிகழ்ச்சிகளோடு, சாதாரண நிகழ்ச்சிகளிலும் சிறப்புத் தேவை உடையோரை ஈடுபடுத்தவேண்டும் என்றார் அர்ஷட் ஃபவாஸ்.
நிகழ்ச்சி பற்றி மேல்விவரங்களுக்கும் காணொளிக்கும் https://www.extraordinarypeople.sg/tad இணையத்தளத்தை நாடலாம்.
நவம்பர் 4ஆம் தேதி, சிறப்புத் தேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஊதா அணிவகுப்பு நடைபெறும்.