தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருக்கடிச் சமாளிப்புப் பயிற்சியின் அவசியம்

2 mins read
0b71b147-c910-40bd-b277-1045bd0f3236
மணிவாசகம் ரவிச்சந்திரன். - படம்: மக்கள் கழகம்

பாதுகாப்பான சிங்கப்பூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எந்நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற விழிப்புணர்வோடு, எதையும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பது அவசியம் என்கிறார் திரு மணிவாசகம் ரவிச்சந்திரன்.

பல ஆண்டுகாலமாக சமூகத் தொண்டாற்றி வரும் இவர் புவன விஸ்தா ‘பி’ வட்டாரத் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

புவன விஸ்தாவை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள இவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக முழு நேரப் பணிக்கு அப்பாற்பட்டு சமூகத் தொண்டுக்கு நேரம் ஒதுக்கி வருகிறார்.

அண்மையில் புவன விஸ்தா சமூகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட திரு ரவிச்சந்திரன், அதன் முக்கிய அம்சமாக விளங்கிய நெருக்கடிச் சமாளிப்புப் பயிற்சியில் ஈடுபட்டார்.

அதில், ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால் குடிமக்கள் எந்த வகையில் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அடித்தள அமைப்பும் சமூகத் தலைவர்களும் கைகோத்துப் பங்குகொண்ட இந்நிகழ்வானது, பயங்கரவாதத் தாக்குதல் போன்ற அலறவைக்கும் சம்பவங்கள் நேரிட்டால் குடிமக்கள் தயாராக இருக்கக் கற்றுத்தந்தது.

சிங்கப்பூர் காவல்துறை, பள்ளிகள், வசிப்போர்க் குழுக்கள் கலந்துகொண்ட நிகழ்வில் ஹாலந்து வில்லேஜ் வட்டாரத்தில் பயங்கரவாத பாவனைத் தாக்குதல் பயிற்சி இடம்பெற்றது. அதில், பாதிக்கப்பட்டோர் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் சூழலில் சமூகத் தலைவர்கள் முன்வந்து உதவிக்கரம் நீட்டும் காட்சி சித்திரிக்கப்பட்டது.

உதவிக்கரம் நீட்டியவர்களில் ஒருவரான திரு ரவிச்சந்திரன் இதய இயக்க மீட்புச் சிகிச்சை, அடிப்படை முதலுதவி, தீத்தடுப்பு முதலியவற்றில் பயிற்சி மேற்கொண்ட அனுபவமிக்கவர்.

புவன விஸ்தா வட்டாரத்தில் நடைபெற்ற பயிற்சி, பல இனத்தவர் வாழும் சமூகமாக இருக்கும் சிங்கப்பூரில் குடிமக்கள் ஒன்றிணைந்து மீண்டெழும் திறனோடு செயல்பட ஊக்குவிக்கும் என்று இவர் கருதுகிறார்.

தன்னைப்போல இன்றியமையாத வாழ்க்கைத்திறன் பயிற்சிகளை மேற்கொள்ள குடியிருப்பாளர்கள் பலரும் ஆர்வத்தோடு முன்வருவதாகத் திரு ரவிச்சந்திரன் சொன்னார்.

“இதுபோன்ற பயிற்சிகள் மூலம் நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வதோடு, சுற்றி இருக்கும் அக்கம் பக்கத்தினரையும் பாதுகாக்க முடியும்,” என்கிறார் இவர்.

சாதாரணமாக பொது இடத்தில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென ஒருவர் மயங்கி கீழே விழுவதை நாம் காண நேர்ந்தால், ஓடிச் சென்று உதவிபுரிந்து அவரது உயிரைக் காக்க இத்தகைய பயிற்சிகள் நமக்குக் கைகொடுக்கும்.

மேலும், அண்மைக்காலமாக சமூகத்தில் வலம் வரும் மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிகளையும் இவர் பரிந்துரைத்து வருகிறார்.

தீத்தடுப்புப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ள இவர், வீவக வீடுகளில் அடிக்கடி நிகழும் தீச்சம்பவங்களைத் தடுக்க வீட்டில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார். சமையல் செய்த பிறகு அடுப்பை அணைப்பது, மின்சாரத்தை தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துவது போன்றவை இவர் பரிந்துரைக்கும் குறிப்புகளில் சில.

குறிப்புச் சொற்கள்