தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிக்குத் திரையில் ரசிக்க இணையக் குறுந்தொடர்கள்

4 mins read
5ed62823-8100-414a-a78c-8b6c326e544a
ஓடிடியில் இந்த வாரம் என்ன வெளியீடு? - இளையர் மத்தியில் பேசுபொருள். - படம்: இணையம்

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின் ஏற்பட்ட பல மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது, திரைத்துறை கண்ட மாற்றம்.

திரையரங்குக்கு வராத, குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட நல்ல படங்கள், பல உள்ளூர் படங்களைத் தாண்டி, உலக நாடுகளின் படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள் என கலைப் படைப்புகளின் கூடாரமாகவே மாறியுள்ளன ஓடிடி தளங்கள்.

ஒரே வார இறுதியில் பல மணி நேரங்கள் செலவு செய்து 8 முதல் 10 பாகங்கள் கொண்ட ஒரு முழுக் குறுந்தொடரை அல்லது பல பாகங்கள் கொண்ட நெடுந்தொடரின் அடுத்தடுத்த பாகங்களை விடாமல் பார்த்து முடிக்கும் ‘பின்ச் வாட்ச்’ இளையர்களிடையே மிகவும் பிரபலம்.

அவ்வாறு இளையரிடம் பெருவரவேற்பைப் பெற்ற இணையத் தொடர்கள் இப்பொழுது தமிழிலும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

அவ்வகையில் 2023ஆம் ஆண்டு வெளியாகி பெருவரவேற்பைப் பெற்ற தமிழ்த் தொடர்கள் இதோ:

அயலி

பெண்களை அடக்கி ஒடுக்கும் பழமையான பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் கொண்ட பின்தங்கிய கிராமமான வீரப்பண்ணையில், மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் சிறுமி தமிழ்ச்செல்வி, தடைகளைக் கடந்து மருத்துவர் ஆவாரா?

இந்த கருப்பொருளில் உருவாகி இருக்கும் எட்டுப் பாகங்களைக் கொண்ட இந்தத் தொடர், நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பெண்களின் துன்பத்தைக் கண்முன் நிறுத்திய ‘அயலி’ தொடர்.
பெண்களின் துன்பத்தைக் கண்முன் நிறுத்திய ‘அயலி’ தொடர். - படம்: இணையம்

ஸ்வீட் காரம் காபி

ஒரே வீட்டில் வாழும் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்கள், தங்களை நிலைநிறுத்த எத்தனிப்பதை களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், நகைச்சுவை ரசிகர்களுக்கு உகந்த தேர்வு.

முன்னணி நடிகை லட்சுமி, மதுபாலா உள்ளிட்ட பலரும் நடித்து மூன்று இயக்குநர்கள் பணியாற்றியுள்ள இந்தத் தொடரில் எட்டுப் பாகங்கள் உள்ளன.

மூன்று பெண்களின் மறக்க முடியாத பயணம்.
மூன்று பெண்களின் மறக்க முடியாத பயணம். - படம்: இணையம்

மாடர்ன் லவ்: சென்னை

ஆறு வெவ்வேறு இயக்குநர்களால் படைக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு, சென்னையில் நடக்கும் ஆறு வெவ்வேறு காதல் கதைகளைக் கொண்டது. வயது, வாழ்க்கைச் சூழல் என வேறுபட்ட மனிதர்களின் காதல் வாழ்வைச் சொல்லும் இந்தத் தொடர் விடுமுறையில் பார்க்க நல்ல தேர்வு.

ஒரே கருத்தின்கீழ் பல சிறு கதைகளை தைத்து ஒரே தொடராக வடிவமைக்கும் போக்கும் பிரபலமடைந்து வருகிறது.
ஒரே கருத்தின்கீழ் பல சிறு கதைகளை தைத்து ஒரே தொடராக வடிவமைக்கும் போக்கும் பிரபலமடைந்து வருகிறது. - படம்: இணையம்

மத்தகம்

அதர்வா முரளி, மணிகண்டன் என இளையர்களிடையே பிரபலமான பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த இந்தத் தொடரை ‘கிடாரி’ பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.

ஒரே இரவில் நடக்கும் தீவிரமான இக்கதை பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதா பட்டாளம் சேகரை, துணைக்கு காவல் ஆணையர் அஷ்வத் கைது செய்தாரா எனும் ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐந்து பாகங்கள் வெளிவந்து கவனத்தை ஈர்த்துள்ள இந்தத் தொடர், விறுவிறுப்பான கதையை விரும்பும் ரசிகர்களுக்கு நல்ல தேர்வு.

சென்னையின் சில பகுதிகளை மையமாகக் கொண்டு உருவான கதை மத்தகம்.
சென்னையின் சில பகுதிகளை மையமாகக் கொண்டு உருவான கதை மத்தகம். - படம்: இணையம்

செங்களம்

தமிழ்நாட்டின் விருதுநகர் பகுதியில் தலைமுறை தலைமுறையாக நகராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று வரும் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களும் பதவிச் சண்டையும் கலந்த அரசியல் தொடர் இது.

கலையரசன், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் தொடர், நகைச்சுவை, சண்டை, உணர்ச்சிபூர்வமான காட்சிகள் என அனைத்தும் உள்ளடக்கிய ஒரு முழுத் தொகுப்பு.

அரசியல், பதவி, அதிகாரம் என பல கோணங்களுடன், விடையில்லாக் கேள்விகளுடன் முடிந்திருக்கும் இத்தொடரின் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல், பதவி, அதிகாரம் என பல கோணங்களுடன், விடையில்லாக் கேள்விகளுடன் முடிந்திருக்கும் இத்தொடரின் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இணையம்

ஒரு கோடை மர்டர் மிஸ்டரி

அழகிய மலை நகரம் ஒன்றில் நடக்கும் இந்த கதை, காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்படும் பள்ளி மாணவி தாராவின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கட்டவிழ்க்க முயலும் வியோம் எனும் கூச்ச சுபாவமுள்ள சக மாணவனைச் சுற்றி நடக்கிறது.

பள்ளிச் சூழல், நவீன மாணவர்களின் உணர்வுகள் என பலவற்றையும் படம்பிடித்துக்காட்டும் இந்த தொடர் விடுமுறையில் பார்க்க ஒரு வித்தியாசமான தேர்வு.

எதிர்பாரா திருப்பங்களுடன் பள்ளி மாணவர்கள் துப்பறியும் புதுமையான புலனாய்வுத் தொடர் இது.
எதிர்பாரா திருப்பங்களுடன் பள்ளி மாணவர்கள் துப்பறியும் புதுமையான புலனாய்வுத் தொடர் இது. - படம்: இணையம்

மத்தகம் பாகம் -2

விறுவிறுப்பாக இருந்த மத்தகம் தொடரின் இரண்டாம் பாகமும் வெளியாகி இத்துடன் இந்த தொடர் முடிந்திருக்கிறது.

நிழல் தாதா பட்டாளம் சேகரின் பிறந்தநாள் கொண்டாட்டம், அதன் பின்னாலிருக்கும் சதி, அவற்றைப் பின்தொடர்ந்த காவல் அதிகாரி அஸ்வத் தலைமையிலான காவல் படை அவர்களை பிடித்தார் என்பதை சுற்றி பின்னப்பட்ட கதை.

முதல் பாகத்தில் வெளிச்சம் பெறாத பல கதாபாத்திரங்களுக்கு மெருகேற்றி, சிலபல திருப்பங்களோடு பின்னப்பட்ட கதைக்களம். ‘குற்றம் - நடந்தது என்ன’ பாணி பட ரசிகர்களுக்கு நல்ல தேர்வு.

ரசிகர்களிடையே பெருவரவேற்பைப் பெற்ற மத்தகம் தொடரின் இரண்டாம் பாகம் மூன்று மாதங்களுக்குப் பின்னர் வெளியானது.
ரசிகர்களிடையே பெருவரவேற்பைப் பெற்ற மத்தகம் தொடரின் இரண்டாம் பாகம் மூன்று மாதங்களுக்குப் பின்னர் வெளியானது. - படம்: இணையம்

குமாரி ஸ்ரீமதி

தன் தாத்தாவின் பூர்வீக வீட்டை விற்க முற்படும் தந்தைவழி சகோதரர்களின் முன்னெடுப்பைத் தகர்த்து, சுற்றி இருப்பவர்களின் உதவியுடன், பணம் சம்பாதித்து வீட்டை மீட்கப் போராடும் இளம் பெண்ணின் கதை, நித்யா மேனனின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குமாரி ஸ்ரீமதி’.

தாத்தாவின் சத்தியத்தை காப்பாற்றப் போராடும் பேத்தி, 30களை எட்டிய மகள் திருமணம் செய்யாமல் இருப்பதைக் கண்டு வருந்தும் அம்மா, பேத்தி என்ன செய்தாலும் உடனிருக்கும் பாட்டி, ஒருதலைக் காதலை மனத்தோடு வைத்து பயணம் செய்யும் நண்பன் என உணர்ச்சிபூர்வமான கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் கொண்ட இந்தத் தொடரை நகைச்சுவையாகவும் படைத்திருக்கிறார் இயக்குநர்.

பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தொடர் குடும்பத்துடன் கண்டுகளிக்க நல்ல தேர்வு.

திருமணமாகாத பெண், முன்னேற்றம் இல்லாத வேலை, செயலிழந்த குடும்பம், குறிக்கோள் என பல பரிமாணங்களில் நகர்கிறது ‘குமாரி ஸ்ரீமதி’.
திருமணமாகாத பெண், முன்னேற்றம் இல்லாத வேலை, செயலிழந்த குடும்பம், குறிக்கோள் என பல பரிமாணங்களில் நகர்கிறது ‘குமாரி ஸ்ரீமதி’. - படம்: இணையம்

பானி பூரி

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பானி பூரி’ குறுந்தொடர், நான்கு ஆண்டுகளாகக் காதலிக்கும் இணையரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

குறிக்கோளுடன் இயங்கும் பெண், திருமணமானபின் கணவன் மனைவி சந்திக்கும் இயல்பான சவால்கள் என தற்கால மனநிலையை வெளிப்படுத்துவதோடு, நகைச்சுவை கலந்தும் படைத்திருக்கிறார் இயக்குநர்.

இயல்பான கதை ஓட்டத்துடன் ஓர் அழகான காதலை சொல்லும் குறுந்தொடர்.
இயல்பான கதை ஓட்டத்துடன் ஓர் அழகான காதலை சொல்லும் குறுந்தொடர். - படம்: இணையம்
குறிப்புச் சொற்கள்