தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீக்கியர்களின் பண்பாட்டுக் கூறுகளை விவரிக்கும் நிகழ்ச்சி

2 mins read
21affcc7-39fc-436c-877b-339f9c7b4960
பிற இனத்தாருக்கும் சிங்கப்பூர் சீக்கியர்கள் பற்றித் தெரியப்படுத்தும் நிகழ்ச்சி, நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16ஆம் மாடி ‘போட்’ அறையில் நடைபெறும்.  - படம்: சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

பல்லின நாடாகிய சிங்கப்பூரின் அடையாளத்தை முன்வைக்கும் வகையில் இந்தியர்களின் ஒரு முக்கியப் பிரிவான சீக்கியர்களைப் பற்றிய நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16ஆம் மாடி ‘போட்’ அறையில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் கல்சா சங்கம், சீக்கிய ஆலோக வாரியம், இளம் சீக்கியர் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

“சீக்கியர்களின் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியல் அம்சங்களையும் பிற இந்தியர்களுக்கு மட்டுமல்லாது, பிற இனத்தவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம்,” என்கிறார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் துணைத் தலைமை நிர்வாகியுமான டாக்டர் இளவழகன் முருகன்.

“சீக்கியர்கள் என்றால் யார்? சீக்கியக் கோவில்களின் நடைமுறை என்ன? ‘லங்கார்’ எனப்படும் சீக்கிய சமூக உணவுப் படைப்பின்பின் உள்ள சித்தாந்தம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்நிகழ்ச்சி விடை தரும்,” என்கிறார் சிங்கப்பூர் கல்சா சங்கத் தலைவர் ஹர்னாய்க் சிங்.

சிறப்புரை, கருத்தாடல் என செவிக்கு உணவும், கலாசாரக் கூறுகளின் கண்காட்சி, நடனங்கள் என்று விழிக்கு உணவும், இவையுடன் சுவையான தேநீர் மற்றும் இரவு விருந்தும் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

நிகழ்ச்சிக்குப் பதிவுசெய்ய tinyurl.com/Singapore-Sikhs

அனுமதி இலவசம்.

சீக்கியர்களைப் பற்றி...

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அன்றிலிருந்து இன்றுவரை சீக்கியர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர்.

எதற்கும் அஞ்சாத ராணுவ வீரர்களாக, காவலர்களாக நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பைச் சுமந்ததோடு, வணிகர்களாக, வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக நாட்டின் பொருளியலுக்கும் பெரும் துணைபுரிந்தனர்.

இன்று பல துறைகளிலும் சீக்கியர்கள் பணியாற்றி சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து பாடுபடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்